

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகளில் பெரம்பலூர் மாவட்டம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தெரியவந்துள்ளது.
மானாவாரி விவசாயத்துக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பருவ நிலை மாற்ற பின்னடைவு விவசாயத்துக்கான தேசிய முன்முயற்சி' எனும் திட்டத்தின்கீழ் வெளியான வரைபடத்தில் இது தெரியவந்துள்ளது.
பருவ நிலை மாற்றத்தால், நிலத்தடி நீர் குறைதல், மழைக்காலங்கள் மாறுபடுதல் போன்ற ஏராளமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. இவை விவசாயத்தை பெருமளவில் பாதிக்கின்றன. ஆகவே, இந்த பருவ நிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவாறு என்ன வகையான பயிர்களை விளைவித்தால் நன்மை பயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டு அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி அவற்றை இந்த முன் முயற்சியின் மூலம் செயல்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.
கடந்த 30 ஆண்டுகளில் பருவ நிலை மாற்றத்தின் பல்வேறு பின் விளைவுகளான மழைக்காலங்கள் மாறுபடுதல், நிலத்தடி நீர்வளம் குறைதல் போன்றவை நாடு முழுக்க என்ன வகையான மாற்றங்களை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து 'பருவ நிலை மாற்ற பாதிப்பு வரைபடம்' ஒன்றை இந்த நிறுவனம் திங்கள்கிழமை (30-ம் தேதி) வெளியிடுகிறது.
சமீபத்தில் சென்னை வந்தி ருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் வெங்க டேஸ்வரலு ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
ஒரு மாவட்டத்தின் வெப்ப அளவு மற்றும் மழை வரத்து, வெள்ளம், வறட்சி ஏற்படக்கூடிய தன்மை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினோம்.
அதில் பருவ நிலை மாற்றத்தால் தேசிய அளவில் அதிக பாதிப்புக்கு உள்ளாகிற மாவட்டமாக ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம், தேசிய அளவில் 28-வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளது. அரியலூர் மற்றும் சேலம் மாவட்டங்கள் முறையே இரண்டாம் (தேசிய அளவில் 39), மூன்றாம் (தேசிய அளவில் 70) இடங்களில் உள்ளன என்றார்.
மேலும், ‘பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிர் செய்து விவசாயம் செய்ய வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் இந்த வரைபடம் பயன்படும்’ என்றும் அவர் கூறினார்.