Last Updated : 07 Jan, 2017 10:28 AM

 

Published : 07 Jan 2017 10:28 AM
Last Updated : 07 Jan 2017 10:28 AM

2016 - கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள்

கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள் பற்றி ஒரு பார்வை:

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு l ராமச்சந்திர குஹா
(தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)

வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துகளுக்காகவும் நன்றாக அறியப்படுபவர். அவர் மேற்கொண்ட உலகச் சுற்றுப்பயணங்கள், ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் இது. இந்தியச் சூழலுடன் உலகச் சூழலையும் பொருத்திப் பார்த்து அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆங்காங்கே, இடம்பெறும் காந்தியக் கருத்துகள் இன்றைய சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடியாக, அப்போதே காந்தி இருந்திருக்கிறார் என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன. முக்கியமான இந்த நூலை இன்னும் பொறுப்புடன் மொழிபெயர்த்திருக்கலாம்.

எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302தட்டான்கள், ஊசித்தட்டான்கள்: அறிமுகக் கையேடு l ப. ஜெகநாதன், ஆர். பானுமதி

தட்டான்களைப் பற்றிய உருப்படியான நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் நூல் இது. தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் தட்டான்கள்-ஊசித்தட்டான்களில் 73 வகைகளைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகிறது. அறிமுகப் பகுதியில் தட்டான்களின் உலகைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கையேட்டின் மிக முக்கியமான அம்சம், தட்டான்களின் ஒளிப்படங்கள் . அழகாகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் கையேடு இது.

க்ரியா, தொடர்புக்கு: 72999 05950

அறிவியல், ஜனநாயகம், இயற்கைச் சூழல் பாதுகாப்பு l மாதவ் காட்கில்
(தமிழில்: டாக்டர். ஜீவானந்தம்)

இந்தியாவின் பிரபல சுற்றுச்சூழல் அறிஞர்களுள் ஒருவரான மாதவ் காட்கில் எழுதியுள்ள புத்தகம். இந்திய இயற்கைச் சூழலை நமது அரசுகளும் பெருநிறுவனங்களும் குழிதோண்டிப் புதைத்துவிட்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து காட்கில் எழுதியிருக்கிறார். அறிவியல், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஒருங்கே அக்கறை கொண்டிருந்த நேருவின் லட்சியங்கள் கைவிடப்பட்டு, சுரண்டலை அடிப்படையாகக்கொண்ட தொழில் வளர்ச்சி மட்டுமே முன்னெடுக்கப்படுவதை காட்கில் தோலுரிக்கிறார்.

மெத்தா பதிப்பகம், தொடர்புக்கு: 90948 69175

சுற்றுச்சூழல் அரசியல் l த.வி.வெங்கடேஸ்வரன்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப் படுத்துவதற்காகச் சர்வதேச அளவில் சமீபத்தில் இடப்பட்ட ஒப்பந்தம், பாரிஸ் ஒப்பந்தம் எனப்படுகிறது. இதை இந்தியாவும் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உண்மையான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்ற விவாதத்தை முன்வைக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு 044-24332924

மண்ணின் மரங்கள் l கா.கார்த்திக்-தமிழ்தாசன்

கடந்த ஆண்டு தமிழகத்தைக் கடந்த 'வர்தா' புயல் நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்பித்துவிட்டுப் போயிருக்கிறது. 'இயல் மரங்கள்தான் நம் மண்ணின் மரங்கள். அயல் மரங்கள் மண்ணின் சுமைகள்!' என்பதே அது. புயலிலிருந்து நாம் மீள்வது ஒருபுறமிருக்க, இழந்த பசுமையை மீட்பது எப்படி என்பது குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், வெளியாகியிருக்கிறது 'மண்ணின் மரங்கள்' எனும் தொகுப்பு. கா.கார்த்திக், தமிழ்தாசன் ஆகியோர் தொகுத்த இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் மரங்கள் எப்படிப் பார்க்கப்பட்டன, மரங்கள் நடும்போது நாம் கவனிக்க வேண்டியவை, மரங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளன.

நாணல் நண்பர்கள், தொடர்புக்கு: 9942118080

சிவப்புப் பட்டியல் l சுப்ரபாரதிமணியன்

முன்பெல்லாம் ஓர் உயிரினம் அருகிப்போவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும். ஆனால், தற்போது சில ஆண்டுகளே போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பூமியைத் தின்று தீர்க்கும் மனிதர்களின் அகோரப் பசிதான் இதற்குக் காரணம். இந்தப் பசிக்கு இரையாகி, அழிவுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் உயிரினங்கள் இடம்பெறுவதுதான் ‘சிவப்புப் பட்டியல்’. அந்த வகையில் புலி, செந்நாய், ஆசிய யானை முதற்கொண்டு உலக அளவில் துருவக் கரடி, கோலா கரடி போன்றவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044-2624 1288.

சீமைக்கருவேலம் l ப. அருண்குமார்

ஏழை மக்களின் விறகுத் தேவைக்காகப் பரப்பப்பட்ட சீமைக்கருவேலம் இன்று எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது. தூரத்தில் பார்ப்பதற்குப் பசுமையாகக் காடு போல் இருக்கிறதே என்று பக்கத்தில் போய்ப் பார்த்தால், பெரும்பாலும் அது சீமைக்கருவேலக் காடாகவே இருக்கும். விறகுத் தேவையைத் தாண்டி இந்தத் தாவரம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அழிமானத்தைப் பற்றியும், இதன் பரவலைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அருண்குமார் இந்தச் சிறு நூலை எழுதியிருக்கிறார்.

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044- 2433 2924

தவளை:நெரிக்கப்பட்ட குரல் l கோவை சதாசிவம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்கூட பாரபட்சமான குரல்கள் சில நேரம் உரத்து எழுப்பப்படுகின்றன. புலி, சிட்டுக்குருவி போன்றவற்றுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தவளை போன்றவற்றுக்குக் கிடைப்பதில்லை. இயற்கையின் கண்ணியில் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் தவளை குறித்த அறிவியல் தகவல்கள், மண் சார்ந்த தகவல்கள் போன்றவற்றைத் தவளையே தன் வாயால் கூறுவதுபோல் சதாசிவம் இந்த நூலை எழுதியிருக்கிறார். சிறுவர்களை எளிதில் ஈர்க்கும் விதத்தில் இருப்பது, இந்தச் சிறு நூலின் சிறப்பு.

தடாகம், தொடர்புக்கு: 89399 67179

செர்னோபில் குரல்கள் l ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
(தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)

செர்னோபில் அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு இது. புலனாய்வுப் பத்திரிகையாளரான ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்சுக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு ஓர் அரிதான நிகழ்வாகும். செர்னோபில் அணுப் பேரழிவால் பாதிப்புக்குள்ளானவர்களைப் போய்ப் பார்த்து, அவர்களின் துயரக் கதைகளை இதழியல் எழுத்தாகப் பதிவுசெய்தவர் ஸ்வெட்லானா. புனைகதைகளுக்கு நிகராக அவரது எழுத்து புகழ்பெற்றது. செர்னோபில் குறித்த நூல்களில் இந்த நூலுக்கு முக்கிய இடம் உண்டு.

எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302

இயற்கை சுற்றுச்சூழல் ஆய்வுகள் l பா. ராம் மனோகர்

இலக்கியம், பள்ளிப் பாடங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் சுற்றுச்சூழல் எவ்விதம் இடம் பெற்றிருக்கிறது என்பது குறித்து சில கட்டுரைகள் இந்நூலில் உண்டு. பறவைத் தாத்தா சாலிம் அலியின் பங்களிப்பு பற்றியும் ஒரு கட்டுரை பேசுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பறவைகள்-தொகை கணக்கெடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொழில்நுட்பம் என்று பல விஷயங்களை நூலாசிரியர் விவாதித்திருக்கிறார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044-2624 1288.

கூண்டுக்கு வெளியே l டாக்டர். ந. பன்னீர்செல்வம்

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் மிக முக்கியமான வனவிலங்கு உயிரினப் பூங்காக்களில் காட்டுயிர் மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் ந.பன்னீர்செல்வம். தன் பணிக்காலத்தில் மனிதர்களை விட வனவிலங்குகளுடன்தான் அதிக நேரத்தைச் செலவிட்டவர் என்று சக அலுவலர்களால் குறிப்பிடப்படும் இவர், வன விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்த தன் அனுபவங்களை ‘கூண்டுக்கு வெளியே' என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். தன் அனுபவங்களை எழுதியவர், வன விலங்குகளுடன் விதவிதமான போஸ்களில் ஒளிப்படங்கள் எடுத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அந்திமழை, தொடர்புக்கு: 9443224834

பனை மரம் l இரா. பஞ்சவர்ணம்

தமிழகத் தாவரங்கள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவர் இரா. பஞ்சவர்ணம். ‘கற்பகத் தரு‘ என்ற பட்டத்துடன் அதிகப் பயன்களைத் தந்தாலும், அதிகம் கவனிக்கப்படாத பனை மரத்தைப் பற்றி, தமிழ்நாட்டு தாவரக் களஞ்சியம் புத்தக வரிசையில் தனிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

தாவரத் தகவல் மையம் வெளியீடு, தொடர்புக்கு: 98423 34123

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x