Published : 20 Aug 2016 12:41 pm

Updated : 14 Jun 2017 17:58 pm

 

Published : 20 Aug 2016 12:41 PM
Last Updated : 14 Jun 2017 05:58 PM

எங்கே அந்த முள்பந்துகள்?

சிவந்த நிலப்பரப்பில் நிமிர்ந்து நின்றன கருவேல மரங்கள். அந்திமாலை நேரம். தலைக்கு மேல் கொக்குக் கூட்டம் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. மாடுகளின் கழுத்து மணியோசை ஒலித்துக்கொண்டிருந்த பின்னணியில்தான் முதன்முதலில் முள்ளெலியைப் பார்த்தேன். அது நாம் எளிதில் அடையாளம் காண முடிகிற முள்ளம்பன்றி அல்ல. அதைவிட உருவில் சிறிய முள்ளெலி. அதைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில், முக்கியமான தருணம் இது.

இன்னொரு நாள், என் களப்பணிகளை முடித்துக்கொண்டு இருந்த நேரத்தில், ரோட்டில் முள்ளெலியைப் பார்த்ததாக யாரோ ஒருவர் தேடி வந்தார். அந்த ஊரில் பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றியே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, அவரது கூற்றை உடனே நம்பத் தோன்றவில்லை. இருந்தாலும் வண்டியைக் கிளப்பி, உடனே புறப்பட்டேன். மனதில் முள்ளெலிகள் வலம் வந்துகொண்டிருந்தன. முதலில் அது யார் கண்ணிலும் படாமல் இருக்கவேண்டும். முன்னதாகப் பாபநாசத்திலும் நக்கநேரியிலும் சாலையில் அடிபட்டு இறந்துபோன மாதிரி இதுவும் ஆகிவிடக் கூடாது.


அந்த இடம் வந்தவுடன், சாலையை ஒட்டியிருந்த புதரில், ஒரு முள் பந்துபோல அமைதியாக உட்கார்ந்திருந்தது. இதுதான் நான் தேடி வந்த சொத்து. கொஞ்ச நேரத்தில் மெதுவாக உடலை அசைத்துத் தலையை வெளியே நீட்டி, கால்களை அகட்டி வைத்து எழுந்திரிக்க ஆரம்பித்தது. மெதுவாக மூக்கை அசைத்துக்கொண்டே மெல்லிய கால்களால் ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்தது. மெதுவாக நகர்த்து புதர்களுக்கிடையில் சென்றது. அது ஓர் தனி அழகு.

அன்றைக்கும் சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம்தான். இப்படி இரண்டாவது முறையாக முள்ளெலியைப் பார்த்த சம்பவமே, முள்ளெலிகளின் வாழிடம் சார்ந்த ஆராய்ச்சியை நான் தொடர்ந்ததற்கு முக்கியக் காரணம். அதிகம் ஆராய்ச்சி செய்யப்படாத இந்தப் பாலூட்டி மீதான என் ஆர்வம், அதற்குப் பிறகு தீவிரமடைந்தது.

வித்தியாசம் என்ன ?

முள்ளெலியை பலரும் தவறாக முள்ளம்பன்றி என்று நினைப்பதுண்டு. இரண்டும் வேறுவேறு. முள்ளம்பன்றி உருவில் பெரிய, வளை தோண்டும், நீளமான முட்களால் போர்த்தப்பட்ட கொறி உயிரினம். 70-90 செ.மீ. வரை நீளமும் சுமார் 18 கிலோ வரை எடையும் கொண்டிருக்கும். காட்டிலும், காட்டை ஒட்டிய பகுதிகளிலும் சாதாரணமாக இதைப் பார்க்கலாம்.

அதேநேரம் முள்ளெலிகள் அரை கிலோவுக்கும் குறைவான எடை, சுமார் 7 முதல் 15 செ.மீ. நீளம், பார்ப்பதற்கு ஒரு சிறிய தேங்காயைப் போன்ற, 2-3 செ.மீ. நீளமுடைய கூர்மையான முட்களைக் கொண்ட, பூச்சியுண்ணும் இரவாடி உயிரினம்.

எவை முள்ளெலிகள்?

கூரிய முட்களால் போர்த்தப்பட்ட உடலைக் கொண்ட முள்ளெலிகள் பெரும்பாலும் புதர் பகுதிகள், தேரிக்காடுகள், வறண்ட நிலப்பகுதிகள், அரிதாக உயரமான மலை பகுதிகளில் இவை வாழ்கின்றன. வறண்ட நிலப்பரப்பில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

மெல்ல நடக்கும் உயிரினமாக அறியப்பட்டலும், இவற்றால் வேகமாக ஓட முடியும். இரவாடியான இந்த உயிரினம் பகலில் பொந்துகளில், இலைகளுக்கு அடியில், பாறை இடுக்குகளில் அமைதியாக ஓய்வெடுக்கும். அந்தி சாயும் பொழுதிலிருந்து அதிகாலைவரை பூச்சிகளைத் தேடியுண்ணும். தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகளைக்கூட உணவாகக் கொள்ளும்.

மெல்ல நடக்கும் உயிரினமாக அறியப்பட்டலும், இவற்றால் வேகமாக ஓட முடியும். இரவாடியான இந்த உயிரினம் பகலில் பொந்துகளில், இலைகளுக்கு அடியில், பாறை இடுக்குகளில் அமைதியாக ஓய்வெடுக்கும். அந்தி சாயும் பொழுதிலிருந்து அதிகாலைவரை பூச்சிகளைத் தேடியுண்ணும். தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகளைக்கூட உணவாகக் கொள்ளும்.

முள்ளெலிகளுக்கே உரிய சிறப்பு குணம் ஆபத்து காலத்தில் தலையை வயிற்றை நோக்கி இழுத்து, முள்பந்துபோல சுருண்டு கொள்வதுதான். அப்படிச் செய்தபிறகு, அசைவின்றிக் கிடக்கும். சுற்று வட்டாரம் நிசப்தம் அடைந்த பிறகே, பழைய நிலைக்குத் திரும்பும்.

நம்மூர் முள்ளெலி

உலகில் உள்ள 16 முள்ளெலி வகைகளில், 13 வகைகள் ஆபத்தில் உள்ளன. இந்தியாவில் மூன்று வகை முள்ளெலிகள் உள்ளன. 1. நீள்காது முள்ளெலி 2. வெளிர் முள்ளெலி 3. தென்னிந்திய முள்ளெலி. தென்னிந்திய முள்ளெலி (Paraechinus nudiventris) அல்லது சென்னை முள்ளெலி தமிழகம், கேரளத்தில் வாழ்கிறது. ஆந்திராவில் சில இடங்களில் அரிதாக உள்ளன. இந்த உயிரினம் 150 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால், சென்னை முள்ளெலி என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய ஆய்வு

பழைய ஆராய்ச்சிக் குறிப்புகளின்படி (1832-1972) வருஷநாடு பள்ளத்தாக்கு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, அவிநாசி, பெருந்துறை, வில்லிப்புத்தூர், நீலகிரி, சென்னை, மன்னார் வளைகுடா, திருச்சி, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, திருப்பூர் ஆகிய இடங்களில் முள்ளெலிகள் மிகுந்து காணப்பட்டதாகத் தெரியவருகிறது. அவற்றின் இன்றைய நிலையைப் பற்றி அறிய, 16 இடங்களில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட பல இடங்களில் முள்ளெலிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தும், சில இடங்களில் வாழிடம் துண்டாக்கப்பட்டும் உள்ளது. இப்போது தென்தமிழகத் தேரிக்காடுகளிலும், காட்டை ஒட்டிய பகுதிகளிலும் வாழ்கிறது.

வறண்ட பொட்டல் நிலம், புல்வெளி, புதர்க்காடு, பனை மரம் நிறைந்த இடங்கள், தேரிக் காடுகளில் முள்ளெலிகள் அதிகம் தென்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் 80% முள்ளெலிகள் அழிந்திருக்கலாம். இப்போது தேரிக்காட்டில் காண அரிதாகிவிட்ட ஓர் உயிரினம் முள்ளெலிதான்.

ஆபத்துக்குக் காரணம் என்ன?

முள்ளெலி வேகமாக அழிந்ததற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா, கீழக்கரை மக்கள் முள்ளெலியின் சதையுடன் நெய் கலந்து கக்குவான் இருமல் மருந்தாக 1905-ல் பயன்படுத்தியுள்ளதாக ஆர்.சி. ராடென் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தப் பழக்கம் தொடர்ந்துவருகிறது.

முள்ளெலியின் முள்ளைச் சுட்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளின் இருமல், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சளி தொல்லைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். சில பகுதிகளில் உணவாகவும் பயன்படுகிறது.

முள்ளெலிகள் அழிந்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம், அவற்றின் வாழிடம் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதுதான். காற்றலைகளின் அதிகரிப்பு, தீ, காடுகள் அழித்தல், புதுச் சாலைகள் அமைத்தல், மரம் வெட்டுதல் போன்றவற்றாலும் இவை பாதிக்கப்பட்டுள்ளன. பெருமளவு முள்ளெலிகள் சாலையில் அடிபட்டும் வேட்டையாலும் இறக்கின்றன. செல்லப் பிராணியாக வளர்ப்பதற்குப் பிடிக்கப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

சூழலியல் நன்மைகள்

காடுகளில் பாம்புகள் மற்றும் கீரிப்பிள்ளையுடன் சண்டையிடக்கூடிய தைரியசாலிகள் முள்ளெலிகள். பாம்புக்கடியைத் தாங்கிக்கொண்டு முள்ளெலிகள் வாழ்வதற்கான திறனைக் கொண்டுள்ளன என்று முதுபெரும் இயற்கையாளர் எம். கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார் (கலைமகள், பிப்., 1953). பூச்சிகளை அதிகம் உண்ணும் முள்ளெலிகள் உணவு சங்கிலியின் முக்கியப் பங்கை வகிக்கின்றன. கரையான், எறும்பு புற்றுக்கு அருகில் முள்ளெலிகள் அதிகம் வசிப்பதைப் பார்க்கலாம்.

நாம் சாதாரணமாகக் கருதும் பொட்டல் காடு, புதர் மண்டியிருக்கும் பகுதிகளில்தான் முள்ளெலிகளை பார்க்க முடிகிறது. இவற்றின் அழிவு பரிணாமச் சங்கிலியைச் சிதைக்கக்கூடியது, பூமியின் ஆச்சரியமான ஒரு படைப்பை அற்றுப்போகச் செய்யும் தன்மை கொண்டது.

இந்த அரிய உயிரினம் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் பெரிதாக மேற்கொள்ளப்படாத நிலையில், நமக்குத் தெரிந்தது மிகக் குறைந்த அறிவியல்பூர்வத் தகவல்கள்தான். எனவே, முள்ளெலிகள் பெருமளவு அழியாமல் காப்பாற்றப்பட்டால்தான், அவற்றைப் பற்றி நாம் கூடுதலாக அறிய முடியும்.

கட்டுரையாளர், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்

தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com

முள்பந்துகள்முள்ளம்பன்றிவருஷநாடு பள்ளத்தாக்குமுள்ளெலி உயிரினம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x