

நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்களா? அதில் பாட்டும் சினிமாவும் ஓடிக்கொண்டே இருக்கிறதா? அது எவ்வளவு மின்சாரத்தைக் குடிக்கிறது என்று தெரியுமா?
தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்த உலகை ஆட்சி செய்து வருவதாகப் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால், இந்தத் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மட்டும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு என்ன தெரியுமா? 1985இல் ஒட்டுமொத்த உலகமும் பயன்படுத்திவந்த மின்சாரத்தின் அளவை, இந்த நவீனத் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மட்டும் இன்றைக்குப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இதற்கே ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். டிஜிட்டல் பவர் என்ற சர்வதேசத் தொழில்நுட்பக் கன்சல்டன்சியின் தலைவர் மார்க் பி. மில்ஸ் கூறுவது இன்னும் பயங்கரமாக இருக்கிறது.
ஓராண்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, சராசரியாக ஒரு ஃபிரிட்ஜ் பயன்படுத்தும் அளவைவிட அதிகமாம். ஸ்மார்ட் போனை ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், நாம் வீணடிக்கும் மின்சாரத்தின் அளவு தெரியும்.