

நெல் சாகுபடிக்கு ஆற்று நீரை நம்பியிருந்தாலும் கரும்பு சாகுபடிக்கு இயற்கை உழவர் அருள்மொழி பெரிதும் நம்பி இருப்பது கிணற்றை மட்டுமே. ஏனென்றால், கரும்பு நீண்டகாலப் பயிர். அரசாலும் தனியார் ஆலைகளாலும் ஊக்குவிக்கப்படும் வணிகப் பயிர். உடனடியாக வங்கிக் கடன் கிடைக்கும். பயிர் பணமாக மாறும் வாய்ப்பும் அதிகம். அதிலும் இப்போது செலவு கூடிவருகிறது. அதனால் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.
ஒரு முறை நட்டுவிட்டு மீண்டும் மீண்டும் மறுதாம்பு (ratoon) முறையில் வளர்க்கும் வழியைப் பின்பற்றுகிறார். இப்போது மூன்றாம் முறை மறுதாம்புக்குச் சென்றுள்ளார். தொடர்ச்சியாகப் பத்து முறை தாண்டி விடுவேன் என்று உறுதிபடக் கூறுகிறார்.
இந்த விலை போதும்
இவருடைய நெல் சந்தைப்படுத்தும் முறை முற்றிலும் மாறுபட்டது. நெல்லை அரிசியாக மாற்றி கொடுக்கிறார். அப்படிச் செய்யும்போது இவரது அரிசியை வாங்கத் தயாராக 20 முதல் 30 குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அவர்களுக்கு அரிசியைக் கொடுத்துவருகிறார். பொன்னியைக் கிலோவுக்கு ரூ. 55 என்ற அளவிலும், சீரகச் சம்பாவைக் கிலோவுக்கு ரூ. 80 என்ற அளவிலும் விற்பனை செய்கிறார்.
இவரிடம் அரிசி வாங்குபவர்கள் எப்போதும் விலையைப் பற்றி வருத்தப்படுவதே இல்லை. இப்படியாக நம்பிக்கையான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார். அரிசி விற்பனையில் இவர் கூறிய மற்றொரு கருத்து வியப்பானது. 'எனக்கு இந்த விலையே போதும், இதற்கு மேல் தேவையில்லை' என்கிறார். 'போதுமென்ற மனத்தை' ஓர் இயற்கைவழி உழவரைத் தவிர வேறு எவரிடம் எதிர்பார்க்க முடியும்?
கொஞ்சம் கணக்கு
இவரது பண்ணை வரவு செலவு கணக்கைப் பார்த்தால் வியப்பாகவும் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்துக்கு எவ்வளவு பேருதவியாக உள்ளது என்றும் புரியும். இதை நமது ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஏன் தொடர்ந்து பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
நெல்லுக்காகச் சராசரி செலவு = ஏக்கருக்கு ரூ. 25,000
15 ஏக்கருக்கு = ரூ. 3,75,000.
வரவு = 25 மூட்டை (ஒரு மூட்டையில் 75 கிலோ) = 1875 x 15 ஏக்கர் = 28,125 கிலோ நெல்.
28,125 கிலோ நெல்லுக்குக் கிடைக்கும் அரிசி 16,875 கிலோ.
இந்த அரிசியை ரூ.55 என்ற விலையில் விற்பனை செய்கிறார். ஆக ரூ. 9,28,125 என்ற அளவில் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. இதன்மூலம் மற்றப் பண்ணைச் செலவுகள், அவரது மேலாண்மைச் சம்பளம் ஆகியவற்றை நிறைவு செய்துகொள்கிறார்.
இது தவிரக் கரும்பில் இடுபொருளை அவர் விரைந்து குறைத்துவருகிறார். அதன்மூலமும் வருமானம் ஈட்ட முடிகிறது.
உழைப்பு மட்டுமே மூலதனம்
இவரது பண்ணை முதலீடு என்றால் 30 ஏக்கருக்குமான நில மதிப்பைக் கழித்துவிடுவோம். ஏனெனில் இது இடத்துக்கு இடம் மாறுபடும். அதுதவிர இவர் ஆண்டுக்குச் செய்யும் வரவு செலவு என்பது ரூ. 2,25,000 வரை ஆகிறது.
இவர் அதிக அளவாக நான்கு மாதங்களில் நெல்லில் இருந்து பெறும் வருமானம் ஏறத்தாழ ரூ. 10 லட்சம். ஆனால், கரும்பில் 10 முதல் 11 மாதங்கள்வரை பாடுபட்டு வரும் வருமானம் ஏறத்தாழ ரூ. 10 லட்சம்தான். இதற்கான நீர் விரயம் தனிச் செலவு. இந்த விளைபொருளின் பயன்பாடும் சமூக வளர்ச்சிக்கு உயர்வைத் தருவதில்லை. பல நேரம் மது உற்பத்திக்குப் பயன்படுகிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் 20 லட்ச ரூபாய் முதலீட்டில் (நிலமதிப்பைக் கழித்து) 13 பேருக்கு வேலை தருகிறார். அவர்களுக்கு எந்தப் பொறியியல் படிப்போ அதற்கான முதலீடோ தேவையில்லை. சமூகமே உழைப்பைக் கற்றுத் தருகிறது. இவரது பண்ணையில் ஆண்டுதோறும் சராசரியாக 13 ஆட்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பெறும் ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை. இவர்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ளவர்கள்.
முரண்பாடு
நமது ஆட்சியாளர்கள் ரூ. 12 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு 12 லட்சம் பேருக்கு வேலை தருவதாகச் சொல்கிறார்கள். இதனால் ஏற்படப் போகும் சூழலியல் கேடுகளைப் பற்றி சொல்ல முடியாது. ஆக, ஒரு கோடி ரூபாயில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு. நமது அருள்மொழி மாதிரியில் ஒன்றரை லட்சம் ரூபாயில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு. அதாவது ஏறத்தாழ 100 மடங்கு குறைவான முதலீட்டில் வேலை தரும் இயற்கைவழி வேளாண்மையைப் புறந்தள்ளும் நமது ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது?
ஒருபுறம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று புலம்புகிறோம். மறுபுறம் வேளாண்மைக்குப் படித்த இளைஞர்கள் வருவது அரிதாக உள்ளது. இந்த முரண்பாடு கூடவா நம்மை ஆள்பவர்களுக்குத் தெரியவில்லை? இதற்கு எதற்கு அந்நிய நேரடி முதலீடு, அருள்மொழி மாதிரி உழவர்கள் போதுமே!
(அடுத்த வாரம்: ஒன்றும் செய்யா வேளாண்மை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்.
தொடர்புக்கு:>adisilmail@gmail.com
அருள்மொழி தொடர்புக்கு: 94873 81043