

“மரங்கள் தரும் கனிகளைக் கொய்யலாம், மலர்களைப் பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட முடியாது. தாயின் தனத்தில் உயிர்ப்பால் அருந்தலாம். நீங்களோ தாயின் தனத்தை அறுக்கச் சொல்கிறீர்கள்.”
பறம்பு மலையில் உள்ள சந்தன மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு, அதற்கு ஈடாகப் பொன், பொருள், பெண்கள் தருவதாகச் சொன்ன யவனர்களுக்குப் பாரி மன்னன் அளித்த பதில் இது. அந்த மன்னன் வாழ்ந்த மண்ணில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட சில நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அந்த நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள், இந்தப் பூமியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றன.இது இப்படியே போனால், நாளை நம் சந்ததிகள் வாழ்வதற்கு இந்தப் பூவுலகு ஆரோக்கியமாக இருக்குமா?
இதைத் தடுத்த நிறுத்த என்ன செய்யலாம், மாற்று வழிகள் என்ன என்ற சிந்தனையுடன் மாற்று வாழ்வியலைப் பற்றி கலந்துரையாடுவதற்கான ஒன்றுகூடலை ஐந்திணை வாழ்வியல் நடுவமும், சூழலியல் அமைப்பான தளிர்களும் தர்மபுரியில் சமீபத்தில் ஒருங்கிணைத்து இருந்தன. மரபு வழியிலான அறிவியல் – தொழில்நுட்பம், பாரம்பரியம் ஆகியவற்றை முன்னெடுப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்படும் இந்த அமைப்புகள் புதிய தலைமுறை இளைஞர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நிகழ்ச்சியில் கருத் தரங்கம், நூல் வெளியீடு, சிறுதானிய உணவுத் திருவிழா என இயற்கையை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகள் அடங்கியிருந்தன.
கருத்தரங்கில் பேசிய கருத்தாளர்கள் வெறும் பேச்சாளர்களாக இல்லாமல் இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து களப்பணி ஆற்றிவரும் செயல்பாட்டாளர்களாக இருந்தது சிறப்பு. கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துவரும் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரான பசுமை நாகராஜன், சூழலியலும் தனிமனிதக் கடமையும் பற்றி பேசினார். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இயற்கை வழிக் கல்வியைத் தர்மபுரியில் பயிற்றுவித்துவரும் மீனாட்சி உமேஷ், மாற்றுக் கல்வி முறைகள் பற்றி எடுத்துரைத்தார். தற்சார்பு பண்ணையம் நடத்திவரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான பியூஸ் மனுஷ், கொள்ளை போகும் இயற்கை வளங்களைச் சுட்டிக்காட்டினார். தொடுசிகிச்சை நிபுணர் உமர் ஃபரூக், மாற்று மருத்துவ முறைகள் குறித்துப் பேசினார். 'சிறியதே சிறந்தது' என்று வலியுறுத்திய ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம் பற்றி, இயற்கை வேளாண் செயல்பாட்டாளர் பாமயன் கவனப்படுத்தினார்.
நமது உணவு மரபின் தொன்மை குறித்து ம. செந்தமிழன் எழுதிய ‘தெய்வம் உணாவே: உணவும் மரபும்’, மரபான உணவு வகைகளின் நவீன சமையல் குறிப்புகள் பற்றி க. காந்திமதி எழுதிய ‘மரபுச் சுவை’, ஒரு தகப்பனின் அனுபவக் குறிப்புகளாகப் ப.கலாநிதி எழுதிய ‘இயற்கை வழியில் இனிய பிரசவம்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. கடைசி நூலைக் குழந்தைகளைக் கொண்டு வெளியிடச் செய்தது புதுமையாகவும் பொருத்தமாகவும் இருந்தது.
இப்படி ஒரு பக்கம் செவிக்கும் சிந்தனைக்கும் உணவு பரிமாறப்பட்ட பின் கொள்ளுச் சாறு, திணை அல்வா, கேழ்வரகு லட்டு, வரகு பகுவடை, சாமை மல்லிச் சோறு, வாழைத்தண்டு தயிர் பச்சடி, பனிவரகு சாம்பார் சோறு, பல தானியக் கொழுக்கட்டை, கேழ்வரகு இட்லி, சோளத் தோசை, நிலக்கடலை துவையல், கம்பு தயிர் சோறு, குதிரைவாலி புட்டு, நெல்லி ஊறுகாய் எனச் சுவையான, நமது பாரம்பரியச் சிறுதானிய உணவு வகைகள் வயிற்றுக்குப் பரிமாறப்பட்டன.
குதிரைவாலி, சாமை, கொள்ளு போன்ற நமது சிறுதானியங்கள் இப்போதும் பெருமளவில் விளையக்கூடிய தர்மபுரியில் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்கு மக்கள் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு இருந்தது. பெருநகரங்களில்தான் இது சார்ந்த ஆர்வம் இருக்கும் என்ற ஐயத்தைப் போக்கியிருக்கிறது, இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த ஆதரவு.
மரபின் அவசியத்தை உணரும், மரபின் வேர்களை நோக்கித் திரும்பும், மரபு சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்கும் கால மாற்றம் உருப்பெறத் தொடங்கிவிட்டது என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.
- ம.செந்தமிழன், திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com