

நறுமணப் பயிர்களின் பெயரில் தமிழில் எழுதப்பட்ட திரிகடுகமும் ஏலாதியுமே இப்பயிர்கள் பற்றிய தமிழர்களின் அறிவியலுக்கும் இவற்றின் மாண்புக்கும் சான்றாகும். அங்கக முறையில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுக் கரிம இடுபொருட்கள், இயற்கைத் திறனை ஊக்குவிக்கும் உத்திகளை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
இம்முறை தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவந்தபோதும் தற்காலத்தில் இதற்கு அறிவியல் விளக்கங்கள் அறியப்பட்டுப் புதிய உற்பத்திப் பெருக்க உத்திகள் செயல்வடிவம் பெற்றுவருகின்றன. இருப்பினும் அங்கக முறையில் உணவுதானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதலில் இரு வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. ஆனால், அங்கக முறையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் மாற்றுக் கருத்தில்லை. இக்கோட்பாடு அந்தமானில் விளையும் நறுமணப் பயிர்களின் சாகுபடிக்கு முழுமையாகப் பொருந்தும்.
விளைச்சலும் தரமும்
நறுமணப் பயிர்களிலிருந்து பெறப்படும் முதல்தரமான பொருட்கள் அவற்றின் தரம், மணம், சுவைக்காகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் அதிக விலைபோகின்றன. அந்தமானில் அங்கக முறையில் விளைவிக்கப்படும் மணப்பயிர்களில் யூஜினால் எனப்படும் உயிர்வேதிப்பொருள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிக மழைப்பொழிவுடைய இத்தீவுகளில் இலைமட்கு, தொழுஉரங்கள், பண்ணைக் கழிவு சுழற்சியை ஊக்குவிப்பதோடு மண்ணரிப்பைக் குறைத்து நிலச் சீர்கேட்டை தவிர்க்கவல்லது. அனைத்துக்கும் மேலாக ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டாலும் இயற்கையாகவும் பாழ்பட்டுப்போன விளைநிலங்களில் அங்கக முறையின்றி வேறுவழியில் தரமான நறுமணப் பயிர்களை விளைவிக்க இயலாதது.
இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 60 இலட்சம் டன்கள் மணப்பயிர்கள் விளைகின்றன. இவற்றில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் பங்களிப்பு அதிகம். இருப்பினும் இவற்றில் 11 சதவீதம் மட்டுமே உலகச் சந்தையை அடைகிறது, மற்றவை உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இப்பயிர்களின் உற்பத்தியை அங்கக முறையில் மேம்படுத்த முதலாவதாக நிலவும் தட்பவெப்பம், மண் வகைகள், புவியியல் சூழலுக்கு ஏற்ற வகையில் பயிர்களையும் அவற்றின் ரகங்களையும் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
தொழில்நுட்ப முறைகள்- லவங்கப்பட்டை
அந்தமானில் பொதுவாக லவங்கப்பட்டை, கிராம்பு, சாதிக்காய், மிளகு, இஞ்சி போன்ற மணப்பொருட்கள் ஊடுபயிராகப் பயிரிடப்படுகின்றன. லவங்கப்பட்டை (சின்னமாம் ஜெய்லெனிகம்) ரகங்களான பி.பி.ஐ-1, ஏற்காடு-1, நித்யஸ்ரீ, கொங்கன் தேஜ் முதலானவை நல்ல பலன்தரவல்லவை. இவை வேர்விட்ட தண்டுக்குச்சிகள், பதியமிடல், விதைகள் மூலம் மே-ஜூன் மாதத்தில் தென்னை மரங்களுக்கு இடையில் (சராசரியாக 7 மீ. x 3 மீ.) நடவு செய்யப்படுகின்றன.
இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களிலிருந்து பெறப்படும் விதைகளை விதைப் பண்ணையில் மேடைப் பாத்தி அமைத்து நாற்றுகளை உருவாக்கலாம். தற்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறை தனியார் நிறுவனங்கள் இதை லாபகரமான தொழிலாகவே செய்துவருகின்றனர்.
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு உள்ள நீலகிரி, குற்றாலம், கன்னியாகுமரி, பழனி சுற்றுவட்டாரங்களில் தனிப்பயிராகவும் காப்பித் தோட்டத்தில் ஊடுபயிராகவும் லவங்கம் பயிர்செய்யப்படுகிறது.
நடவு செய்யும்போதும் நட்ட பின் ஆண்டுக்கு இரு முறையும் ஐந்து கிலோ மக்கிய தொழுஉரம் இடப்பட வேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் தரைமட்டத்திலிருந்து 15/20 செமீ உயரம் விட்டு வெட்டி, மண் அணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிகப் பக்கக் கிளைகள் தோன்றி ஐந்து ஆண்டுகளில் லவங்கப்பட்டை குத்துச்செடியாக வளரும். அந்தமானில் நவம்பர், மே மாதத்தில் கிளைகளிலிருந்து லவங்கப்பட்டை உரித்தெடுக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது.
பொதுவாக அந்தமானில் அங்கக முறையில் 150 – 200 கிராம் தரமான பட்டை பெறப்படுகிறது. நுனிஇலை, குச்சியில் இருந்து லவங்க எண்ணெய் எடுக்கலாம். இருப்பினும் அதிக லாபம், வேலைவாய்ப்பு தரும் லவங்கப்பட்டை பயிரிடுவதற்கான வாய்ப்புகள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
(அடுத்த வாரம்: கிராம்பு – எதிர்காலத்தின் பணவங்கி)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com