

வட அமெரிக்காவில் காணப்படும் மொனார்க் வகையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் அழிந்துவரும் நிலையிலிருந்து தற்போது மீண்டு வருகின்றன. இந்த வண்ணத்துப்பூச்சிகள் கனடா, வடஅமெரிக்கப் பகுதி களிலிருந்து குளிர்காலத்தில் மத்திய மெக்சிகோ பகுதிக்குப் பயணம் செய்கின்றன. கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான 3,60௦ கிலோ மீட்டர் தொலைவை இந்த வகை வண்ணத்துப் பூச்சிகள் பறந்தே கடப்பது, ஆச்சரியமானது.
1990- களின் மத்தியில் 100 கோடி வண்ணத்துப்பூச்சிகள் கனடாவிலிருந்து மெக்சிகோவுக்குக் குளிர்காலத்தைக் கழிக்கப் பயணம் செய்தன. ஆனால், 2013-ல் இந்த எண்ணிக்கை மூன்று கோடியாகக் குறைந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்த வண்ணத்துப்பூச்சிகள் மத்திய மெக்சிகோவில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை கனடாவிலிருந்து மெக்சிகோவுக்குப் பயணம் செய்ய ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகின்றன.
கடந்த காலத்தில் அவை செல்லும் பாதைகளில் உள்ள வாழிடங்கள் பூச்சிக் கொல்லிகளால் அழிந்து போயின. காடுகளும் குறைந்து வந்தன. குறிப்பாக, அவை முட்டையிடுவதற்கு ஏற்ற ஒரு வகை பால் சுரக்கும் தாவரம் அழிந்து போனதாலும், இந்த வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது.
தற்போது அமெரிக்க விவசாயிகள் இந்த வகைத் தாவரங்களை வளர்த்துவருகிறார்கள். அதே நேரம் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டும் வருகிறார்கள். இந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவு தரக்கூடிய தாவரங்களைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வளர்த்து, அவற்றுக்கு உதவிவருகிறார்கள். கால நிலையும் அவற்றுக்கு உகந்ததாக மாறியுள்ளது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்க நாடுகள் மொனார்க் வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவை செல்லும் வழித்தடங்களில் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. மெக்சிகோ வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாகக் காடுகளை அழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற வண்ணத்துப்பூச்சிகளோடு இவையும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவிசெய்கின்றன. விவசாயிகள் இதனால் பயன்பெறுகிறார்கள். கடந்த 20 வருடங்களில் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தன. தற்பொழுது இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.