

அந்தமான் ஜெயின்ட் தேங்காயையோ 900 மி.லி. இளநீர் தரும் ரகங்களையோ பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். இத்தீவுகளில் பெரும்பாலும் பன்முகத்தன்மை கொண்ட நெட்டை ரகங்களே பெரிதும் காணப்படுகின்றன. இத்தீவுகளின் மொத்தத் தென்னை உற்பத்தியில் 35 முதல் 40 சதவீதம் கொப்பரை உற்பத்திக்கும், 15 முதல் 20 சதவீதம் இளநீருக்காகவும் பயன்படுகின்றன.
அந்தமான் நெட்டை ரகங்களிலிருந்து பெறப்படும் சுவையான இளநீரில் சர்க்கரை, புரதம், வைட்டமின்கள், பயனுள்ள உயிர்வேதிப் பொருட்கள், அங்கக உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து 2,200 மி.கிராம்வரை இருக்கும். நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கவும் உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் இளநீர் பயன்படுகிறது.
கொப்பரை வளம்
அந்தமான் ஜெயின்ட், அந்தமான் உயரம், கட்சால் உயரம், நிகோபார் உயரம் போன்ற ரகங்கள் 70 அடி உயரம்வரை வளரக்கூடிய பாரம்பரிய நெட்டை ரகங்கள். இவை வறட்சியையும் புயலையும் தாங்கி ஆண்டுக்கு 55 முதல் 70 தேங்காய்கள்வரை பயன்தரக்கூடியவை. இவற்றில் 35 முதல் 50 சதவீதம்வரை தென்னை நாரும் கிடைக்கும்.
பொதுவாக நெட்டை ரகங்களிலிருந்து பெறப்படும் கொப்பரையில் 62 முதல் 66 சதவீதம்வரை எண்ணெய் இருக்கும். இது உலகின் எந்த நாட்டோடு ஒப்பிட்டாலும் கிடைக்கும் அதிகபட்ச அளவு. தமிழகத்தில் பரவலாக வளர்க்கப்படும் அதிக அளவு எண்ணெய் தரவல்ல (70 சதவீதம்) வேப்பங்குளம்-3 ரகமானது அந்தமான் சராசரியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், இங்குள்ள பல ரகங்கள் நாடு முழுவதும் தென்னை மேம்பாட்டு ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
(அடுத்த வாரம்: அந்தமான் தென்னையைத் தேடிய அந்நியர்கள்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com