

தமிழகத்தில் உள்ள மீனவ மக்களில் 25 சதவீதம் மீனவர்கள், இங்கே உள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கிடைக்கப்பெறும் மீன்வளத்தில் 35 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளது. குளச்சல் துறைமுகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்த கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிபோகும்” என்று வருத்தத்துடன் பேசத் தொடங்குகிறார் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின். பல ஆண்டுகாலமாகத் தமிழகக் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்துவருபவர். கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதற்காகக் களத்திலும் எழுத்து வழியாகவும் தொடர்ந்து இயங்கிவருபவர்.
தமிழகத்தில் கடலைச் சார்ந்து வாழும் மக்களின் நிலை எப்போதும் தத்தளிப்புக்கு உள்ளாகிவருகிறது. மீனவர் பிரச்சினை, இலங்கை கடற்படையின் தாக்குதல், சுனாமி, அணுமின் நிலையம், கடல் அரிப்பு ஆகியவற்றின் வரிசையில் இப்போது ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய பிரச்சினை குளச்சல் துறைமுகம்.
பெயர்தான் குளச்சல் துறைமுகம். என்றாலும், அந்தத் துறைமுகம் அமையவிருக்கும் இடம் குளச்சல் அருகே உள்ள இனயம். அதுவும் ஒரு மீனவக் கிராமம் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.
பாறைத் தடுப்பும் மீன் வளமும்
வரலாற்றுரீதியாகப் பார்க்கப்போனால் குளச்சல் பகுதி, பல நூற்றாண்டுகளாகவே பல்வேறு வடிவங்களில் பாதிப்புகளைச் சந்தித்துவருகிறது. கி.பி. 1741-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானப் படையினருக்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி படையினருக்கும் இடையே குளச்சல் பகுதியில் போர் மூண்டது.
‘அடுத்து 1873-ம் ஆண்டு குளச்சல் பகுதியில் ஒரு கப்பல் விபத்து ஏற்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பாறைகள் அதிகமாக இருக்கும் பகுதியில்தான் மீன் இனங்களும் பல்லுயிர்தன்மையுடன் இருக்கும். அந்தப் பாறைகளை அகற்றும்போது அவற்றைச் சார்ந்திருக்கும் மீன் இனங்களும் அழியும் என்ற சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
தவிர, ‘கடலரிப்பு காரணமாகக் கடலினுள் சென்ற பாறைகள் இயற்கையான தடுப்பரண்கள்போல் கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன' என்று இன்னொரு பரிமாணத்தையும் ‘துறைவன்' நாவலாசிரியர் கிறிஸ்டோபர் ஆன்றணி பதிவு செய்துள்ளார்.
மீன்பிடி துறைமுகம் எங்கே?
தமிழகத்தில் இருக்கும் துறைமுகங்களில் இயற்கையாகவே அமைந்த, ஒரே துறைமுகம் குளச்சல் மட்டும்தான். அது மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற பகுதியாக இருந்துவருகிறது. கூடுதலாகச் சில வசதிகளை ஏற்படுத்தினால் மீனவர்கள் பயனடைவார்கள் என்ற காரணத்தால், குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
‘நாங்களும் அதைத்தான் கொண்டுவருகிறோம்' என்று அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாகச் சொல்லிவந்தனர். அதற்கு இந்த ஆண்டுதான் அனுமதி கிடைத்திருக்கிறது.
ஆனால் குளச்சலில் அமையப் போவது மீன்பிடி துறைமுகமா என்றால், அதுதான் இல்லை. மீன்பிடி துறைமுகம் என்ற போர்வையில், சரக்கு கையாளப்படும் வணிகத் துறைமுகம்தான் கொண்டு வரப்படுகிறது.
குளச்சல் துறைமுகத்துக்கு அனுமதி கொடுப்பதற்குச் சில காலம் முன்னர்தான் கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் பகுதியில் துறைமுகம் கட்ட அனுமதிக்கப்பட்டது. விழிஞ்ஞம் துறைமுகத்தைத் தனியார் நிறுவனம் கொண்டுவர, குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது.
பதில் இல்லாக் கேள்விகள்
“மத்திய அரசு கொண்டுவருவதாகச் சொன்னாலும்கூட, அது முழு உண்மை அல்ல. துறைமுகக் கட்டுமானத்தைப் பொறுத்தவரையில் ‘பில்ட் - ஆபரேட் - டிரான்ஸ்ஃபர்' (Build - Operate - Transfer (BOT - போட்)) அல்லது ‘பில்ட் - ஓன் - ஆபரேட் - டிரான்ஸ்ஃபர்' (Build - Own - Operate - Transfer (BOOT - பூட்)) ஆகிய இரண்டு விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அநேகமாக இங்கு அமையவிருக்கும் துறைமுகம் இரண்டாவது முறையின் கீழ், தனியார் நிறுவனம் மூலமாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படலாம். அப்படி நடந்தால், சுமார் நூறு ஆண்டுகளுக்குத் தனியார் நிறுவனம்தான் அதை நிர்வகிக்கும்” என்கிறார் வறீதையா.
இதுவரையில், இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறதா? சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சமூகத் தாக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? அப்படிச் சமர்ப்பித்திருந்தால், அவற்றை ஏன் இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.
மணல் கொள்ளைக்கு வழி?
“சென்னையில் உள்ள மெரினா கடற்கரை ஒரு செயற்கைக் கடற்கரை. 1881-ம் ஆண்டு சென்னைத் துறைமுகம் திறக்கப்பட்டது. துறைமுகக் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மெரினா கடற்கரை உருவானது. அதற்கு முக்கியக் காரணம் கடல் அரிப்பு. ஒரு சின்ன மாற்றத்தைக் கடலில் ஏற்படுத்தினால், அதனால் உருவாகும் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு, இது நல்ல எடுத்துக்காட்டு.
தமிழகக் கடற்கரைப் பகுதியின் எட்டு சதவீதம் கன்னியாகுமரி பகுதியில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே மிகவும் சுவையான மீன் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. குளச்சல் துறைமுகம் வந்தால், கன்னியாகுமரிக்கு அந்தப் பெருமை இருக்காது.
துறைமுகம் கட்டக் கடலை ஆழப்படுத்த வேண்டும். குளச்சல் கடல் பகுதி ஏற்கெனவே ஆழமான பகுதிதான். எனினும், துறைமுகம் கட்ட நிலம் தேவை. அதற்காகக் கடற்கரையில் ஓரளவும், கடலுக்குள் பெருமளவும் கையகப்படுத்தப்படும். கடலை ஆழப்படுத்தும்போது மணலைத் தோண்டினால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைக் கொண்டுவரும். ஏற்கெனவே, மணவாளக்குறிச்சி போன்ற பகுதிகளில் மணல் தோண்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
கப்பல்கள் வந்து செல்வதற்கு ஏற்பக் கடல் ஆழத்தை நிர்வகித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடல் எப்போதும் உயிர்ப்புள்ளது. அலையும், நீரோட்டமுமே அதற்குச் சாட்சி. கடலில் ஒரு இடத்தில் ஆழம் ஏற்பட்டால், தொடர்ந்து அங்கு வண்டல் மண் படிந்து கொண்டேயிருக்கும். அதில் அரிய வகை தாதுகள் நிறைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆழத்தை அதிகப்படுத்த வண்டல் மணலைத் தூர்வாரி கடற்கரையில் கொட்டினால், அது மணல் கொள்ளைக்கு வழி திறப்பதாக அமையும்,” என்கிறார் வறீதையா.
பறிபோகும் மீன்வளம்
கிறிஸ்டோபர் ஆன்றணி தனது வலைப்பூவில் இந்தத் துறைமுகத் திட்டம் தொடர்பாக மீனவர்கள் சந்திக்கும், இன்னொரு முக்கியப் பிரச்சினையை அலசுகிறார். ‘கரையில் மட்டுமல்லாது கடலிலும் பாறைகள் நிறைந்திருக்கும். அந்த இடங்களில் மீன் இனங்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும். இந்தப் பகுதியில் மீனவர்கள் வலைகளை வீசினால் அதிக அளவில் மீன்கள் அகப்படும். சில சமயம் பாறைகளில் வலை சிக்கி அறுந்தாலும், வலை அங்கு மட்டுமே இருக்கும்.
இந்தத் துறைமுகம் வந்தால், கப்பல் போக்குவரத்து அதிகமாகும். அப்போது மீனவர்களின் வலைகளைக் கப்பல்கள் அறுத்துவிட வாய்ப்பு உண்டு. அந்த வலைகள் கடலின் நீரோட்டத்துடன் போகும். இந்த வலைகளில் மீன்களும் மீன் குஞ்சுகளும்கூடச் சிக்கலாம். இதனால் மீன்கள் அழுகிக் கடல் சூழலை மாசுபடுத்துவதோடு, மீன் இனப்பெருக்கத்தையும் பாதிக்கலாம்' என்கிறார் ஆன்றணி. இது மீனவர்களின் அடிமடியிலேயே கைவைப்பதைப் போன்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
இயற்கைக்கு விலை உண்டா?
சரி, இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்த உள்ள இந்தத் துறைமுகத்தைக் கொண்டுவர அரசு ஏன் துடிக்கிறது? அதற்குப் பதில் சொல்கிறார் வறீதையா.
“விழிஞ்ஞம் பகுதியில் ஒரு துறைமுகம் அமையும். அதிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் குளச்சல் துறைமுகம் அமையும். இவ்வளவு நெருக்கத்தில் அடுத்தடுத்து எதற்கு இரண்டு துறைமுகங்கள்? காரணம், கொழும்புவுக்கு வரும் பன்னாட்டு கப்பல்கள் இலங்கைக்குத் தரும் வர்த்தகத்தை, இந்தியாவுக்கு இழுக்கலாம் என்ற நினைப்புதான்.
ஆனால், அந்தக் கனவு பலிக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால், கொழும்பு துறைமுகங்கள் நவீன வசதிகளுடன் குறைந்த கட்டணத்துக்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. அப்படியிருக்கும் நிலையில் விழிஞ்ஞம், குளச்சல் துறைமுகங்கள் வந்தால் பன்னாட்டு வர்த்தகத்தை ஈர்க்கும் வாய்ப்பைவிட சில்லறைத்தனமான போட்டிகளை அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது!” என்றார்.
சரி, இந்தப் பிரச்சினை களுக்கெல்லாம் என்னதான் தீர்வு? பல கோடி ரூபாயைக் கொட்டிப் புதிய துறைமுகத்தைக் கட்டுவதைவிட, ஏற்கெனவே தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தலாம். அதற்கான செலவு மிகவும் குறைவு என்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என்பது மீனவர்களின் கருத்து.
'இந்தத் திட்டத்தின் மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் துறைமுகம் அமைந்தால், அதனால் வரும் லாபம் பல லட்சம் கோடி ரூபாய்', என்றெல்லாம் உரக்கப் பேசுகிறது அரசு. ஆனால், இந்தத் திட்டால் அழியும் இயற்கை வளங்கள் விலைமதிக்க இயலாதவை, எவ்வளவு விலை கொடுத்தாலும் திரும்ப உருவாக்க முடியாதவை என்பதை எப்போது அரசும் நாமும் உணரப் போகிறோம்?