கானுலா: வாட்டும் வெயிலில் வேங்கையின் வருகை

கானுலா: வாட்டும் வெயிலில் வேங்கையின் வருகை
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் கபினி வனச்சரக அலுவலகத்தில், காட்டுலா பேருந்துக்காக நாங்கள் காத்திருந்தபோது, நண்பகலைக் கடந்து மணி நான்கைத் தொட்டிருந்தது. தலைக்கு மேலே உள்ள அத்தி மரக் கிளையொன்றில் ஒரு செம்பருந்து கம்பீரமாக அமர்ந்திருந்தது.

எதிரில் உள்ள மரத்தில் அப்பறவை கூடு கட்டியிருந்ததால், மனிதர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் எங்கிருந்தாலும் பறந்து வந்து, அந்த அத்தி மரத்தில் உட்கார்ந்து காவல் காக்கும் என அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். நாங்கள் ஆர்வத்துடன் அச்செம்பருந்தைப் படமெடுக்க, மற்றவர்களோ அலட்டிக் கொள்ளவேயில்லை. கபினி வனச்சரகத்தில் அது வழக்கமான காட்சி என்று அப்போதுதான் புரிந்தது.

கடைசிப் புகலிடம்

நான்கரை மணிக்குப் பேருந்து வந்தது. இருபது பேர் அப்பேருந்தில் ஏறினோம். சோதனைச் சாவடியைக் கடந்து கபினி நாகரஹொளே காட்டுக்குள் பேருந்து நுழைந்தது. மார்ச் மாதப் பிற்பகுதியிலேயே அப்படியொரு வறட்சி. இலைகள் காய்ந்து காடு முழுவதும் பழுப்பும் சாம்பல் நிறமும் ஏறிப் போயிருந்தன.

நாகரஹொளே காட்டில் கோடையில் தண்ணீருக்காகக் காட்டுயிர்கள் நம்பியிருக்கும் ஒரே இடம் கபினி ஆறும், அதன் நீர்த்தேக்கப் பகுதியும்தான். ஆகவே அடுத்த மழைக்காலம்வரை புலி, சிறுத்தை உள்ளிட்ட இரைகொல்லி விலங்குகளும், மான், காட்டுப்பன்றி, காட்டெருது உள்ளிட்ட தாவர உண்ணிகளும் தாகம் தணிக்க வெளியே வருவதால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கபினியைச் சுற்றி இக்காட்டுயிர்களை எளிதில் பார்க்க முடியும்.

வழியெங்கும் காட்டுக் கோழிகள் யானை லத்திகளைக் கிளறி இரை தேடிக் கொண்டிருந்தன. பேருந்து கிளப்பிய புழுதியைச் சட்டை செய்யாமல், ஒரு பாம்புக் கழுகு தனது அலகால் இறகுகளைக் கோதி உன்னிகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தது. கபினி முழுவதும் நீக்கமற நிறைந்திருந்தது மந்தி.

தாகம் தணிக்க வந்த வேங்கை

பேருந்தின் இடப்பக்கம் கடமான்களின் வால் மேல் நோக்கி எழுவதைக் கண்ட ஓட்டுநர், சட்டென்று வண்டியை நிறுத்தினார். இரைகொல்லி விலங்கு வரப்போவதன் முதல் எச்சரிக்கை அது. ஒளிபடக் கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டோம். எங்கள் பேருந்தின் முன் ஒரு பெண் புலி காட்டுப் பாதையைக் கடந்து இடப்பக்கமுள்ள ஒரு மேட்டில் ஏறியது. அருகில் உள்ள நீர்க்குட்டையில் தாகம் தணித்துக்கொள்ள அது சென்றுகொண்டிருக்கிறது என்று ஓட்டுநர் கன்னடத்தில் தெரிவித்தார். அது நடக்க நடக்க, வண்டியைப் பின்னோக்கி இயக்கினார்.

புதருக்குள் மறைந்து, ஓரிரு விநாடிகள் கழித்துச் சரியாக அந்த நீர்க்குட்டை அருகில் அது வெளிப்பட்டது. ஓட்டுநர் எஞ்சினை நிறுத்தினார். மேட்டில் நின்றவாறே, குட்டையின் நீரை இரண்டு முறை நாவால் சோதித்துப் பார்த்துக் கவனமாக இறங்கியது. ஐந்து நிமிடம் ஆசை தீர ஒரு குளியல் போட்டு உடலைக் குளிர்வித்துக் கொண்டு, தாகம் தீர்த்துக்கொண்டு மீண்டும் மேட்டிலேறி காட்டுக்குள் மறைந்தது. இந்தக் காட்சியைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளின் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இணையில்லா இயற்கை

தொலைக்காட்சிகளில், கூண்டுகளில், படங்களில் எனப் பல இடங்களில் வேங்கைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதன் வாழ்விடத்தில், காட்டில் இயல்பான பழக்கவழக்கங்களுடன் ஒரு வேங்கையைப் பார்ப்பது, நிச்சயம் அரிதான காட்சி என்பதில் சந்தேகமில்லை. அப்புலியின் ஒவ்வொரு அங்க அசைவையும் மனதில் பதிவு செய்துகொண்டோம். வேங்கையைப் பார்த்த மகிழ்ச்சி, பேருந்து முழுவதும் கரை புரண்டு ஓடியது.

இறுதியாகக் கபினி ஆற்றின் கரையை ஒட்டியுள்ள புல்வெளியை வந்தடைந்தோம். மாலைச் சூரியனின் ஆரஞ்சு ஒளி படர்ந்த அப்புல்வெளியில் சிறு சுடர்களாக ஒரு யானைக் குடும்பமும், மான்களும், இரண்டு காட்டுப்பன்றிகளும், தூரத்தில் சில காட்டெருதுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. இது போன்ற அழகான காட்சிகளைக் காணத் தானே நூற்றுக்கணக்கான கி.மீ. பயணித்து வந்தோம். கானகங்கள் மனிதரின் வாழ்வில் எத்தகைய பெரிய பங்களிப்புகளைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதையும், இயற்கையின் அழகு, இயற்கையின் இயக்கங்களுக்கு இணையாக வேறொன்றும் இல்லை என்பதையும் உணர, வாழ்நாளில் ஒருமுறையேனும் கானகத்தை நோக்கி நமது பயணம் அமைய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in