Published : 22 Oct 2013 04:28 PM
Last Updated : 22 Oct 2013 04:28 PM

காகிதம் காப்போம்!

ஒரு நாளில் எவ்வளவு வீணடிக்கிறோம் என்பதை உணராமலேயே நாம் கழிவாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்: காகிதம்.

நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த நாளிதழ், குறிப்பு எழுதப் பயன்படுத்தும் சிறு நோட்டு, உங்கள் மகனோ, மகளோ பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நோட்டுப் புத்தகம், அலுவலகத்தில் நாம் பயன்படுத்தும் கோப்புகள்... இவை அனைத்துமே காகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை.

உலகெங்கும் காகிதப் பயன்பாடு ஆண்டுதோறும் 20 % அதிகரித்துவருகிறது. அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக தினசரி 50 ஷீட்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காகிதப் பயன்பாடு இப்படி கண்மண் தெரியாமல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், கணினிகளும் நகலெடுக்கும் கருவிகளும் அதிகரித்திருப்பதுதான்.

இதில் விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் காகிதத்தைவிட, நாம் உருவாக்கும் காகிதக் கழிவுதான் அதிகம். ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் கழிவாக மாறும் காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ.

மரங்களின் அழிவு

இந்த இடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், 2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை.

அதேநேரம் ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் அழிவது குறையும் (17 முதிர்ந்த மரங்கள்), தண்ணீர் பயன்பாடு குறையும் (30,000 லிட்டர்), ஆற்றல் தேவை குறையும் (3 படுக்கையறை கொண்ட வீட்டுக்கு ஆண்டு முழுவதும் தேவைப்படும் மின்சாரம்), மாசுபாடு குறையும் (95 % காற்று மாசுபாடு), காகிதக் குப்பையும் குறையும்.

என்ன செய்யலாம்?

சரி, காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய முடியும்?

காகிதப் பயன்பாட்டைக் கூடிய மட்டும் குறைக்க வேண்டும். முடிந்தவரை மறுபடி பயன்படுத்துதல் அல்லது மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு ஷீட் காகிதத்தை நீங்கள் சேமித்தால், ஓர் ஆண்டுக்கு 40,000 மரங்களைக் காப்பாற்ற முடியும்.

ஒவ்வொரு தேவைக்கும் புதிய காகிதத்தை எடுக்காமல், அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் பின் பக்கத்தில் எழுதலாம்.

நமக்கு வரும் அஞ்சல் உறைகளில் பழைய முகவரிகளின் மேல் புதிய முகவரிகளை எழுதி ஒட்டியோ, அல்லது உறையை உட்புறமாகத் திருப்பியோ மீண்டும் பயன்படுத்தலாம்.

அலுவலகத்தில் தகவல்களை அனைவருக்கும் தெரிவிப்பதற்கு மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். அல்லது தகவல் பலகையில் ஒரே ஒரு அச்சிடப்பட்ட அறிக்கையை மாட்டலாம்.

வங்கிக் கணக்கு அறிக்கைகள், மற்ற மாதாந்திர ரசீதுகளை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லலாம்.

இப்போது இந்திய ரயில்வே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளைக் கேட்பதில்லை. நமது கைபேசிகளில் காட்டினாலே போதும் என்கிறது. எனவே, ரயில் டிக்கெட்டுகளை அச்சு எடுக்காதீர்கள்.

அதேபோல, வங்கி ஏ.டி.எம்.களிலும் அச்சு ரசீது தேவையா என்று ஏ.டி.எம். இயந்திரம் கேட்கிறது. அப்போது நாம் தேவையில்லை என்று சொல்லலாம். திரையிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

வீட்டில் கணினி அச்சு இயந்திரத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் அச்சு எடுப்பதைத் தவிர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x