மலர் கண்காட்சிக்குத் தயாராகுமா பிரையண்ட் பூங்கா?

மலர் கண்காட்சிக்குத் தயாராகுமா பிரையண்ட் பூங்கா?
Updated on
1 min read

கொடைக்கானலில் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு மழையில்லாமல் கடும் குளிர், பனிக்காற்று அடிப்பதால் பிரையண்ட் பூங்காவில் தயாராகும் மலர்ச் செடிகள் அடுத்த ஆண்டு கண்காட்சியில் பூத்துக் குலுங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர்க்கண்காட்சி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு மே மாதம் 53-வது மலர் கண்காட்சியைக் கொண்டாட தோட்டக்கலைத் துறை சார்பில் தற்போது பிரையண்ட் பூங்காவில் 200 வகையான பழைய மற்றும் புதுவகை மலர்ச் செடிகளை நடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் செடிகளில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு காலத்தில் பூத்துக்குலுங்கும் தன்மை கொண்டவை. அதனால், அந்தச் செடிகளை அந்தந்த காலத்தில் நட்டு மலர் கண்காட்சி விழாவில் பிரையண்ட் பூங்காவில் ஒட்டுமொத்த செடிகளிலும் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மலர்கள் பூத்துக் குலுங்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே மே மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவில் மொத்தம் 4 லட்சம் மலர் செடிகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் நடப்பாண்டு பருவமழை முற்றிலும் பெய்யவில்லை. அதனால், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் குளிர், பனிக்காற்று வீசுவதால் விவசாயப் பயிர்கள், மலர்ச் செடிகள் கருகி பாதிப் படைந்துள்ளன. பிரையண்ட் பூங்காவில் கண்காட்சிக்காக தயார் செய்யப்படும் மலர்ச் செடிகள், நாற்றுகள் நடும் பணி குளிரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால், 2014-ம் ஆண்டு கண்காட்சியில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் தயாராகி பூத்துக்குலுங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2,000 டேலியா செடிகள் இறக்குமதி

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜாமுகமதுவிடம் கேட்டபோது அவர் கூறியது:

தற்போதுவரை பிரையண்ட் பூங்காவில் கண்காட்சிக்காக 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன. தொடர்ந்து நடவுப்பணி தீவிரமாக நடைபெறுகிறது. பனியால் நிச்சயமாக மலர்ச் செடிகள் பாதிக்கப்படத்தான் செய்யும். நேரடியாக பனியின் தாக்கம் செடிகள் மீது படாமல் பாதுகாக்க நிழல்வலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஓரளவு மலர்ச் செடிகளை பனியின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொடைக்கானல் மலர் கண்காட்சிக்காக இந்த ஆண்டு புதுவரவாக ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் இருந்து 2,000 டேலியா மலர்ச் செடிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை சில நாள்கள் பதப்படுத்தி பாதுகாத்து அதன் பின்னர் பூங்காவில் நடுவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in