

வேளாண் அறிவியலை நோக்கிய ஆதிமனிதனின் பயணம் மண்ணைத் தோண்டிக் கிழங்குகளைத் தேடியும் பின்னர் அவற்றைப் பிற்காலத் தேவைக்காகச் சேமிப்பதிலும் ஆரம்பமானது. தாவரங்கள் மண்ணுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் கிழங்கு வகைகளை மனிதனும் விலங்கினங்களும் தேடுவதற்கு முக்கியக் காரணம் அவை எல்லாப் பருவத்திலும் கிடைப்பது மட்டுமில்லாமல், அவற்றில் அடங்கியுள்ள அளப்பரிய ஆற்றலுக்காகவே.
எளிதில் அழுகாதது
பொதுவாகக் கிழங்கு வகைகளில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மாவுச்சத்துகள், புரதம், வைட்டமின் சி, தயமின், ரிபோபிளேவின், நியாசின், ஆக்சலேட்டுகள் அதிகம் காணப்படுவதால் மிகச் சிறந்த உணவாகின்றன. சில கிழங்குகளின் தண்டு, குருத்துப் பகுதியும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேலும் காய்கறிகள், பழங்களைப்போல் அவை எளிதில் அழுகிவிடுவதில்லை.
தமிழகத்திலும் கிழங்கு வகைகள் பெரும்பாலும் மானாவாரியாகக் குறைந்த இடுபொருளைப் பயன்படுத்தித் தொன்றுதொட்டுப் பயிரிடப்பட்டுவருகின்றன. கிழங்குகளிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான சந்தைமதிப்பு, புதிய தொழில்நுட்பங்களின் வரவால் அதிகரித்த பின்னரே, பலரின் கவனமும் அவற்றின் பக்கம் திரும்பியுள்ளது.
மானாவாரி பயிர்
தகுந்த தட்பவெப்பம், மண், வளரும் சூழல் நிலவுவதால் அந்தமான் நிகோபார் தீவுகளில் கிழங்கு வகைகள் பல்கிப் பெருகி மாபெரும் பன்முகத்தன்மையோடு காணப்படுகின்றன.
இங்குக் குறிப்பாகச் சர்க்கரைவள்ளி, சேம்பு, சேனை, கருணை, பெருவள்ளி, சிறுவள்ளி, மரவள்ளிக் கிழங்குகள் விளைகின்றன. நிகோபார், சோம்பன் இன மக்களின் முக்கிய உணவான நிகோபார் கிழங்கு வகைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இத்தீவுகளில் தென்னை மரங்களுக்கு இடையிலும், வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளுக்குள்ளும் கிழங்கு வகைகள் மானாவாரியாக வளர்க்கப்படுகின்றன அல்லது ஊக்குவிக்கப்படுகின்றன.
கிழங்கு விழா
இத்தீவுகளில் வாழும் அனைத்துப் பழங்குடியினரின் முக்கிய உணவென்பதால் இவற்றை வளர்க்கும் முறைகளை அவர்கள் அறிந்துள்ளதோடு, பிற்காலத் தேவைக்காக ஒரு பொக்கிஷம்போல் பரம்பரையாகப் பாதுகாத்தும் வருகின்றனர்.
இத்தீவுகளைப் பொறுத்தவரை சந்தை மதிப்பைவிட உணவுத் தேவை மற்றும் எல்லாச் சூழலிலும் வளரும் தன்மைக்காகவே கிழங்கு வகைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் இவை பருவநிலை மாற்றத்தைத் தாங்கி உணவுத் தன்னிறைவுக்கு நிலைப்புத்தன்மையைத் தர வல்லவை. எனவேதான், நிகோபார் பழங்குடியினர் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கிழங்குத் திருவிழாவை ‘பெருநாள் விழாவாக’ (படாதின்) கொண்டாடி மகிழ்கின்றனர்.
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com