Published : 17 Sep 2016 12:07 PM
Last Updated : 17 Sep 2016 12:07 PM

நம் மண்ணை மீட்கும் ஆயுதங்கள்!

உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு வளமான நாட்டு விதைகளை அதிவேகமாக இழந்துவருவது.

நாட்டு விதைகளை அடையாளம் காணுதல், சேகரித்தல், பரப்புதல், உழவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஒரு சில இயற்கை ஆர்வலர்களே தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பட்டறையைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை உழவர்களுக்கான பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தமிழகம் எங்கும் சுற்றிக்கொண்டிருப்பவர்.

நம்மாழ்வார் மீதான ஈர்ப்பு

முசிறியில் உள்ள அவரது பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மையத்தில் சந்தித்தபோது, உலகை எட்டிப் பார்க்கும் ஒரு புதிய விதைக்கே உரிய உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் யோகநாதன்: “எல்லோரையும் போலத் திருச்சி இனிப்பகம் ஒன்றின் ஊழியராக, சாதாரணமாகத்தான் வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும் அடுத்தடுத்துப் பலரும் தீவிர உடல்நலப் பாதிப்புக்கு ஆளானதும், அவர்களுக்காக மருத்துவமனைகளுக்கு அலைய ஆரம்பித்ததும் என்னைக் கடுமையாகப் பாதித்தது.

மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது, ‘விவசாயத்தை விஷமாக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், பாரம்பரியப் பயிர்களை மறந்தது, அதன் தொடர்ச்சியாக மாறிவரும் நமது உணவு கலாச்சாரம் போன்றவையே புதுப்புது வியாதிகளுக்குக் காரணமாகின்றன’ என்று விளக்கினார்கள். நான் உணர்ந்துகொண்டதை உலகமும் தெரிந்துகொள்வதற்காக அந்த மருத்துவர்களைக் கிராமங்களுக்கே அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன்.

அந்த ஆர்வமும் தேடலும் நம்மாழ்வார் ஐயாவிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஐயாவோடு பல மாநிலங்களுக்கும் பயணித்தது, அவரது கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டது, உழவர்களை நெருங்கி உணர்ந்தது போன்றவை என்னை முழு இயற்கை ஆர்வலராக மாற்றியது. ‘கவிமணி பாரதி உழவர் மன்றம்’ என்ற அமைப்பை முசிறியில் உருவாக்கினோம். நம்மாழ்வார் ஐயாவின் வழிகாட்டுதலின்படி நாட்டு விதை சேகரிப்பு மற்றும் பரப்புதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்” என்று சுருக்க அறிமுகம் தருகிறார். நாட்டு விதை பரவல், பாதுகாப்பு குறித்து மேலும் பல கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார்:

விதைகளை மறந்த கிராமங்கள்

சில தலைமுறைகளுக்கு முன்புவரை நமது கிராமங்கள் நாட்டு விதைகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தன. ஒரு பகுதியின் மண்வளம், கிடைக்கும் நீராதாரம் ஆகியவற்றைப் பொறுத்துத் தங்களுக்கான விதைகளை அடையாளம் கண்டு, உழவர்கள் தங்களுக்குள் அவற்றைப் பகிர்ந்து கொண்டுவந்தனர். தோராயமாக ஒவ்வொரு 35 கி.மீ. பரப்புக்கும் இந்த நாட்டு விதைகளின் பயன்பாடு சற்றே தனித்துவத்துடன் வேறுபட்டிருக்கும்.

காலப்போக்கில் நவீன வேளாண்மை, உற்பத்திப் பெருக்கம், நுகர்வு அதிகரிப்பு, பரவலான சந்தை வாய்ப்பு எனக் கவர்ச்சிகரமான காரணிகளை முன்வைத்து உழவர்களிடம் நாட்டு விதைகள் மறக்கடிக்கப்பட்டன. மேம்போக்காக இந்தக் காரணிகள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகத் தெரிந்தன. பெருவர்த்தக நிறுவனங்கள் தங்களது தரகர்கள் மூலமாகவும் அரசு வாயிலாகவும் வீரிய ஒட்டுரக விதைகளை உழவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தன. அதன் பின்னரே கிராமங்களில் இருந்து நாட்டு விதைகள் நழுவி வெளியேற ஆரம்பித்தன.

எஞ்சிய தீவுகள்

இயற்கை, மரபு சார்ந்த வேளாண்மையை மேற்கொள்பவர்கள் மட்டுமே இன்றைக்கு நாட்டு விதைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களிலும்கூடப் பெருவிவசாயிகளே அதிகம். மற்றபடி வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் மத்தியில் நாட்டு விதை ரகங்கள் பிரபலமாகிவருகின்றன. கிராமங்களில் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே உழவர்கள் நாட்டு விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். வீரிய ரகங்களின் உற்பத்தி மட்டுமே சந்தையில் லாபத்தைப் பெற்றுத் தரும் என்ற தவறான கருத்து அவர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. மாறாக மலைவாழ் மக்கள் மட்டுமே மரபு வளம் கெடாத நாட்டு விதைகளை இன்னமும் பயன்படுத்திவருகிறார்கள்.

மரபுக்குத் திரும்பும் வழி

நமது கிராமப்புற உழவர்களின் பொருளாதாரம் ஒருவகையில் பூச்சிக்கொல்லி, உரக் கடைகளில் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. கடனுக்கு அவர்கள் தரும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள், எவ்வளவு அதிக விலை என்றாலும் விதைகளையும் அங்கேயே வாங்குகிறார்கள். உதாரணத்துக்கு, நாட்டுப் புடலை விதை கிலோ ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆனால், ஒட்டு ரகத்தை ரூ. 10 ஆயிரம் சொன்னாலும் கடனுக்கு வாங்குகிறார்கள். கிராமங்களில் அடிமட்ட அளவில் இருக்கும் இந்தக் கோளாறுகளும், விவசாயிகளின் மனப்பான்மையும் மாறியாக வேண்டும். நாட்டு விதை ரகங்களைப் பயன்படுத்தும் உழவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். இதற்குத் தனிச் சலுகைகளை அறிமுகப்படுத்தலாம். முதலில் நமது நாட்டு விதை ரகங்களைக் கண்டறியவும் அவற்றை அழிவிலிருந்து மீட்கவும் நடவடிக்கைகள் தேவை.

பற்றாக்குறை இல்லை

நாட்டு விதைகள் சரிவரக் கிடைப்பதில்லை என்றொரு குற்றச்சாட்டும் உண்டு. ஒரு சில நடைமுறை சங்கடங்களைக் கடந்தால், இந்த நிலைமை விரைவில் மாறும். இதில் முதலாவதாக நாட்டு விதைகளை அடையாளம் காண்பதிலும், அவற்றின் சாதக அம்சங்களை உணர்ந்துகொள்வதிலும் உள்ள தடைகளை உழவர்கள் முதலில் களைய வேண்டும். பரஸ்பரம் விதைகளைப் பரிமாறிக்கொள்வது, புதிய விவசாயிகளிடம் அவற்றைப் பரப்புவது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

அந்தந்தப் பகுதிகளின் முன்னோடி உழவர்கள் மற்றும் விதைகள் இருப்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உதவிகளைப் பெறலாம். நாங்கள் ஒரு கிலோ விதையை உழவர்களிடம் வழங்கி, அவர்கள் சேகரித்துத் தரும் விதைகள் எத்தனை கிலோவாக இருந்தாலும் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். வாங்கிய விதைகளை வேறு திசையில் பரப்புகிறோம். வடமாநிலங்களில் இருந்தெல்லாம் எங்களிடம் விதைகளைக் கேட்டுப் பெறுகிறார்கள்.

புதிய தலைமுறையின் முன்னெடுப்பு

உணவு, பண்பாடு, விளையாட்டு, மூலிகை எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மரபு சார்ந்த திருவிழாக்களை நாங்கள் நடத்தும்போது, புதிய தலைமுறை உழவர்களும், படித்த இளைஞர்களுமே அதில் அதிகம் பங்கேற்கிறார்கள். இளம் வயதினரை நேரடியாகச் சென்று சேரும் என்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கியும் விழிப்புணர்வு மேற்கொண்டுவருகிறோம்.

புதிய தலைமுறை உழவர்களில் பலரும் நிலம் இல்லை என்பதை ஒரு குறையாகச் சொல்கிறார்கள். வேளாண்மைக்கான நிலம் பெரிதாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஐந்து முதல் 10 சென்ட் நிலமிருந்தால் போதும். இருமடி பாத்தி, வட்டப் பாத்தி மூலம் நாட்டு விதைக் காய்கறிகள், கீரைகளைப் பயிரிட்டுப் போதுமான வருமானம் பெறலாம். நாட்டு விதைகள் மட்டுமல்ல, அதில் தொடங்கி இயற்கை உழவும் செலவு வைக்காது என்பதை அடுத்தடுத்த படிகள் நமக்கு உணர்த்தும்.

விளைவிக்கப்படும் காய்கள் பார்ப்பதற்குத் தோற்றத்தில் சுமாராக இருந்தாலும் சுவையாக இருக்கும்; உடலுக்கும் நலம் தரும்; கூடுதல் நாள் வைத்திருந்தாலும் முற்றிலும் வாடி வீணாகாது என்பது போன்ற அம்சங்களை இளைஞர்கள் எளிதில் உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

- ‘விதை’ யோகநாதன்;

நாட்டு விதைகளுக்கு மாறும்போது

தங்கள் பகுதியில் புதிதாக நாட்டு விதைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்குப் பக்கத்து வயல்களால் பாதிப்பு வரலாம். அதிலும் ஒரே பயிரை இரு தரப்பினரும் சாகுபடி செய்யும்போது, அங்கிருந்து அயல் மகரந்தச் சேர்க்கைக்கான பூச்சிகள் நாட்டு ரகங்களுக்கு வரும்போது, விளைவாகக் கிடைக்கும் விதைகள் நாட்டு ரகத்துக்கான வீரியத்தை இழந்திருக்கும். எனவே பக்கத்து வயலில் இருந்து 200 மீ. இடைவெளிவிட்டு, அந்த இடைவெளிப் பகுதியில் மாற்று பயிர்களை நடுவது நல்லது.

அதேபோல விதைகளைச் சேகரிப்பதிலும் இருப்பு வைப்பதிலும் 80-கள், அதற்கு முந்தைய மரபு சார்ந்த முறைகளை அறிந்து மேற்கொள்ள வேண்டும். விதைகளை ஆறின கஞ்சி மற்றும் சாணப் பாலில் நனைப்பது, தூய்மைப்படுத்துவது, துணி, மண், பட்டறை உள்ளிட்ட பிரத்யேகச் சேமிப்பு முறைகளைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். முளைப்பு திறன் குறைந்துவிடும் அளவுக்கு நீண்டகால சேமிக்கவும் கூடாது. விதை பதப்படுத்துதல் குறித்து, அந்தந்தப் பகுதியின் மரபு சார்ந்த உழவர்களிடமே தேவையான விளக்கத்தைப் பெறலாம். உழவர்கள் ஒன்றுகூடி விதை வங்கி அமைத்தும் பயன்பெறலாம்.

விதைகளே ஆயுதம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வீரிய ரக விதைகளைப் பரப்ப மேற்கொள்ளும் வியூகங்கள், மரபணு மாற்ற விதைகளின் அச்சுறுத்தல் என நவீனம் திணிக்கும் அனைத்து இடையூறுகளையும், நாட்டு விதைகளின் பரவலாக்கம் தடுத்து நிறுத்தும். நம்மாழ்வார் அடிக்கடி ‘விதைகளே பேராயுதம்’ என்பார். மரபை மீட்கவும், நமது எதிர்காலச் சந்ததி நலமாக இருக்கவும், கண்ணுக்குப் புலப்படாத பிரம்மாண்டச் சக்திகளுக்கு எதிராகப் போராடவும் நாட்டு விதைகளே நம் கையிலிருக்கும் எளிய, அதேநேரம் வலுவான ஆயுதங்கள்.” - நாட்டு விதைகள் உற்பத்தி, தேர்வு, பரவலாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போதும் உதவத் தயாரான மனதுடன் உறுதியாகப் பேசுகிறார் யோகநாதன்.

‘விதை’ யோகநாதனைத் தொடர்புகொள்ள: 94449 46489

படம்: ஜி. ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x