

இரண்டு விஷயங்கள் இல்லாமல் தீபாவளி கிடையாது. ஒன்று இனிப்புகள், மற்றொன்று ஆடை. தீபாவளிக்குப் புத்தாடை உடுத்த கடை கடையாக ஏறி இறங்குகிறோம்.
ஆனால், நாம் உடுத்தும் உடையின் பின்புலம் என்ன? அவை எப்படித் தயாராகின்றன என்பதைப் பற்றி அறிந்திருக்கிறோமா? அது மட்டுமில்லாமல் அதிக விலையில் இருந்தால் உடை நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் பலரது மனதில் பதிந்திருக்கிறது. இந்தத் தீபாவளிக்குக் கொஞ்சம் மாத்தி யோசித்துப் பார்க்கலாமே.
ஆடை மீட்டெடுப்பு
நாம் விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும், ஒரு குடும்பத்துக்கு வாழ்வைத் தரும் என்பதைப் பல நேரம் நாம் உணர்வதில்லை. கைத்தறி ஆடைகளில் இதை நேரடியாக உணரலாம். அப்படிக் கைத்தறி நெசவாளர்கள் நெய்த காதி ஆடை, இயற்கை பருத்தி ஆடைகள் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ரீஸ்டோர் இயற்கை அங்காடியில் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
"இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியால் நெய்த ஆடை, காதி ஆடை போன்றவை நீண்ட பாரம்பரியம் கொண்டவை. நமது கைத்தறி நெசவாளர்களுக்கு இவை வாழ்க்கை அளித்து வருகின்றன. இதுபோன்ற ஆடைகளின் விற்பனை குறைவதால் பருத்தி விவசாயியும் கைத்தறி நெசவாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய தொழிலை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மற்றொரு பக்கம் இந்த ஆடைகள் நம் உடலுக்கு மட்டுமல்லாமல், இயற்கைக்கும் உகந்தவை" என்கிறார் ரீஸ்டோர் கடையை நிர்வகிக்கும் குழுவைச் சேர்ந்த அனந்து.
சீர்கேட்டைத் தடுப்போம்
கை நெசவு, கை நூற்பு, இயற்கை சாயம் போன்றவை உடலுக்குக் கெடுதல் விளைவிக்காதவை. இதனால் தோல் அலர்ஜி ஏற்படுவதில்லை. பி.டி. காட்டன் மற்றும் செயற்கை வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட துணிகள், தோல் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவை சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றன. கலர் கலராக ஆடைகள் வேண்டும், ஏற்றுமதி வேண்டும் என்று விரும்பியதால் திருப்பூரில் உள்ள நொய்யல் நதி சீரழிந்து கிடப்பது நம்முன் உள்ள நேரடி சாட்சி.
இந்தப் பின்னணியில் இயற்கைக்கும் உடலுக்கும் உகந்த ஆடை நமக்குக் கிடைக்கும்போது, அதை வாங்குவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? நாம் பசியாறவும், உடலை அழகுபடுத்திக் கொள்ளவும் உதவும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட, அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதுதானே சிறந்த கைமாறாக இருக்கும்.
தொடர்புக்கு: contact@tula.org.in / 9790900887