

ஒரு சதுர அடி பரப்பளவில் 10 மணி நேரம் கிடைக்கும் வெயிலைக் கொண்டு, ஒரு மணி நேரத்துக்கு 12 கிலோ கலோரி ஆற்றலைச் சர்க்கரையாக மாற்றத் திராட்சைக் கொடி முயற்சிக்கிறது. ஆனால், உண்மையில் கிடைக்கும் 1,200 கிலோ கலோரியில், ஒரு சதவீதம் மட்டுமே அறுவடையாகிறது. கொள்கை அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒரு சதுர அடியில் கிடைக்கும் வெயிலைக் கொண்டு, ஒரு வேளைக்குத் தேவையான முழுமையான உணவைப் பெற முடியும். ஆனால், நாம் அறுவடை செய்வதோ ஒன்று முதல் மூன்று சதவீதம் ஆற்றலை மட்டுமே.
இங்குதான் பண்ணை வடிவாக்கத்தில் நமது படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். இலைப் பரப்பை எவ்வளவு அதிகமாக வெயிலை ஏற்கும் வகையில் செய்கிறோமோ, அந்த அளவு ஆற்றலை அல்லது சர்க்கரையை அல்லது உணவை அல்லது பெரும்பாலோர் எதிர்பார்க்கும் ‘பணத்தை' அறுவடை செய்ய முடியும்.
சேகரிப்பு கிடங்கும் முக்கியம்
அறிஞர் தபோல்கரின் கூற்றுப்படி, எவ்வளவு அதிகமாக இலைப் பரப்பை இளம் பயிர்களிலேயே கொண்டு வருகிறோமோ, அந்த அளவுக்கு வெயிலின் ஆற்றலை ஒரு பயிரில் அறுவடை செய்ய முடியும். நன்கு வளர்ச்சி பெற்ற இலைகளே போதிய அளவு வெயிலாற்றலை அறுவடை செய்யக்கூடியதாக உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. அடுத்ததாக இலைப் பரப்பின் அளவு மட்டுமல்லாது, உணவைச் சேகரித்து வைக்கும் உறுப்புகளின் வளர்ச்சியும் வெயில் அறுவடையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, உருளைக் கிழங்கின் உணவு சேகரிக்கும் உறுப்பு - வேர். எனவே, இதில் வேரின் வளர்ச்சி இன்றியமையாதது. இலைகள் உருவாக்கும் உணவைப் பயன்படுத்த வேண்டுமானால், அது வீணடிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்படுவதற்கான வசதியும் வேண்டும். தக்காளியில் கனிகளில் சத்துகள் சேர்கின்றன. கடலையில் விதைகள் சத்துகளைச் சேர்க்கின்றன. பலா மரங்கள் கனிகளிலும் விதைகளிலும் சத்துகளைச் சேமிக்கின்றன.
சேகரிப்புக் கிடங்கு பராமரிப்பு
தேன் பெட்டிகள் மூலம் நமக்குத் தேன் வேண்டுமானால், தேன் பெட்டிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் தேனீக்கள் தேனடை கட்டும் வேலையை மட்டுமே தொடர்ந்து செய்துவிட்டு, தேன் சேகரிக்கும் வேலையைக் குறைத்துவிடும். அதனால், நமக்குத் தேன் கிடைப்பது கடினமாகும். இதுபோலவேதான் தாவரங்களிலும். சரியான சேமிப்பு உறுப்புகள் இல்லையெனில், அந்த உறுப்பை உருவாக்க மட்டுமே தாவரங்கள் தங்கள் உணவைச் செலவிடும்.
எனவே, வெயில் ஆற்றல் பண்ணை வடிவாக்கத்தில் மிகவும் அடிப்படையானது என்பது மட்டுமில்லாமல், அந்த வெயிலாற்றலை அறுவடை செய்யும் இலைப் பரப்பும், இலைப் பரப்பு அறுவடை செய்துகொடுக்கும் வெயிலைச் சேமிப்பதற்கு உரிய வசதியும் நாம் அவசியம் செய்து கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
(அடுத்த வாரம்: உழவுக்குக் காற்றை எப்படித் திருப்புவது? )
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com