மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கெடு

மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கெடு
Updated on
1 min read

சென்னைத் துறைமுகத்தில் இருந்து தண்டையார்பேட்டை உட்பட வட சென்னையின் முக்கியப் பகுதிகளின் வழியாக எண்ணெய்க் குழாய்கள் மூலமாக மணலி பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாய்களில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சென்னை ஐ.ஐ.டி. நிறுவன பேராசிரியர்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனையில் ஈடுபட்டது. அப்போது நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பாதிப்புக்குக் காரணமான எண்ணெய் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது வாரியம். அதனைத் தொடர்ந்து மூன்று எண்ணெய்க் குழாய்கள் மூடப்பட்டன.

இந்த எண்ணெய்க் கசிவு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வழக்கு ஒன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாயம் இந்தக் கசிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அப்படியொரு அறிக்கையை வாரியம் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் வெள்ளியன்று இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த அமர்வு, 'இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் இதில் நடவடிக்கை எடுக்க தாமதிக்கக் கூடாது. எனவே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இந்த மாதம் 28ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

மேலும், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் செயலர், மத்திய வனம் மற்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலர், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் சென்னை பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், தமிழக அரசின் முதன்மை செயலர் ஆகியோர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்குள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் இந்த எண்ணெய்க் கசிவு தொடர்பாக குறுகிய கால மற்றும் நீண்ட கால நிவாரணப் பணிகள் குறித்த திட்டங்களைத் தீட்ட வேண்டும். இந்த சந்திப்பு குறித்த அறிக்கையையும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in