

ஒரு மேஜை மீதிருந்து வெள்ளை துணி ஒன்றை உருவுகிறார் டட்சுகோ ஒகவாரா. பிறகு மேஜையைக் கறுப்புத் துணியால் மூடுகிறார். தன் பையிலிருந்து சின்னச்சின்ன பொம்மைகளை எடுக்கிறார். பிறகு தானே உருவாக்கிய புதிய அரங்கத்தில் கண்மூடிப் பாடத் தொடங்குகிறார். அதாவது அவரிடமிருக்கும் ஆரஞ்சு நிற உடையணிந்த பொம்மையே பாடுகிறது. வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று சொல்கிறது அந்தப் பாடல்.
வாழ்க்கையின் இனிமையைப் பற்றி சொல்ல ஒகவாராவையும் அவரது கணவரையும்விட தகுதியானவர்கள் இந்த உலகில் வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். 30 வருடங்களாக இயற்கை விவசாயிகளாக எளிமையாக, இனிமையாக வாழ்ந்துவரும் தம்பதிகள். மார்ச் 2011இல் புகுஷிமாவில் நடந்த அணுஉலை விபத்து அவர்களது வாழ்க்கையிலிருந்த எளிமையையும் இனிமையையும் பறித்துச் சென்றுவிட்டது.
கதிரியக்கக் கசிவுக்குப் பயந்து வேறொரு ஊருக்குச் சென்ற அவர்கள், அவர்களுக்குப் பெரிதும் விருப்பமான விவசாயத்தைக் கைவிட்டு, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு வகைகளை விற்கும் கடையை நடத்திவருகிறார்கள். "அந்தப் பயங்கர நிகழ்வைக் காலஓட்டத்தில் மக்கள் மறந்துவிடுவார்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது" என்கிறார் ஒகவாரா, 3 ஆண்டுகள் கழித்தும் அந்தப் பயங்கர நினைவுகள் நெஞ்சை அழுத்த, தீராத வலியைக் கண்ணீராகச் சிந்தியபடி. "மக்களுக்கு எல்லாவற்றையும் நினைவுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். எனது பொம்மைகளைக்கொண்டு நான் நடத்தும் கதைசொல்லல் இத்துடன் முடிந்துவிடவில்லை. அது இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்."
இத்தனைக்கும் ரஷ்யாவில் செர்னோபில் அணுஉலை விபத்து நடந்ததிலிருந்தே இத்தம்பதிக்குப் புகுஷிமா பற்றிய பயங்கள் இருந்திருக்கின்றன. காமா கதிர்வீச்சை அளக்கும் கருவியை வீட்டில் வைத்திருந்த அவர்களை, ஜப்பான் அரசு அதிகாரிகள் சந்தித்துப் பயத்தைக் களைந்திருக்கிறார்கள். "ரஷ்யாவைவிட ஜப்பான் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்றார்கள். அவர்களை நம்பி அந்தக் கருவியை அணைத்துவைத்தோம். புகுஷிமா விபத்து நடந்த மூன்றாவது நாள் அந்தக் கருவியைத் திரும்பவும் இயக்கியபோது கதிரியக்கம் 50 மடங்கு அதிகமாக இருந்ததை உணர்ந்தோம்." என்கிறார் ஒகவாரா.
அழிவின் வாசல்
பிப்ரவரி 15ஆம் தேதி அதிகாலையில் ஜப்பானுக்குப் புறப்பட்ட எனது பயணம் இப்படி உணர்வுபூர்வமான கதைகளால் நிரம்பும் என்று எதிர்பார்க்கவில்லை. அணுஉலை விபத்து நேர்ந்த பகுதிக்குச் செல்வதால் விசாவுக்கான கட்டணத்தை ஜப்பான் தூதரகம் ரத்து செய்திருந்தது ஆச்சரியமளித்தது. விபத்து நடந்த அணு உலை இருக்கும் பகுதியிலிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது புகுஷிமா நகரம். தலைநகர் டோக்கியோவைவிட பத்து மடங்கு கதிர்வீச்சு அங்கு அதிகம்.
நகரத்துக்குள் நுழைந்த நொடியில் எங்கள் கையில் இரண்டு கருவிகள் திணிக்கப்பட்டன. கதிர்வீச்சின் அளவை கண்காணிக்கும் அந்தக் கருவிகளை எப்போதும் உடலில் பொருத்தியிருக்க வேண்டும். நாங்கள் தங்கியிருந்த அறையையே இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியில் வெளியிலிருந்து நாங்கள் எடுத்துவரும் காலணி உள்ளிட்ட பொருட்களை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம். அடுத்த பகுதிக்கு அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.
ஒகவாரா தம்பதியைப் போல வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் துறக்க முடியாமல் அதை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களைப் பார்ப்பதும், அவர்களது நிஜக் கதைகளைக் கேட்பதும் என் பயணத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது.
தாயின் பரிதவிப்பு
புகுஷிமா விபத்துக்கு முன்பு வரையில் மினாகோ சுகனோ ஒரு சாதாரணத் தாய். "நான் ஏன் கதிர்வீச்சு பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும்? எனக்கு மூன்று அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். செய்ய எத்தனையோ உருப்படியான வேலைகள் இருக்கின்றன" என்று சொன்னபடி வீட்டுக்குள் உலர்த்தியிருந்த துணிகளை மடித்து வைக்கத் தொடங்குகிறார். "ஏனென்றால், துணிகளை வெளியே காயப் போட முடியாது. கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டுவிடும்" என்கிறார்.
கடந்த மூன்று வருடங்களாக ஆபத்தான சூழலிலேயே இருப்பது போலச் சுகனோவுக்குத் தோன்றுகிறது. “அவர்கள் பிறந்து வளர்ந்த சூழலை, வீட்டைப் பிரிய மறுக்கும் எனது குழந்தைகளிடம் என்ன சொல்லிப் புரிய வைப்பேன்? கதிரியக்கம் என்று ஒன்று இருக்கிறது, அது உலகத்திலேயே பயங்கரமான ஆபத்து என்று சொன்னேன்...” ஆனால் அது அவர்களைச் சமாதானப்படுத்தவில்லை. அவரது மூத்த மகன் அழத் தொடங்கிவிட்டான்.
வீட்டை, பாட்டியை, நாயை என்ன செய்வது என்பது அவனது முக்கியமான கேள்வி. பாட்டி அங்குத் தங்கப்போவதாகப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். நாயும் அங்கேயே தங்கிவிட்டது. கணவருக்கு அதே நகரத்தில் வேலை என்பதால் கதிரியக்கம் குறைவாக உள்ள ஒரு பகுதிக்குத்தான் செல்ல முடிந்தது.
தானும் தன் குழந்தைகளும் விரும்பும் உயிர்ப் பாதுகாப்பு இனி எப்போதும் கிடைக்காது என்று சுகனோவுக்குத் தெரியும். ஆனால் அதை ஒவ்வொரு நாளும் மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கிறார். "இருட்டில் துழாவுவது போல நான் துழாவிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இணையத்தில் நிறைய வாசிக்கிறேன். நிறைய தெரிந்துகொள்கிறேன். எனக்கான வெளிச்சத்தை உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கடன் வாங்கிவிட முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லும் சுகனோவின் கண்களில் ஒரு தாயின் பரிதவிப்பு தெரிகிறது.
நகரத் தந்தை
நான் சந்தித்தவர்களில் முக்கியமானவர் புடாபா நகரின் மேயர் கட்சுடாகா இடோகவா. "அன்று பார்த்ததை என் வாழ்க்கையில் அதற்கு முன்பு எப்போதுமே கண்டதில்லை. என் அலுவலகத்தின் நான்காவது மாடியிலிருந்த ஜன்னல் வழியே, கடல் ஆர்ப்பரித்து எழுந்ததைப் பார்க்க முடிந்தது. வீடுகளும் மரங்களும் பேரலைகளின் கீழே சிக்கிக்கிடந்தன" என்று சொன்ன பிறகு இடோகவாவிடம் ஒரு ஆழ்ந்த அமைதி. தனது வாழ்க்கையை மாற்றிய ஒரு நாளைப் பற்றி பேசியபோது, அவரது முகத்தில் எந்தச் சலனத்தையும் பார்க்க முடியவில்லை. "அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் புடாபா சாலை வழியே, காரில் கடந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துக் கடந்திருந்தால் இன்று உங்களிடையே இருந்திருக்க மாட்டேன்" என்று சொல்லும் அவரிடம், அந்தப் பெருவிபத்தின் தாக்கம் மனதில் பேரமைதியை ஏற்படுத்திவிட்டதாகத் தோன்றியது.
விபத்து நடந்த நகரத்தின் மேயரான அவருக்குப் பொறுப்புகள் கடுமையாகி இருந்தன. அணுஉலை விபத்து நடப்பதற்கு முன் அந்த அதிமுக்கியமான கேள்வி ஒன்றை அரசாங்கத்திடமும் அணு உலையை நடத்திய டோக்கியோ எலக்டிரிக் பவர் கம்பெனியிடமும் (டெப்கோ) பல முறை எழுப்பிவந்திருக்கிறார் இடோகவா. "விபத்து நடக்காது என்று அடித்துச் சொல்கிறீர்களா?" என்று நான் கேட்டபோது, அவர்களிடமிருந்து ஒரே பதில்தான் எப்போதும் வந்தது. "மிக மிக உறுதியாக." ஆனால், தொழில்நுட்பத்திலும் துல்லியத்திலும் உலகை விஞ்சும் ஜப்பானில் இந்தப் பெருவிபத்து நடந்திருக்கிறது".
அரசாங்கம், டெப்கோ, நகர நிர்வாகம் ஆகிய மூன்று அமைப்புகளும் ஓர் கூட்டு ஒப்பந்தத்தை இட்டுள்ளன. அணுஉலையில் எந்த ஆபத்தும் நிகழாது என்று சொல்கிறது அந்த ஒப்பந்தம். "அதன்படி, விபத்துக்கு நான்தான் பொறுப்பு" என்று சொல்லும்போது, அவரது குரல் உடைந்து நொறுங்குகிறது.
விபத்து நடந்த பிறகு யாரையும் கலந்தாலோசிக்காமல் புடாபா நகரத்தைக் காலி செய்ய வேண்டும் என்று இடோகவா முடிவெடுத்தார். "மக்களின் அரசு மக்களைத்தான் முதலில் ஆதரிக்க வேண்டும்... எங்களது அரசோ அணுஉலை நிறுவனங்களையும் அணுசக்தியையும் ஆதரித்தது. நாங்கள் குற்றவாளிகளாக உணர்ந்தோம். அதனால் என்ன மாறிவிடப் போகிறது. இந்தப் பெருவிபத்து எங்களது அழகான வாழ்க்கையை, அதை நாங்கள் வாழ்ந்த விதத்தைக் குலைத்துப் போட்டுவிட்டது" என்கிறார் அவர்.
கதிரியக்கக் கசிவு என்பது அவரைப் பொறுத்தவரையில் மன்னிக்க முடியாத கொலைக் குற்றம். அவரைப் பொறுத்தவரையில் புகுஷிமா மக்கள் கதிரியக்கத்துடன் பெரும் யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். "ஜப்பானில் வாழும் சிலர் கதிரியக்கப் பாதிப்பு இல்லாமல் வாழ முடியும். மற்றவர்களால் அப்படி வாழ முடியாது. எங்களது அரசியல் சாசனப்படி இது முறையில்லை. எங்களது தேசத்திலேயே, நான் உட்படப் புடாபா, புகுஷிமா மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அரசு எங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட அநீதி" என்னும் அவரது பேச்சு கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.
வாழப் பிரியம்
இப்படி புகுஷிமாவின் சாதாரணக் குடிமக்கள் முதல் மேயர் வரை எல்லா மனிதர்களிடத்திலும் வாழ்க்கையின் மீதான அலாதி மரியாதையையும் பிரியத்தையும் ஒருசேரப் பார்க்க முடிந்தது. ஒரு பேரழிவுக்குப் பிறகு மிச்சமாகக் கிடைத்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டுமென்ற ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது. "எங்களது தனிப்பட்ட வரலாற்றின் அழிவு இது" என்று, தனது குடும்ப வரைபடத்தைக் காட்டிச் சொல்கிறார் இடோகவா.
"எங்களது பெற்றோர் எங்களிடம் ஓர் அழகான புடாபா நகரத்தை ஒப்படைத்தார்கள். எங்களது குழந்தைகளுக்கு அதை நாங்கள் அப்படியே தர முடியவில்லையே" என்பதுதான் இடோகவாவின் தீராத ஏக்கம்.
எங்களுக்காகக் கிதார் இசைத்துக்கொண்டிருக்கும் கணவரைப் பார்த்துக்கொண்டே இயல்பாக ஒரு கேள்வியை எழுப்புகிறார் ஒகவாரா. "கதிர் வீச்சு இல்லாத வானத்தை நானோ எனது சந்ததிகளோ என்றைக்காவது பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?" ஒருபோதும் பதில் சொல்லிவிட முடியாத கேள்வி அது.
- கோ.சுந்தர்ராஜன், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: sundar@hnsonline.com