

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தமிழ்நாடெங்கும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது. உழவு நிலங்கள், தரிசு நிலங்கள், முட்புதர் காடுகள், மலையடிவாரங்கள் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மரங்கள் வெட்டப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி வளாகத்திலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. இப்படிச் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் உயிரினப் பன்மையும் (Bio diversity) பாதிக்கப்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் பெருங்கவலை.
சீமைக் கருவேலமும் மற்ற உயிரினங்களும்
சென்னை ஐ.ஐ.டி. வளாகம் என்பது கிண்டி தேசியப் பூங்கா, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அனைத்தும் தொடர்ச்சியான ஒரு காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. இவற்றில் ஐ.ஐ.டி. வளாகம் சுற்றுச்சுவரால் பிரிக்கப்பட்டாலும் இன்றைக்கும் காட்டுயிர்கள் வசிக்கும் பகுதியாகவே உள்ளது. இந்தக் கல்வி நிறுவனமே நடத்திய பல்லுயிர் ஆய்வில் 500 வகையான தாவரங்கள், உயிரினங்கள் உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 298 தாவர வகைகள், 50 பட்டாம்பூச்சி வகைகள், 10 தவளை - தேரை வகைகள், 10 – 12 பல்லி மற்றும் பாம்பு வகைகள், 50 – 60 பறவை வகைகள் இங்குக் காணப்படுகின்றன.
ஐ.ஐ.டி வளாகத்தைப் பொறுத்தவரை மற்ற மரங்களின் ஊடாகச் சீமைக் கருவேலமும் இருக்கிறது. எனவே, சீமைக் கருவேலம் இந்த இடத்தில் இயற்கையாகக் கட்டமைந்த சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல வகை உயிரினங்களும் சீமைக் கருவேல மரங்களைச் சார்ந்துள்ளன. இந்தப் பின்னணியில் 600 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த வளாகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றினால் பல பாதகமான விளைவுகள் ஏற்படும்.
உதாரணமாக, வர்தா புயல் தாக்கத்தால் பல வளர்ந்த மரங்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் வீழ்ந்துவிட்டன. இந்நிலையில் சீமைக் கருவேலத்தையும் மொத்தமாக அழிப்பதால் இப்பகுதியின் வெப்பநிலை அதிகரிக்கும். அத்துடன் சீமைக் கருவேல மரத்தைச் சார்ந்துள்ள பூச்சிகள், கூடுகட்டும் பறவைகள், நிழலில் இளைப்பாறும் உயிரினங்களுக்கும் இடமில்லாமல் போகும். இது எந்த அளவுக்கு முக்கியம் என்ற கேள்வி எழலாம்.
முகத்துவாரப் புகலிடம்
அடையாறு முகத்துவாரத்துக்கு அருகில் இருந்த சிறு தீவுகளில் ஒரு சில அலையாத்தி மரங்களைத் தவிர, மற்ற எல்லாமே சீமைக் கருவேல மரங்கள்தான் வளர்ந்திருந்தன. இந்த மரங்களின் நிழலில் பகல் நேரத்தில் நரிகள் படுத்திருப்பதைப் பல நாட்கள் நேரில் கண்டிருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளம் மற்றும் அப்போது முகத்துவாரத்தை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக இந்தத் தீவுகள் அழிக்கப்பட்டன. இப்போது அந்த இடம் மரங்கள் இல்லாத மணல்திட்டாக நிற்கிறது. அதேநேரம், அங்கிருந்த நரிகளையும் இப்போது காண முடிவதில்லை.
அங்கு இனப்பெருக்கம் செய்துவந்த ஆள்காட்டியும் கண்கிலேடியும் (Stone Curlew) இப்போது வருவதில்லை. நிலத்தில் கூடுகட்டி முட்டை இடும் வழக்கம் கொண்டவை இந்தப் பறவைகள். சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டு இப்போது எந்த மறைவிடமும் இல்லாததால் வேட்டையாடும் பறவைகளுக்கு அஞ்சி, இங்கு முட்டை இடுவதை அவை நிறுத்திக்கொண்டுவிட்டன. இதே அவல நிலை சீமைக் கருவேல மரங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் உயிரினங்களுக்கு எல்லா இடங்களிலும் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.
ஒளிப்பட ஆதாரம்
1989-ல் மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஐ.ஐ.டியில் உள்ள சீமைக் கருவேல மரங்களைச் சார்ந்து வாழும் பறவைகள், உயிரினங்களைப் பற்றி ஒளிப்படங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இமயமலை காட்டுப்பகுதியில் இருந்து வலசை வரும் கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail), ஆறுமணிக் குருவி (Indian Pitta), செந்தலைப் பூங்குருவி போன்ற பறவைகள் சீமைக் கருவேல மரத்தின் அடிப் பகுதிகளில் இரை தேடும், நிழலில் இளைப்பாறும். அத்துடன் இம்மரத்தின் அடர்த்தியான பகுதிகளில் இருக்கும் சிலந்தி போன்ற பூச்சிகளை உண்பதற்காக மஞ்சள் சிட்டு (Common Iora), தவிட்டுக்குருவி, தையல்சிட்டு போன்றவற்றை எப்போதும் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டியில் சீமைக் கருவேல நிழலில் புள்ளிமான், நரி, கீரி போன்ற உயிரினங்கள் படுத்து இளைப்பாறுவதையும், கிளைகளில் தேன் சிட்டு, சின்னான் போன்ற பறவைகளின் கூடுகளையும் சாதாரணமாகக் காணலாம். சீமைக் கருவேல மரங்களை அழிப்பது இந்த உயிரினங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
சென்னை போன்ற ஒரு மாநகரின் நடுவில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் இத்தனை உயிரினங்கள் சீமைக் கருவேல மரத்தைச் சார்ந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் இந்த மரத்தைச் சார்ந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகவே இருக்கும். சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ள பகுதிகளில் மயில்கள், புள்ளிமான்கள் போன்றவை இருப்பதையும், புறா, தேன்சிட்டு வகைகள் இம்மரக்கிளைகளில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதையும் பல முறை கண்டிருக்கிறேன். சீமைக் கருவேல மரத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதால் அவை தங்குமிடம் இன்றி வயல்வெளிகளுக்கும், மக்களின் வாழிடங்களுக்கும் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் நேரும். அவை வேட்டையாடப்படலாம், பெரும் எண்ணிக்கையில் அழியலாம்.
சமூகப் பொருளாதார பாதிப்பு
வர்தா புயலின்போது சென்னையில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் சென்னையின் வீதிகள் எல்லாம் நிரம்பிக் கிடந்தன. அப்போது சென்னை மாநகராட்சி செய்வது அறியாமல் திகைத்தது. மரங்களைப் பொதுமக்கள் எடுத்துச் செல்லலாம் என்று அரசு அறிவித்துப் பார்த்தது. ஆனால், எடுக்க ஆளின்றிக் குவிந்து கிடந்தன மரக்கிளைகள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி அறிவிக்கப்பட்டிருந்தால், கிளைகள் விழுந்த சில மணி நேரத்திலேயே மக்கள் முடிந்தவரை எடுத்துச் சென்றிருப்பார்கள். இன்றைக்கு அப்படி நடக்காததற்கு முக்கியக் காரணம் சென்னையில் பெரும்பாலோர் சமையலுக்கோ மற்றப் பயன்பாட்டுக்கோ விறகை நம்பி இல்லை என்பதுதான்.
சாலையோர உணவு கடைகளில்கூடச் சமையல் எரிவாயுதான் பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் மட்டுமே விறகுப் பயன்பாடு உள்ளது. இந்நிலையில் சீமைக் கருவேலத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதால் கிராம மக்களும் சமையல் எரிவாயுவை மட்டுமே பயன்படுத்தும் நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இது எரிவாயுத் தொழில் தனியார் பெருநிறுவனங்களுக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தரும்.
அது மட்டுமல்ல, சமையல் எரிவாயுவுக்குச் செலவழிக்க முடியாமல், இவ்வளவு காலம் சீமைக் கருவேல மரத்தைப் பல சாமானியர்கள் பயன்படுத்தி வந்தனர். எதிர்காலத்திலும் அவர்களுடைய பொருளாதார நிலை உயராமல் போகலாம். அப்போது விறகுக்காக வேறு மரங்களை வெட்ட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். மொத்தத்தில் வறண்ட மாவட்டங்களில் உள்ள கிராமப் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும்.
அழிக்கும் முறை
சீமைக் கருவேல மரங்களை அழிப்பதைக் கண்மூடித்தனமாக யாரும் எதிர்க்கவில்லை. அதேநேரம் சீமைக் கருவேல மரத்தை அழிக்கும் முறையும், அழிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமும்தான் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. நிலத்தைச் சமன் செய்யும் பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைக் கொண்டே பல இடங்களில் மரங்கள் அகற்றப்படுகின்றன. இந்தப் பெரிய இயந்திரங்கள் ஒரு சீமைக் கருவேல மரத்தை அடைவதற்கும் அகற்றுவதற்கும் மற்றப் பல மரங்களையும், செடி, கொடி, புதர்களையும் அழித்தே செல்கிறது. இதனால் நிச்சயமாக அந்த இடத்தின் உயிரினப் பன்மை, தாவரப் பன்மை அழிக்கப்படும். எனவே, இந்த மரங்களைப் பெரிய இயந்திரங்களைக் கொண்டு அழிப்பதைத் தடுக்க வேண்டும். மற்றத் தாவரங்களும் உயிரினங்களும் அழிக்கப்படுவதைத் தடுத்தே ஆக வேண்டும்.
கருவேல மரங்கள் அகற்றப்படும்போது, அதே இடங்களில் நாட்டு மரங்களை உடனடியாக வளர்க்க ஆரம்பிப்பதும் அவசியம். வெறுமனே கருவேல மரங்களை அழித்துவிட்டுச் செல்வதால், பசுமைப் பரப்பையும் சேர்த்தே இழக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. கடும் கோடையில் இந்த மரங்களை முற்றிலும் அகற்றுவது பாதிப்பைப் பன்மடங்காக்கும். எல்லாச் சீமைக் கருவேல மரங்களையும் ஒரே நேரத்தில் அழிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதிகளில் அவற்றை அகற்ற முயற்சிக்கலாம்.
இப்படிப் பல்வேறு வகைகளில் உயிரினப் பன்மை, தாவரப் பன்மை, ஏழைகளின் பொருளாதார நிலை உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்து, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.
கட்டுரையாளர்,
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: seshanelumalai@gmail.com