தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 28: சுழற்சிகளால் கிடைக்கும் வாழ்வு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 28: சுழற்சிகளால் கிடைக்கும் வாழ்வு
Updated on
2 min read

நமது உலகப் பந்து பருப்புக் கடலிலும் பாற்கடலிலும் மிதந்துகொண்டு இருக்கிறது! -

பண்ணை வடிவாக்கத்தில் இயற்கைச் சுழற்சிகளுக்கு மிக அடிப்படையான பங்கு உண்டு. இயற்கையின் இந்தத் தொடர் நிகழ்வுகளே உயிரினங்களின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன என்றால் அது மிகையாகாது. சுழற்சி என்பது ஒரு சுழல்புச் செயல்பாடு, அதாவது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பது. சங்க இலக்கியமான நற்றிணை 'நில்லா நீர் சூழல்பு' என்று குறிப்பிடுகிறது.

‘வான்முகந்த நீர் மலை பொழியவும்

மலைபொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம்போல’

என்னும் சங்க இலக்கியமான பட்டினப்பாலை வரிகள், நீரின் சுழற்சி பற்றிய மரபு அறிவு இருந்ததை நமக்குக் காட்டுகிறது. இந்த மண்ணுலகம் நீடித்து இருப்பதற்குப் பல இயற்கை சுழற்சிகள் காரணமாக உள்ளன. இவை தொடர்ச்சியாக இயங்குகின்றன. இந்தச் சுழற்சிகளே உலகின் வாழ்வை நிலைத்திருக்கச் செய்கின்றன.

காற்று வீசுவதும், மழை பொழிவதும், பருவக் காலங்கள் தொடர்ந்து வருவதும், இரவும் பகலும் தோன்றுவது என்று எல்லா நிகழ்வுகளும் சுழற்சியாகவே நடைபெற்றுவருகின்றன. நேர்கோட்டு முறையில் செல்லும் எந்த நிகழ்வும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் சுழற்சியாக இருக்கும் எந்த நிகழ்வுக்கும் முடிவு என்பதே கிடையாது. அதேபோல், அதற்குத் தொடக்கப் புள்ளியையும் காண்பது அரிது.

நைட்ரஜனின் உருமாற்றம்

ஒரு வெப்பமண்டலக் காட்டில் நடக்கும் பல்வேறு வகையான சுழற்சிகள், அந்தக் காட்டை மென்மேலும் சிறப்புள்ளதாக்குகின்றன. இது ஒரு பண்ணைக்கும் பொருந்தும். நம்மைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதி நிலங்களில் காணப்படும் ஊட்டச்சத்துகள் சுழற்சியாகவே வளர்கின்றன. இவை நேர்கோட்டு பாதையில் சுழல்வதில்லை, ஒரு திருகுச் சுருள்போலச் சுழல்கின்றன.

எடுத்துக்காட்டாக, நைட்ரஜன் (N) காற்றில் 78 விழுக்காடு காணப்படுகிறது. அதை நிலத்தில் உள்ள கடலைப் போன்ற தாவரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் உறிஞ்சி அமோனியாவாக (NH2/NH3) மாற்றுகின்றன. இந்த அமோனியாவை வேறு சில நுண்ணுயிர்கள் நைட்ரைட் (NO3) ஊட்டமாக மாற்றுகின்றன. இந்த நைட்ரைட் வேறு சில நுண்ணுயிர்களால் நைட்ரேட் ஊட்டமாக மாற்றப்படுகிறது. இவைதாம் செடிகளால் உட்கொள்ளப்படுகின்றன.

இதற்குப் பதிலாக யூரியா என்று அழைக்கப்படும் 'கார்பமைடை' மண்ணில் இடும்போதும், அவை நைட்ரேட் வடிவில்தாம் செடிகளால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எஞ்சிய யூரியாவின் எச்சங்கள் கரியமில வாயுவாக வெளியேறுகின்றன.

இயற்கை தந்த கொடை

காற்றில் இருந்த நைட்ரஜன் மண்ணில் பல வடிவங்களை எடுத்து, செடிக்கு வருகிறது. அங்கு அமினோ அமிலங்களாக மாறி, பின்னர் அது புரதமாக மாற்றம் பெறுகிறது. குறிப்பாகப் பருப்புகளில் காணப்படும் புரதங்களுக்குக் காற்றில் உள்ள நைட்ரஜனே காரணம். அதேபோலக் கால்நடைகள் தரும் பாலில் காணப்படும் புரதம் காற்றில் இருந்து கிடைத்ததே. வளிமண்டலத்தில் உள்ள காற்றில் 78 விழுக்காடு நைட்ரஜன் என்றால், நமது புவிப் பந்து நைட்ரஜன் காற்றுக் கடலில் அல்லவா மிதந்து கொண்டிருக்கிறது!

கட்டற்ற கதிரவன் ஒளியாற்றல், நிரம்பிக் கிடக்கும் நைட்ரஜன் சத்து, கடலிலும், மேகங்களிலும் அளவற்று உலவி வரும் நீர் வளம், இவை அனைத்தும் இருந்தும் இன்னும் மக்கள் சமூகம் பட்டினியால் சாகின்றதே, இதுதான் நமது வளர்ச்சியின் திசைவழியா? அப்படியென்றால் நாம் போகின்ற பாதை தவறாக அல்லவா உள்ளது? இதற்கான தீர்வுதான் என்ன?

(அடுத்த வாரம்: சுழற்சிகள் தரும் நன்மைகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in