

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதிலிருந்து கேரள மாநிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம், கேரளம், ஆந்திரம் கோவா, மஹாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதாக 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம்.
கஸ்தூரிரங்கன் கமிட்டி சிபாரிசுகளை எதிர்த்து கேரளத்தில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும் போராட்டத்தில் குதித்தன. அதேநேரம், சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க கஸ்தூரி ரங்கன் கமிட்டி சிபாரிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பதில் போராட்டங்களும் நடந்தன.
இதற்கிடையில், கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துவது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவித்தது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.
இந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதிலிருந்து கேரள மாநிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் மற்ற 5 மாநிலங்களில் இந்த நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்றும் 4-ம் தேதி இரவு திடீர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.
இந்த அறிவிப்பு, கஸ்தூரிரங்கன் கமிட்டி சிபாரிசுகளை எதிர்த்தவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் ஆதரித்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் போஸ்டர்களும் பளிச்சிடுகின்றன.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ``123 கிராமங்களில் உள்ள கட்டிடங்களையும் சர்வதேசப் பள்ளிக்கூடங்களையும் காப்பாற்றுவதற்காக காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கூட்டுச் சேர்ந்து கேரளத்துக்கு விதிவிலக்கு கொடுக்க வைத்திருக்கிறார்கள். அப்படியானால் அந்த 123 கிராமங்களில் மட்டும் வருங்கால சந்ததிக்கு எதுவும் இல்லாமல் அழித்து விடலாமா? கேரளத்துக்கு ஒரு நீதி மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதியா? ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருக்கும் வரை இவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அவர் பதவியிலிருந்து இறங்கியதும் காரியம் சாதித்திருக்கிறார்கள். இந்த ஜனநாயக மிரட்டலை எப்படி அனுமதிப்பது? மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கம்பம் அல்லது தேனியில் ஃபார்வர்டு பிளாக் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சிளோடு இணைந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்’’ என்றார்.