ராமேஸ்வரம்: இறந்த நிலையில் கரை ஒதுங்கும் அரியவகை டால்பின்கள்

ராமேஸ்வரம்: இறந்த நிலையில் கரை ஒதுங்கும் அரியவகை டால்பின்கள்
Updated on
1 min read

ராமேஸ்வரம் கடற்பகுதியில் ஒரே வாரத்தில் இறந்த நிலையில் இரண்டு டால்பின்கள் கரை ஒதுங்கியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன.

இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 1 மற்றும் 5-ம் தேதிகளில் மட்டும் இரண்டு டால்பின்கள் ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

இது குறித்து நமது செய்தியாளரிடம் சுற்றுசூழல் ஆர்வலர் ஜெயகாந்தன் கூறு ம்போது, ''அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக டால்பின் உள்ளதால் மத்திய அரசு 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல் நீர் விலங்காக டால்பின்களை அறிவித்தது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு மாறி விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் டால்பின்கள் கரையை நோக்கி வரத்துவங்கி விட்டன.

எனவே விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது மோதி, வலைகளில் அடிபட்டு டால்பின்கள் இறந்து விடுகின்றன. கடலோரப் பகுதி மக்களிடம் அரியவகை உயிரினமான டால்பின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் சுற்றுச்சூழல் கல்வியில் அரிய வகை உயிரினங்களைப் பற்றி போதிக்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in