

கரிமத்தைப் போல உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத மற்றொரு தனிமம் வெடியீன் எனப்படும் நைட்ரஜன். வேளாண் மொழியில் இது தழை ஊட்டம் அல்லது தழைச்சத்து. உயிரினங்கள் வாழ மாவுப்பொருள் அடிப்படை என்பதைப்போல முந்தூண் எனப்படும் புரதம், அமினோ அமிலங்கள் அவசியம். வளி மண்டலத்தின் இந்த நைட்ரஜன் 78 சதவீதம் உள்ளது. அதாவது நமது உலகமானது, நைட்ரஜன் என்ற வாயுக் கடலில் மிதக்கிறது என்று கூறலாம்.
ஆனால், இந்த நைட்ரஜனை உயிரினங்கள் நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாது. இவற்றைச் செடியினங்கள் நைட்ரைட் சத்துகளாக நுண்ணுயிர்களால் மாற்றம் பெற்ற பின் எடுத்துக்கொள்கின்றன.
வளிமண்டலத்தில் ஏற்படும் மின்னல் மூலம், மந்தமாக இருக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகள் சிதைந்து, மழைநீரில் கரைந்து மண்ணில் சேர்கின்றன. இதனால்தான் இடியுடன் கூடிய மழை பெய்த பிறகு, பயிர்கள் மிகவும் பசுமையாகக் காணப்படுகின்றன. இப்படி வளிமண்டல நிலைநிறுத்தலின் வழியாக ஐந்து முதல் எட்டு சதவீதம் தழை ஊட்டம் கிடைக்கிறது.
நுண்ணுயிர் உதவி
உயிரியியல் முறையில் பாக்டீரியா நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைநிறுத்திப் பயிர்களுக்குக் கொடுக்கின்றன. இவற்றில் பயிர்களின் வேர்களில் ஒத்திசைவாக இருந்துகொண்டு உதவி செய்பவை உள்ளன. இன்னும் சில நுண்ணுயிர்கள் தனித்தே வாழும் திறன் கொண்டவை. இவற்றுடன் நீலப்பச்சைப் பாசிக் குடும்பத் தாவரங்களும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் பெற்றவை.
இவ்வாறு நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன. வேறு சில நுண்ணுயிர்கள் நிலைநிறுத்தப்பட்ட நைட்ரஜனை, அதாவது நைட்ரேட் கூட்டுப்பொருளைச் சிதைத்து மறுபடி நைட்ரஜனை வளிமண்டலத்துக்கே திருப்பி அனுப்புகின்றன.
பண்ணையில் விலங்குக் கழிவு, பச்சை இலைச் சாறுகள் போன்றவை நைட்ரஜனின் அடிப்படைப் பொருட்கள். சாணத்தையும், மாட்டுச் சிறுநீரையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டாலே, பண்ணையத்தில் வெற்றி பெற முடியும்.
மணிச்சத்து சுழற்சி
கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன்போல இந்தப் பாஸ்பரஸ் ஆனது காற்று வடிவில் இருப்பதில்லை. உயிரினங்களில் எலும்பு, பற்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் மிக இன்றியமையாததாக இது உள்ளது. பயிரினங்களில் புரத உருவாக்கத்தில் மிக இன்றியமையாத பங்கை பாஸ்பரஸ் எடுக்கிறது. செல் பிரிதலில் இது முதன்மைப் பங்கு வகிக்கிறது.
இது நீரிலும் மண்ணிலும் காணப்படுகிறது. காற்றில் தூசியாகச் சிறிதளவு உள்ளது. பாறைப் படிவுகளிலும் கடலடியிலும் படிவுகளாகவும் காணப்படுகின்றன.
குளத்து நீரின் முக்கியத்துவம்
செடியினங்கள் நீர் மூலம் பாஸ்பரஸை எடுத்துக்கொள்கின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நன்மை இல்லை. இவை பெரிதும் நீரில் கரையாமல் வீணாகிவிடுகின்றன. உயிரினங்களின் உடலில் உணவு வடிவில் செல்லும் பாஸ்பரஸ், அவை இறந்த பின்னர் சிதைந்து மீண்டும் பாஸ்பரஸாக மாறுகிறது.
நமது நிலத்தில் போதிய மணிச்சத்து இருந்தாலும் அவை காலங்காலமாக மண் அரிமானத்தால், முறையாக நிலத்தை வரப்புகள் அமைத்து மரங்கள் நட்டுப் பராமரிக்காததன் காரணமாக மணிச்சத்தை இழந்துவருகின்றன. நமது முன்னோர்கள், குளத்து வண்டலை நிலத்தில் சேர்ப்பதன் மூலமாக இந்தக் குறையை நீக்கினார்கள். இப்போது அந்தப் பழக்கம் மெல்ல உயிர்பெற்று வருகிறது.
பண்ணைக் கழிவு
நமது பண்ணைக்குத் தேவையான பாஸ்பேட் சத்து கோழி எச்சம், புறாக் கூண்டுகளின் எச்சம், எலும்புத் தூள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்றன. அத்துடன் பல நுண்ணுயிர்கள் கரையா நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றன. கடலில் காணப்படும் கடற்களைகள் போதிய மணிச்சத்தைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.
செடிகளின் வளர்ச்சிச் செயல்பாட்டில் பாஸ்பரஸ் முக்கியப் பங்காற்றுகிறது. மனிதனின் எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்குப் பாஸ்பரஸ் அத்தியாவசியமானது.
(அடுத்த வாரம்: ரொட்டில் துண்டால் மட்டும் வாழ முடியாது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com