

அனைத்துக்கும் ஆதாரமான விதையும், விதைப் பன்மயமும் நம் உழவர் கையிலும் சமூகத்தின் சொத்தாகவும் இருக்க வேண்டியது ஏன் என்பதைப் பார்த்தோம். இன்றைய சூழலில் எப்படி நம் உழவர்களின் கைகளை விட்டு அகன்று விதை ஒரு வியாபாரப் பொருளாக, பெருலாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறுகிறது, அதை எதிர்கொள்ள எப்படி நாடு முழுவதும் பல விவசாயிகள் நமது மரபு விதைகளையும் விதை பன்மயத்தையும் தங்கள் முயற்சியால் மீட்டெடுக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.
நாம் என்ன செய்யலாம்?
சரி, ஒரு நகரவாசியாக, நுகர்வோராக இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும்? இப்படி நமது பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்போரிடமும், நமது பாரம்பரிய ரகங்களை விற்பனை செய்யும் இயற்கை அங்காடிகளிலிருந்தும் வாங்கலாம். அரிசியாக இருந்தால் நமது பண்டைய ரகங்களான கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார், பூங்கார், மாப்பிளைச்சம்பா, காட்டுயாணம், கவுணி என பலவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். அவற்றின் மருத்துவ குணம், சத்து போன்றவற்றால் பயன் பெறலாம்.
அதைவிட முக்கியமாக, நமது மாடித் தோட்டங்களில், சமூக கூடங்களில் மரபு விதைகளைப் பராமரிக்கலாம். அவற்றை கொண்டு நமது சமையலறைக்கு நல்ல சத்துள்ள, அருமையான, சுவை மிகுந்த காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
கியூபா காட்டிய வழி
1989-ல் சோவியத் ரஷ்யா தகர்ந்தபோது, ஒரே நாளில் டீசல், ரசாயன உரங்கள் இல்லாத நிலைக்கு கியூபா தள்ளப்பட்டது. அப்போது வீட்டு தோட்டங்களிலிருந்தும், பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள், பூங்கா, மருத்துவமனைகள் என பொது இடங்களிலிருந்தும் தலைநகர் ஹவானாவுக்குத் தேவையான 80% காய்கறிகள் இப்படித்தான் வந்தன - அதுவும் 100% இயற்கையாக நஞ்சில்லாமல்! அது சாத்தியம்தான் என்பதற்கு இந்த ஒரு சாட்சி போதாதா?
மேலும் இன்றைய சூழலில், நல்ல விதைகளைப் பராமரிப்பது உழவர்களுக்கே பெரும் சவாலாக உள்ளது. நவீன விதைகள், சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட விதைகளால், பல மரபு விதைகளின் விதைத் தூய்மை சீர்கெட்டுவிடுகிறது.
பருத்தி விதைப் பஞ்சம்
இன்று நமது நாட்டில் பருத்தி விதையின் கதி இதுதான். 95% பி.டி. என்னும் மரபணு விதைகளே புழக்கத்தில் உள்ளன. அதனால் நமது பாரம்பரிய விதைகள் அழிந்து/தொலைந்து போயின.
நமது வேளாண் பல்கலைகழகங்களிலும், வேளாண் துறைகளிலும்கூட நல்ல விதைகள், பாரம்பரிய விதைகள் கலப்பு இல்லாமல் இல்லை என அந்நிறுவனங்களே தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பி.டி. பருத்தி பெரிய அளவில் தோல்வி அடைந்தபோது பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் அடுத்த பருவத்தில் பி.டி. பருத்தி விதைக்க வேண்டாம் என்றும் உள்ளூர் மரபு விதைகளை பயன்படுத்தவும் உழவர்களுக்கு அறிவுறுத்தின. ஆனால், அத்தனை ஏக்கருக்கும் தேவைப்படும் மரபு விதைகள் இருப்பில் இல்லை!
அதனால், நமது விளைநிலங்களிலிருந்து விதைகளை சேமிப்பதைவிட, மாடித்தோட்டங்களிலும், நகரப் பொது இடங்களிலிருந்தும் நல்ல, தூய விதைகளைக் காக்கலாம். அப்படி நாம் காப்பாற்றிய விதைகளை நமது பரிசாக/நன்கொடையாக நமது உழவர்களுக்கு அளிக்கலாம். நமக்காக சிரமேற்கொண்டு உணவு உற்பத்தி செய்யும் நமது உழவர்களுக்கு இதைச் செய்வது நம் கடமையல்லவா?
நமது அடுத்த தலைமுறைக்கும், சுற்றுசூழலுக்கும், விதை பன்மயத்துக்கும் இதுவே நாம் எடுக்கும் பெரிய முயற்சி.
பகிர்ந்துகொள்வோம்
அப்படிச் சேமிக்கப்பட்ட விதைகளை பரிமாறிக்கொள்ளவும், விதைத் திருவிழாக்களைத் திட்டமிட்டு விதைகளை பகிர்ந்துகொண்டும், பரிமாறியும், பெருக்கியும் சமூகத்தின் கையில் விதைகளை வைத்துக்கொள்ளலாம்.
இன்று நாடெங்கும், ஏன் உலகெங்கும்கூட மாடித்தோட்ட குழுக்கள் தீவிரமாகவும் சிறப்பாகவும் அனைத்தையும் (நெடுங்காலப் பயிர்கள் தவிர்த்து) இயற்கை முறையில், ரசாயனங்கள், நஞ்சில்லாமல் விளைவித்துப் பயனடைந்தும் பரப்பியும் வருகின்றனர். குழுக்களுக்குப் புதிதாக வருவோர்க்கு பயிற்சிகள் ஏற்பாடு செய்து, அறிவு பரிமாற்றமும் செய்துகொள்கின்றனர்.
அதேபோன்று, சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய விதைத் திருவிழாவில் நகரவாசிகளுக்காக, பல வகை மாடித்தோட்டப் பயிர்களும், பயிற்சிகளும், அறிவுப் பரிமாற்றமும் நடைபெறும்.
பாரம்பரியத் திருவிழா
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் விதைப் பன்மயத் திருவிழா நடைபெறுகிறது. அதில் ஆயிரக்கணக்கான விதைகள் காட்சிப்படுத்தப்படும்.
அது மட்டுமின்றி பாரம்பரிய உணவு, பாரம்பரிய கருவியிசை, மண்பானை செய்வது/பயிற்சி, மண் பாண்ட விற்பனை, வல்லுநர்கள் பேச்சு, மூலிகை பானங்கள், பாரம்பரிய உணவுப் பண்டங்கள், இயற்கை ஆடைகள், இயற்கைச் சாயம் செயல்விளக்கம்/பயிற்சி, கையால் நூல் நூற்கும் பயிற்சி என பலவும் இடம்பெறும்.
பல உணவுப் பயிர்களும், முக்கியமாக சிதைந்தும் தொலைந்தும் வரும் மருத்துவப் பயன்கள் கொண்ட மூலிகைச் செடி வளர்ப்புமுறைகளும், கன்றுகளும்கூட காட்சிக்கு வைக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: 94449 26128; 98408 73859
(நிறைந்தது)
கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர். | தொடர்புக்கு: organicananthoo@gmail.com