

விதை எப்படி உயிர்ப் பெட்டகமாகத் திகழ்கிறது என்றும் உழவின்/உயிரின் அடிப்படையாக அது எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்தோம். விதை வளத்தை இழந்தால் நாட்டின் உணவு உற்பத்தி, உழவர் வாழ்வாதாரம், நமது விதைப் பன்மயம், நம் தற்சார்பு என எல்லாவற்றையுமே இழக்க நேரிடும். விதை பாதுகாப்பும் விதை இறையாண்மையும்தான், நம் நாட்டின் மூலாதாரம்.
விதை வியாபார மதிப்பு
விதை விற்பனையை ஒரு பெரும் வியாபாரமாக்கி, கொள்ளை லாபத்தை மட்டுமே அதன் அடிப்படையாக்கி விட்டதுதான் தற்போதைய வேளாண்மையின் வீழ்ச்சிக்குக் காரணம். 2014-ம் ஆண்டில் உலக மொத்த விதை வியாபாரம் ரூ. 2,88,000 கோடி! இந்தியாவின் விதை வியாபாரம் ரூ. 16,000 கோடி!
விதை வியாபாரத்தில் உலக அளவில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. நாம் இன்னமும் ஒரு வேளாண்மை நாடாகத் தப்பிப் பிழைத்திருப்பதால், பெரும் விதைச் சந்தை இங்கேதான் இருக்கிறது.
இன்றைக்கு உலக விதைச் சந்தையை டோ – டியூபாண்ட், சைஜென்டா – சைனீஸ் செம், மான்சாண்டோ – பேயர் ஆகிய மூன்று நிறுவனங்களே கையில் வைத்துள்ளன. உலக விதைச் சந்தையில் 75 சதவீதத்தை இந்த மூன்று நிறுவனங்களும் ஆளுகின்றன.
பெரும் பன்மய நாடு
உலகிலேயே மிக அதிக உயிரினப் பன்மை (bio-diversity) உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா மதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 சதவீதத் தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. இந்தப் பதினேழு நாடுகளும் ‘பெரும் பன்மய' (megadiverse) நாடுகள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று!
ஏறத்தாழ 91,000 உயிரினங்களும், 45,500 தாவரங்களும் நம் நாட்டில் இனம் காணப்பட்டுப் பட்டியில் இடப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் புதிய புதிய உயிரினங்கள் பட்டியலிடப் பட்டுக்கொண்டே உள்ளன. நாற்பத்தி ஐந்தாயிரம் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எங்கும் காணப்படாதவை.
வரலாற்றுத் தொடர்ச்சி
இன்னும் இனம் கண்டறியப்படாத 4,00,000 உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்தப் பன்மை 3,500 கோடி ஆண்டு வரலாற்றைக் கொண்ட பரிணாம வளர்ச்சியின் விளைவு என்றும் உயிரியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்பன்மயத்தைப் பாதுகாப்பது நம் கடமை. அது மட்டுமன்றி, மனித இனம் நீடித்து வாழ வேண்டுமானால் இந்தப் பன்மயம் அத்தியாவசியம். பருவநிலை மாற்றத்திலிருந்து காக்கவும், பூச்சி, நோய்களிலிருந்து தப்பிக்கவும்கூட இது அவசியம்.
நெல்லில் லட்சம் ரகங்கள்
நெல் என்ற ஒரு இனத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 2,00,000 (உண்மையாகவே, இரண்டு லட்சம்தான்!) நெல் ரகங்கள் இருந்ததாக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிச்சாரியா ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு தாவர இனத்திலும் எத்தனை ரகங்கள் என்று கணக்கிட்டால் நம் உயிரினப் பன்மையின் விரிவும், ஆழமும், வீச்சும், வலிமையும் நம்மை வாய் பிளக்க வைக்கும்.
சரி, உயிரினப் பன்மயம் ஏன் தேவை? நெல்லை எடுத்துக்கொண்டால் பூச்சி எதிர்ப்பு, வறட்சிக்குத் தாக்குப்பிடிக்கக்கூடியது, வெள்ளத்தில் மூழ்கினாலும் தாக்குப்பிடிக்கக் கூடியது, உவர்நில ரகம், மானவாரி, பெருமழை எனப் பல வகைகள் உண்டு.
இந்தப் பன்மயத்தால், நுகர்வோருக்கும் பல நன்மைகள் உத்தரவாதம்- பிள்ளை பெற்ற தாய்க்குக் கொடுப்பதற்கு, கருவுற்ற தாய்க்கு, நீரிழிவு நோய்க்கு, உடல் வீரியத்துக்கு, வயதானவர்களுக்கு, விரைவாக ஜீரணிக்க, வாசனை மிகுந்தது எனப் பலப்பல ரகங்கள் நம் பாரம்பரியத்தில் மிளிர்ந்தன.
இவை இயற்கையாகப் பல்லாயிரக்கணக்கான வருடப் பரிணாம வளர்ச்சியில் கிடைத்த வரப்பிரசாதம். மண்ணுக்கு, சுற்றுச்சூழலுக்கு, பல்லுயிர் பேண, உடல் ஆரோக்கியத்துக்கு, நாட்டின் இறையாண்மைக்கு, உழவர்களின் வாழ்வாதாரத்துக்கு இதுபோலப் பன்மைத்துவம் மிக அத்தியாவசியம்.
இன்று பசுமை புரட்சி மற்றும் சந்தை பொருளாதார (லாப வெறி அல்லது பேராசை எனப் படிக்கவும்) தாக்கத்தால் இப்போது நாம் விளைவிக்கும் 90 சதவீத நெல் ரகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 11 வகைகள்! பன்மயத்தைக் கொன்ற பாவிகள் பட்டியலில் முதலிடம் நமக்கே!
உயர் விளைச்சல் மட்டும் போதுமா?
புளியங்குடியைச் சேர்ந்த தமிழகத்தின் முன்னோடி இயற்கை உழவர் கோமதிநாயகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், “ஒரு நெல் நட்டால் நூறு நெல் ஆகிறது; அதற்கு மேலும் ஏன் உயர் விளைச்சலுக்கு ஆசைப்பட வேண்டும்? விவசாயத்தில் ஆசைக்கு இடமுண்டு, பேராசைக்கு அல்ல” என்று இயற்கை விவசாயத்தின் மேன்மை பற்றியும் நவீன விதைகளின் தீமையைப் பற்றியும் பேசினார். இப்படி யதார்த்தமாக அவர் சொன்னது தீர்க்கமான, ஆழமான கேள்வியை எழுப்புகிறது.
அதற்காகப் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் உழவர் விளைவிக்க வேண்டியதில்லை. சரியான விதைகளை, பல பயிர்களை, தற்சார்பாக, இயற்கையுடன் இசைந்த வேளாண்மையாக இருந்தால், நஞ்சில்லாத நிலத்திலிருந்தே பெரும் பகுதி விளைச்சல் நமது சமையலறைக்கு வந்தால், இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தனை பிரச்சினைகள் ஏற்படச் சாத்தியமில்லை. உயிர் பன்மயமும் விதை பன்மயமும் பல முன்னோடி விவசாயிகளை நிமிர்ந்து நிற்க வைத்தது எப்படி என்று தொடர்ந்து பார்ப்போம்.
- கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com