

‘அமைதியான சூழல், ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்படங்கள்!' அந்தமான் தொடர்பான ஒளிப்படக் கண்காட்சியை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும்.
சூழலியலாளர், நாவலாசிரியர், ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர் பங்கஜ் சேக்ஷரியா. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் - நிகோபார் தீவுகளில் ஜராவா பழங்குடி மக்கள் குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டவர்.
அவருடைய அந்தமான் நாட்களின்போது, தான் எடுத்த ஒளிப்படங்களைச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'அமிதிஸ்ட்' அரங்கில் சென்ற வாரம் காட்சிக்கு வைத்திருந்தார். அரூபம், நிலப்பரப்புகள், உயிரினங்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் மொத்தம் 33 ஒளிப்படங்கள்.
கதை சொல்லும் படங்கள்
“இந்தப் படங்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது!” என்றவர் ஓங்கி உயர்ந்த மரமொன்றில் அமர்ந்திருக்கும் கடல்பருந்து படத்தைச் சுட்டிக்காட்டி, “அந்தமானில் தென்படக்கூடிய முக்கியமான பறவைகளில் இதுவும் ஒன்று. கடலில் நீந்திச் செல்லும் நீர்ப்பாம்புகள்தான் இவற்றின் முக்கிய உணவு. ஆனால், தீவுக்கு வெளியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், கடலை அசுத்தப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அது இந்தப் பறவையின் உணவுச் சங்கிலியைச் சேதப்படுத்தி, இதை அழிவின் விளிம்புக்கு இழுத்துச் செல்கிறது” என்றார்.
இந்த ஒளிப்படக் கண்காட்சியின் இன்னொரு முக்கிய சிறப்பம்சம், படங்கள் எல்லாம் ஒளிப்படமாக 'பிரின்ட்' போடப்படாமல், வெள்ளைத் துணியில் அச்சிடப்பட்டிருந்தன. தள்ளி நின்று பார்க்கும்போது ஓவியம் போலவும், நெருங்கிச் சென்று பார்க்கும்போது ஒளிப்படமாகவும் தோன்றி, பார்வையாளர்களை ஈர்த்தன.
பரிசோதனை முயற்சி
“சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களைப் பற்றி நானும் என் மனைவியும் ஒளிப்பட ஆவணம் செய்திருந்தோம். அப்போது பருத்தித் துணியில் அந்தப் படங்களை அச்சிட்டபோது, வேறொரு பரிமாணம் கிடைத்ததை உணர முடிந்தது. அதுபோன்ற ஒரு முயற்சியை இப்போதும் செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து இப்படிக் காட்சிப்படுத்தி இருக்கிறேன். இது ஒரு பரிசோதனை முயற்சி!” என்கிறார் பங்கஜ்.
பிரபலக் காட்டுயிர் ஒளிப்பதிவாளர் அல்ஃபோன்ஸ் ராய் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அந்தமான் குறித்து ஆவணப்படம் ஒன்றை 20 ஆண்டுகளுக்கு முன்பு அல்ஃபோன்ஸ் ராய் எடுத்திருந்தார். அப்போதிருந்தே பங்கஜும் அல்ஃபோன்ஸும் நண்பர்கள்.
காணாமல் போன இயற்கை
இந்தக் கண்காட்சி தொடங்கிய பிறகு, ‘இயற்கைப் பாதுகாப்பில் ஒளிப்படங்கள் எப்படி உதவுகின்றன?' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய அல்ஃபோன்ஸ் ராய், “இன்று எல்லோரிடமும் கைப்பேசி உள்ளது. அதைக்கொண்டு 'செல்ஃபி' எடுத்துத் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். செல்ஃபி எடுக்கப் பயன்படுகிற அளவுக்குக் கையடக்கக் கேமராவும் வந்துவிட்டது என்று தொழில்நுட்ப வளர்ச்சி தருகிற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் அதே கேமரா இன்று கடவுளாகிவிட்டது, அதைக்கொண்டு எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்கிற மனோபாவம் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இன்றைக்குப் பெரும்பாலும் மோசமான விஷயங்களுக்கே கேமரா பயன்படுகிறது. இயற்கையின் உண்மையான அழகை ரசிக்க மறந்துவிட்டு, படம் எடுப்பதையே வேலையாக வைத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் படங்களில் இயற்கை காணாமல் போய்விட்டது!” என்றார்.
'எண்டோசல்ஃபான்’ பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து 'இன் காட்ஸ் ஓன் கன்ட்ரி' எனும் ஆவணப்படத்தை எடுத்த நீனா சுப்பிரமணி கூறும்போது, “எந்த ஒரு ஒளிப்படத்தில் மனித அனுபவம் உறைந்திருக்கிறதோ, அந்த ஒளிப்படம் அழகாகவே இருக்கும். ஒளிப்படங்கள் எப்படி இருக்கின்றன என்பது முக்கியமல்ல. அந்த ஒளிப்படத்தின் வழியே, ஒரு கதையை நாம் எப்படி விவரிக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்றார்.
உச்ச நீதிமன்றச் சாட்சியம்
அந்தமானில் வாழும் கற்காலப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜராவா பெண்மணி ஒருவருக்கு, பேருந்தில் செல்லும் சுற்றுலா பயணி ஒருவர் உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொடுக்கும் படம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெளி உணவு அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தப் படம் வெளியானதற்குப் பிறகுதான், ஜராவா இனப் பூர்வகுடிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதம் எழுந்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் படத்தைப் பங்கஜ்தான் எடுத்திருந்தார். அந்தப் படமும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
“இந்தப் படங்கள் ஜராவா பூர்வகுடிகளின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தில் சாட்சியமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, அதை ஊடகங்களில் வெளியிட அனுமதியில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் இந்தப் படம் சுற்றிக்கொண்டே இருக்கிறது” என்று வருந்துகிறார் பங்கஜ்.