

இலைகள்தான் இந்த உலகுக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருக்கின்றன? தாவரங்களுக்கும் மரங்களுக்கும் மட்டுமல்ல நமக்கும்கூட. இலைகள் சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரித்துத் தாவரத்தை வளர்க்கின்றன, கூடவே நாம் சுவாசிக்கும் உயிர்மூச்சையும் தருகின்றன. இந்த வேலையைச் செய்வது மரம்தான் என நாம் பொதுவாகச் சொன்னாலும், உண்மையில் அதைச் செய்வது இலைகள் தானே?
பெரும்பாலும் மரங்கள் அடையாளம் காணப்படுவதே அவற்றின் இலைகளை வைத்துத் தானே? இலைகளை மரங்களின் முகங்கள் எனலாமா? மலர்கள் பூப்பது பருவ காலங்களில். ஆனால், மரத்தில் பெரும்பாலான காலம் இருப்பவை இலைகள் தானே? எனினும், சில மரங்கள் சில வேளைகளில் இலைகளின்றி இருக்கின்றனவே? இலையில்லா மரத்தைப் பார்க்கும்போது, அது தன் ஆடையை இழந்தது போல் தோற்றமளிக்கிறதல்லவா? ஆக, இலையை மரத்தின் ஆடை எனலாமா? பனை, தென்னை போன்ற கிளையில்லா மரங்களில் இலைகள் உச்சியில் இருப்பதால்தான் அவற்றை அம்மரங்களின் தலை என்கிறோமா?
விதைக்குள் உறங்கும் மரம்
இலையானது ஒரு தாவரத்தின் எல்லா நிலைகளிலும் கூடவே இருக்கிறது. உயர்ந்தோங்கி வானை முட்டும் மரங்கள் விதைகளிலிருந்து தானே உருவாகின்றன. அந்த விதை எனும் கருவறையிலும் இலைகள் இருக்கின்றன. விதையின் உள்ளிருக்கும் இலையின் எண்ணிக்கையை வைத்துத் தானே தாவரங்களைத் தாவரவியலாளர்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள், இரு வித்திலைத் தாவரங்கள் என வகைப்படுத்துகிறார்கள்?
மண்ணை முட்டி மேலே வரும் விதையைப் பிளந்து, சூரிய ஒளியில் சுவாசிக்க ஆரம்பிக்கும் அந்தச் சிறிய இளந்தளிர் வளர்ந்து கொழுந்தாகி, பின் முதிர்ந்த இலையாகிக் கடைசியில் பழுத்த இலை கீழே விழுந்து சருகாகிறது. சருகுகளை இறந்து போன இலைகள் எனச் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. பசுங்கணிகங்களில் (குளோரோபில் - choloryphyll எனும் நிறமி) ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் இலை தனது இயல்பான பச்சை நிறத்தை இழந்து பழுத்த இலையாகிறது.
அதற்கு முன் இலையிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் மரக்கிளையானது உறிஞ்சிக்கொண்டு இலையுடனான தொடர்பைத் தற்காலிகமாகத் துண்டித்துக் கொள்கிறது. எனினும் இலைச்சருகு மரத்தின் ஓர் அங்கம் தான். கீழே விழுந்தாலும் அது மரத்துடனான உறவைத் துண்டித்துக் கொள்வதில்லை. விழுந்த இலை மட்கி உரமாகிறது. மண்ணிலிருக்கும் அவ்வுரத்தையே மரத்தின் வேர்கள் ஈர்த்துக்கொண்டு வளர்கின்றன.
எத்தனை வடிவங்கள்?
இலைகளில்தான் எத்தனை வடிவங்கள். இதய வடிவப் பூவரசு, சிறுநீரக வடிவ வல்லாரை, முட்டை வடிவ ஆலிலை, நுரையீரல் வடிவ மந்தாரை. நம் நாட்டுக் காடுகளில் எருமைநாக்கு எனும் மரம் உண்டு. இம்மரத்தின் இலை நீளமான நாக்கைப் போலிருப்பதாலேயே இப்பெயர். இது போல் இலையின் வடிவத்தை வைத்தே பெயர் பெற்ற தாவரங்கள் ஏராளம்.
ஒரு மரத்தில் இருக்கும் அனைத்து இலைகளும் சூரிய ஒளிக்காகத் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளாமலிருக்க எதிரெதிரே, பக்கவாட்டில், வட்ட வடிவில் தனியிலை மற்றும் கூட்டிலை எனப் பல வித வடிவங்களில் அமைந்துள்ளன. கடுங்குளிரைத் தாங்க ஊசி போன்ற இலைகளையும், வறண்ட பிரதேசங்களில் சின்னஞ்சிறு இலைகளையும், பாலைவனங்களில் நீரைச் சேமித்து வைத்துக்கொண்டு தடித்த இலையாகவும், நீரில் மிதக்கும்போது நீர் ஒட்டாமல் மெழுகு போன்ற பூச்சு கொண்ட மேற்புறத்துடனும், நிழலான பகுதியில் சூரிய ஒளியைப் பெற்று வளர அகன்ற இலையையும், எப்போதும் மழை பெய்யும் மழைக்காட்டு பகுதியில் இலைகளில் நீர் தங்காமல் வடிந்துகொண்டே இருக்கக் கூரிய முனையைக் கொண்டும் (drip tip) தாம் வளரும் இடத்துக்குத் தகுந்தவாறு இலைகள் தகவமைத்துக் கொள்கின்றன.
எத்தனை உதவிகள்?
சில வகை இலைகள் உணவு உற்பத்தி மட்டுமே செய்யாமல் தானுள்ள தாவரத்துக்கு வேறு பல வகைகளிலும் உதவி புரிகின்றன. செங்காந்தள் இலையின் நுனி, அக்கொடி பற்றிக்கொண்டு செல்ல ஒரு பற்றுக் கம்பியாக மாறியுள்ளது. தொட்டாற்சுருங்கியின் இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள் கடிக்க முடியாதபடி, இலைகள் தானே மடங்கி அத்தாவரத்தைப் பாதுகாக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் மழைக்காடுகளில் யானை விரட்டி (elephant nettle) எனும் சிறு மரம் உண்டு. இது நம் தோலின் மேல் பட்டால் உடனே அந்த இடம் எரிச்சல் எடுக்கும். பின்னர்க் காய்ச்சல்கூட வரலாம். காரணம் இந்த இலைகளில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூவிகள் போன்ற கூரிய முட்களும், அதிலுள்ள நஞ்சும்தான். இதனால்தான் எந்தத் தாவர உண்ணியும் யானைவிரட்டியை நெருங்குவதில்லை.
இலைகள் அது இருக்கும் தாவரத்துக்கு மட்டுமே உதவுவதில்லை. பல உயிரினங்களுக்கு உணவாகவும், வேறு பல விதங்களிலும் உதவுகின்றன. பல வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட இலைகளில்தான் முட்டையிடுகின்றன. ஏனெனில், அவற்றின் புழுக்கள் வளர்ந்து அந்த இலைகளைத்தான் உணவாகக் கொள்ள முடியும். இரண்டு இலைகளைச் சேர்த்துத் தைத்தே தையல் குருவி (Tailor bird) கூட்டை உருவாக்குகிறது. எதிரி உயிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இலையைப் போலவே தோற்றம் கொண்டு உருமறைந்து வாழ்பவை இலைப்பூச்சி (Leaf insect), இலை வெட்டுக்கிளி (Katydid).
இலைச் சருகைப் போலவே தோற்றம் கொண்டது சருகு வண்ணத்துப் பூச்சி (Oak leaf butterfly). உலகிலேயே கூடு கட்டி முட்டையிடும் ஒரே பாம்பு, நம் காட்டுப் பகுதிகளில் தென்படும் கருநாகம் (Cobra). பெண் கருநாகம், தனது நீண்ட உடலால், காட்டின் தரைப்பகுதியில் இருக்கும் இலைச் சருகுகளை ஓரிடத்தில் குவித்து, மழைநீர் புகா வண்ணம் அழுத்தி இலைகளால் ஆன கூட்டினுள் முட்டையிடுகிறது.
நம் வாழ்வில்
இலைகள் நம் வாழ்விலும் இரண்டறக் கலந்தவை. இலைகள் இல்லாத வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மனிதக் குலத்தின் முதல் ஆடை இலைகள்தானே! தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம்.
வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலை, தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, நம் கைகளைச் சிவக்க வைக்க மருதாணி, கூந்தல் வளரக் கையாந்தகரை, நாம் உண்ணும் எண்ணிலடங்காக் கீரை வகைகள், குழந்தைகள் பீப்பீ செய்து விளையாடப் பூவரச இலை என நம் வாழ்வின் பல நிலைகளில் ஏதோ ஒரு வகையில் இலைகளும் நம் கூடவே பயணிக்கின்றன இலைகள்.
எத்தனை இலைகள் இருந்தாலும் மூன்று வகை இலைகள் இல்லாமல், நம்மில் பலருக்கு எதுவுமே ஓடாது. தேயிலை, வெற்றிலை, புகையிலைதான் அவை.
மரங்களைப் பற்றியும் பூக்களைப் பற்றியும் பல மொழிகளில் கவிதைகள் எழுதிய புலவர்கள் இலையைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. “இலைகள் தான் எல்லாமே” என்றார் ஜெர்மானிய அறிஞர் யோஹான் வொல்ப்கெங் வான்கோதே (Johann Wolfgang vonGoethe). ஒரு நாளில் நாம் உபயோகிக்கும் இலைகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள், அவர் சொன்னது போல் இலைகள் இல்லாமல் எதுவுமே இல்லை என்பது புரியும்.
இளந்தளிர்கள் சிவப்பாக இருப்பது ஏன்?
கிளையில் துளிர்க்கும் சிறிய இலை, சில மரங்களில் சிவப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். மாவிலை ஓர் உதாரணம். மழைக்காட்டில் இதுபோலப் பல மரங்களைக் காணலாம். இலைக்குப் பச்சை நிறத்தை அளிப்பவை பசுங்கணிகங்கள் (குளோரோபில் - choloryphyll எனும் நிறமி). இலைகள் சிவப்பாக இருப்பதற்கான காரணம் ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமியின் காரணமாகவே. இளந்தளிர்களில் இவை அதிகம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்:
1. இளந்தளிர்களைப் பூஞ்சைகள் தாக்காமல் இருக்க
2. புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க
3. சில தாவரஉண்ணிகளிடமிருந்து இளந்தளிர்களைப் பாதுகாக்க.
மூன்றாவது காரணம் சுவாரசியமானது, பரவலாகப் பலரால் ஒத்துக்கொள்ளப்பட்டது. ஒரு தாவரத்தின் முக்கியமான அங்கம் இலை. தாவரங்களின் உணவு உற்பத்திக்கு இன்றியமையாதவை இலைகள். அதைப் பாதுகாக்க ஒவ்வொரு தாவரமும் பல்வேறு வழிகளைக் கையாள வேண்டியிருக்கிறது. எனினும் இயற்கையில், இலைகளுக்குப் பல வழிகளில் சோதனை வந்துகொண்டேதான் இருக்கும். இலைகளையே முதன்மை உணவாகக் கொண்ட உயிரினங்கள் ஏராளம்.
சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சியின் புழுக்கள், உருவில் பெரிய யானை, மந்திகள் (Langurs), மான்கள் முதலான உயிரினங்கள் இலைகளையே உண்டு வாழ்கின்றன. முதிர்ந்த இலைகளில் சிலவற்றை அவற்றுக்கென ஒதுக்கினாலும்கூட, ஒரு தாவரம் புதிதாகத் தோற்றுவிக்கும் இளந்தளிர்களை அவை தாக்கினால் முழு தாவரமே பாதிப்படையக்கூடும். ஆகவே, இளந்தளிர்களைத் தாவரஉண்ணிகளிடம் இருந்து பாதுகாக்கவே, அவற்றைச் செந்நிறமாக்குகின்றன. ஏனெனில், சில தாவர உண்ணிகளின் கண்கள் சிவப்பு நிறத்தைக் காணும் திறனற்றவை.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org