

வெப்ப மண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள கடற்கரைச் சமவெளி, தீவுக் கூட்டங்கள், மழையும் வெயிலும் குறை வில்லாத நிலப்பரப்பு உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கே தென்னை மரங்களையும் காணமுடியும். தென்னையின் பயன்பாட்டைப் பற்றி விரிவான விளக்கம் தேவையில்லை. ஏனென்றால் தொன்றுதொட்டு அது நமது உணவு, கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது.
ஆனால், இக்கலாச்சாரப் பிணைப்பின் உச்சநிலையை அந்தமான் நிகோபார் தீவுகளில் காணலாம். இத்தீவுகளின் முகவரியாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் ஆணிவேராகவும் தென்னை இருக்கிறது. பழங்குடி மக்களின் வாழ்வும் வரலாறும் தென்னையைச் சுற்றியே அமைந்துள்ளன. இதில், இத்தீவுகளில் பரவிக் கிடக்கும் தென்னையின் பன்முகத்தன்மையும் மற்றொரு சிறப்பம்சம்.
முழுமையடையாத தொழில் ஆற்றல்
இந்தியாவில் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் தென்னை மர வளர்ப்பைச் சார்ந்து வாழ்கிறார்கள். வேளாண் ஆராய்ச்சி மூலம் நெட்டை, குட்டை, நடுத்தர உயரம் கொண்ட தென்னை வகைகளும்; இளநீருக்கென, சமையலுக்கெனத் தனித்தனி ரகங்களும், அதிக எண்ணெய் தரவல்ல கொப்பரை ரகங்களும் பயனுள்ள விளைவாகக் கிடைத்துள்ளன.
பிலிப்பைன்ஸ், இலங்கை, பாலினேசியா, மேற்கிந்தியத் தீவுகளில் தென்னை சார்ந்த தொழில்கள் முதன்மையானவை. ஆனால், வேளாண் நிலங்களில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பரப்பில் தென்னை மரங்கள் இருக்கும்போதிலும், நிகோபார் தீவுகளில் தென்னை சார்ந்த தொழில்கள் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை. மற்றொரு பார்வையில் சொல்வதென்றால் தென்னை சார்ந்த தொழிலின் ஆற்றல், இத்தீவுகளில் இன்னும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. இது வேளாண் ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் முன்னிற்கும் ஒரு பெரும் சவாலாகும்.
(அடுத்த வாரம்: 900 மி.லி. இளநீர் தரும் அந்தமான் தென்னை)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com