மயக்க மருந்து என்னவெல்லாம் செய்யும்?

மயக்க மருந்து என்னவெல்லாம் செய்யும்?
Updated on
1 min read

ஊருக்குள் வரும் காட்டு யானைகள் மீது மயக்க மருந்தைச் செலுத்திப் பிடிப்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. சிறு அம்பைப் போன்ற ஊசி மூலம் செலுத்தப்படும் மயக்க மருந்து காட்டு உயிரினங்களை மயக்கத்தில் ஆழ்த்தப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக, யானை - மனித எதிர்கொள்ளல் நடக்கும் இடங்களிலும், யானைகள் ஊருக்குள் வரும்போதும், காட்டுக்கு வெளியே காயமடைந்த யானைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கவும், ஒரு ஊரில் இருந்து வெளியூருக்கு யானைகளை இடம்பெயரச் செய்யவும், ஆய்வுகளுக்காக ரேடியோ காலர், சிப் போன்றவற்றை உடலில் பொருத்தவும், ரத்த மாதிரிப், டி.என்.ஏ. மாதிரி போன்றவற்றை எடுப்பதற்கும் மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

மயக்க மருந்து செலுத்துவதன் காரணமாகக் காட்டு யானைகள் இறப்பதற்குப் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன. அவை:

1. யானையின் உடலில் மயக்க மருந்தைச் செலுத்திய பிறகு சுற்றுவட்டாரத்தில் ஏதாவது பள்ளம் இருந்தால், அதில் விழுந்து யானை உயிரிழக்கலாம்.

2. மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு நாயைப் போல யானை காலை மடக்கி உட்கார நேரிட்டால், அதன் உடல் எடை காரணமாகச் சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறக்க வாய்ப்பு உள்ளது.

3. மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு, உடனடியாக யானை இருக்கும் இடத்தைக் கண்டறிந்துவிட வேண்டும். அப்படி முடியாமல் போனால், யானையால் காதை அசைக்க முடியாமல் போய் உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளும் சாத்தியம் குறையும். அப்போது அதிக வெப்பம் காரணமாகவும் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

4. சில மயக்க மருந்துகள் செலுத்தப்பட்ட பிறகு, யானையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மீட்டெடுக்கும் மருந்தை உடலில் செலுத்தியாக வேண்டும். இல்லையென்றாலும் இறக்கலாம்.

5. மயக்க மருந்தால் யானை கீழே விழும்போது தந்தத்தில் முறிவோ, உடல் எலும்பு முறிவோ ஏற்பட்டாலும் இறக்கலாம்.

மயக்க மருந்தால் இப்படி யானைகள் இறப்பதற்குச் சாத்தியமுள்ள அதேநேரம், மயக்க மருந்தைச் செலுத்தும் மருத்துவர், வனத் துறை குழுவை நோக்கி யானை வேகமாக ஓடிவரவும் வாய்ப்பு உண்டு. அது மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in