

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் பழம்பெரும் காட்டுப் பகுதியான களக்காடு-முண்டந்துறையில் பதிவுசெய்யப்பட்ட எனது பயணக் களக் குறிப்பேட்டைச் சமீபத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதில் காட்சி கொடுத்து மறைந்த உயிரினங்கள்: புலி, யானை, கரடி, கொம்புப் புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில், மலபார் முள்வால் எலி, பெரிய இருவாச்சி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக் குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகைப் பூச்சிகள், பல வகைத் தாவரங்கள்... குறிப்புகளைக் காணக் காணக் கண் முன்னே காட்சிகள் பல விரிந்தன.
இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப் பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதைக் களக் குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. இதுவே ஆராய்ச்சிக்கு அடிப்படை.
அரிய அனுபவங்கள்
இங்கே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் நடந்தது 1999-ம் ஆண்டில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில். 1988-ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் அது. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக 25 வயதில் அங்குச் சென்றிருந்த எனக்கு, மறக்க முடியாத பல தருணங்களையும் பல வகை அனுபவங்களையும் அளித்தது அந்தப் புலிகள் காப்பகம்தான்.
படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திராத பல உயிரினங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்தான்.
மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாகப் பதினோரு மாதங்கள் அங்கே தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal). இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைக்காட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொண்ட வேளையில், அந்தக் கானகத்தின் செல்வங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
பல்லுயிர் செழிப்பிடம்
உலகில் உள்ள பல்லுயிர் செழிப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி. இந்த மலைத் தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்.
இதன் மொத்தப் பரப்பு 895 சதுரக் கி.மீ. அகஸ்திய மலை உயிர்க்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது, பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் முக்கியமானது. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனவும், 273 வகை பறவையினங்களும், 77 வகை பாலூட்டிகளும் இதுவரை அங்கே கண்டறியப்பட்டுள்ளன.
இப்படிப் பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. எண்ணற்ற பல காட்டோடைகள், கொடமாடி யாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தாமிரபரணி, சேர்வலாறு, கடனா நதி, ராம நதி போன்ற ஆறுகளும் இப்பகுதியில் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.
இப்படிப் புலி காப்பகங்கள், புலிகளை மட்டுமே பாதுகாப் பதில்லை. புலிகளுடன் சேர்த்துப் பல வகை வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கின்றன. அதனால் புலிகளின் பாதுகாப்பு இன்றியமையாததாகிறது. அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கே நன்மை புரிகிறது.
திரும்பிச் சென்ற யானைகள்
காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த காலம் அது. ஒரு நாள் மாலை வீட்டுக்கு அருகே யானைகளின் பிளிறல் கேட்டது. இரவானதும் வீட்டுக்குப் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலப்பு ஒலியைக் கேட்டு ஜன்னலைத் திறந்தபோது, யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே ஜன்னலை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன்.
சற்று நேரத்துக்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் நின்றுகொண்டிருந்தன. அங்கே மின்வசதி கிடையாது என்பதால் பெட்ரோமாக்ஸ் விளக்கை அணைத்துவிட்டு, கண்ணாடி ஜன்னல் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது நடமாட்டத்தால் ஏற்பட்ட சத்தங்களை, அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கித் தனது தும்பிக்கையை வைத்து மோப்பம் பிடித்தது.
பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. நிலவின் பால் ஒளியில் ஒரு யானைத் திரளை வெகு அருகில் கண்டது, காலத்துக்கும் மறக்க முடியாத காட்சியாக மனதில் உறைந்துவிட்டது.
கொம்புப் புலி
மற்றொரு நாள் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, தரையிலிருந்து ஆத்துவாரி மரத்தைப் பற்றிக்கொண்டு சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தின் தண்டை பற்றிக்கொண்டு மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு லாகவமாக மரக்கிளைகளின் ஊடே, ஏதோ தரையில் நடந்து செல்வதைப் போல அநாயாசமாக மரம் விட்டு மரம் தாவிச் சென்றது.
நீலகிரி மார்ட்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்புப் புலி என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அந்த உயிரினம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் மிகவும் அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்டு அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம்.
மென் உறுமல்
நானும் சிலம்பனும் காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்தத் தடத்தின் மறுமுனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி மெல்லிதாகக் காதுகளை வந்தடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்தி கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், தன்னிடமிருந்த அரிவாளால் வழியிலிருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கனைத்துக்கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்து போகும்போது, நாம் போகும் வழியில் ஒரு வேளை ஏதேனும் பெரிய காட்டுயிர் இருந்தால், விலகிச் சென்றுவிடும்.
மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்தபோது சிலம்பன் சட்டென நின்று, என்னிடம் முணுமுணுத்தார், "அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு" என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில், சுமார் 20 மீ. தூரத்தில் காட்டு வாழைகள் நிறைந்த பகுதியின் ஊடே ஒரு புலி நடந்து சென்றது. இயற்கையான சூழலில் புலியை அப்போதுதான் முதல்முறையாகப் பார்த்தேன்.
உணவுத் தொந்தரவு
ஒரு நாள் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப் பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடி பெருத்த பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன.
அம்மரத்தைச் சுற்றிக்கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து கறுப்பான ஒரு காட்டுயிர் "உர்ர்..." என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி, இருவரும் ஓட ஆரம்பித்தோம்.
உருண்டு, பண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப் பகுதியை வந்தடைந்தோம். பின்புதான் தெரிந்தது அது ஒரு கரடி என. கரடிகளுக்கு மோப்பச் சக்தி அதிகம். இருந்தாலும் பார்வையும், கேட்கும் திறனும் கொஞ்சம் கம்மி.
மரத்தின் கீழிருக்கும் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கே சென்றது அதைத் திடுக்கிடச் செய்ததால்தான், எங்களை உறுமி விரட்டியிருக்கிறது.
கட்டுரையாளர்,
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்வகு: jegan@ncf-india.org