Last Updated : 08 Feb, 2014 12:27 PM

 

Published : 08 Feb 2014 12:27 PM
Last Updated : 08 Feb 2014 12:27 PM

வெப்பத்தைத் தடுக்கும்
 வெள்ளைப் பூச்சு

ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும்.

இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மேற்கூரைகளை அடர் வண்ணங்களில் பூசுவது வழக்கம்.

அடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும்தன்மையுடைது. வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் ஃபேனை போட்டவுடன் உஷ்ணக் காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் அடர் வண்ணப் பூச்சு தேவையற்றதே.
இதற்கு மாற்றாக வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது. வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம்.

இதெப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்? சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.

வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும். இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் . இதெல்லாம் நேரடி பயன்கள். ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்.
இப்போது மேலே உள்ள தலைப்பையும் முதல் பத்தியையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x