

“இயற்கையைப் பாதுகாப்பதில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுடன் மட்டும் எல்லாவற்றையும் சுருக்கிப் பார்க்கக் கூடாது. ‘நூறு பூக்கள் மலரட்டும்‘ என்று மாசே துங் சொன்னதைப் போலப் பல்வேறு முனைகளில் பல அமைப்புகள் இயற்கையைப் பாதுகாக்க முனைய வேண்டும்” என்று எழுத்தாளரும் சூழலியல், வரலாற்று ஆய்வாளருமான மகேஷ் ரங்கராஜன் கூறினார்.
புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் நினைவு ஐந்தாவது நினைவுச் சொற்பொழிவு சென்னை ஐ.ஐ.டியில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றியபோது மகேஷ் ரங்கராஜன் இதைக் குறிப்பிட்டார்.
மிகச் சிறந்த சூழலியலாளராக இருந்த மா.கிருஷ்ணன், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர், ஓவியர் என வேறு துறைகளிலும் தீவிர ஆர்வம் காட்டியவர்.
இயற்கை வரலாறு குறித்த தன்னுடைய எழுத்தில் பறவைகள், பாலூட்டிகள், தாவரங்களைக் குறிப்பிட மா. கிருஷ்ணன் பண்டைய தமிழ்ப் பெயர்களைத் தேடித்தேடிப் பயன்படுத்தியதைக் குறிப்பிட்டு, தற்போது அந்தப் பண்பு அருகி வருவதைச் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில், மா. கிருஷ்ணன் நினைவாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ‘இயற்கை எழுத்து பரிசு’ வழங்கப்பட்டது. சூழலியலாளர் அ. ரங்கராஜன், மா. கிருஷ்ணனின் மகன் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேசினர்.
- நேயா