Last Updated : 25 Jun, 2016 02:31 PM

Published : 25 Jun 2016 02:31 PM
Last Updated : 25 Jun 2016 02:31 PM

இயற்கையின் செய்தித் தொடர்பாளன்!

ஜூன் 30: மா.கிருஷ்ணன் பிறந்த நாள்

நான் ஒரு தேவாங்காகப் பிறந்திருக்கலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

‘என் மரணத் தருவாயில் ஒரு ‘வக்கா'வின் குரலை நான் கேட்க நேரிடலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இயற்கையை இயற்கைக்காகவே நேசிக்கும் ஒரு மனிதனால் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். மா.கிருஷ்ணனால் அது முடிந்தது.

மாதவையா கிருஷ்ணன் எனும் மா.கிருஷ்ணன் 1912-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்று பிறந்த தமிழர், சென்னையில் வாழ்ந்தவர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு உயிர்மூச்சாக இருந்த முன்னோடி. எனினும், தமிழ் மொழி அறிந்த வாசகர்களிடையே அவருடைய எழுத்து சென்று சேர்ந்ததைவிட, ஆங்கிலத்தில் அவர் எழுதிய படைப்புகள்தான் பெரும் வாசகப் பரப்பைப் பெற்றுத் தந்தன.

காட்டுயிர்கள் குறித்து வறட்டுத்தனமான விவரணைகளை எழுதாமல், நேரடிக் கள அனுபவங்கள், ஆய்வுகள் மூலமாகவும், ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்தும் இயற்கையை உயிர்ப்புள்ளதாகத் தீட்டினார்.

பன்முக ஆளுமை

தமிழில் அவர் எழுதிய படைப்புகள் ‘மழைக்காலமும் குயிலோசையும்' மற்றும் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்' என இரண்டு தலைப்புகளில் முறையே எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன் மற்றும் பெருமாள் முருகன் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டுச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின. அந்தப் புத்தகங்கள் தமிழர்களிடம் மெல்ல மெல்லப் பரவலாகிவரும் நிலையில், அவருடைய ஆங்கிலப் படைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது நலம்.

தன் வாழ்நாளில் (1912 முதல் 1996 வரை) ஆங்கிலத்தில் எழுதியவற்றை ‘ஜங்கிள் அண்ட் பேக்யார்ட்' மற்றும் ‘நைட்ஸ் அண்ட் டேஸ்' ஆகிய தலைப்புகளில் புத்தகங்களாக வெளியிட்டார். ஆனால் துர்பாக்கியம், அந்த இரண்டு புத்தகங்களும் தற்போது அச்சில் இல்லை.

இந்தியாவின் காட்டுயிர் குறித்து ‘ஜவஹர்லால் நேரு நிதி நல்கை'யை முதன்முதலில் பெற்ற அவர், ‘Ecological survey of the larger mammals of peninsular India’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வை ‘India's wildlife in 1959-70’ தலைப்பில் ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழகம்' பதிப்பித்தது. அது தற்போது அச்சில் இல்லை.

மிக நீண்ட தொடர்

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘தி ஸ்டேட்ஸ்மேன்' ஆங்கில நாளிதழில் 1950-ம் ஆண்டு முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக 46 ஆண்டுகளுக்கு ‘கன்ட்ரி நோட்புக்' என்ற தலைப்பில் இயற்கை தொடர்பான கட்டுரைகளை அவர் எழுதிவந்தார். இந்திய இதழியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் வெளிவந்த தொடர்களில் ஒன்று இது.

அந்தக் கட்டுரைகளில் சிலவற்றை ‘நேச்சர்ஸ் ஸ்போக்ஸ்மேன்' என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணன் எடுத்த காட்டுயிர் ஒளிப்படங்கள், சில பதிவுகளைத் தொகுத்து ‘ஐ இன் தி ஜங்கிள்' என்ற தலைப்பில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் சாந்தி, ஆஷிஷ் சந்தோலா புத்தகமாகப் பதிப்பித்துள்ளனர். பறவைகள் தொடர்பாகப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான அவருடைய கட்டுரைகளை ‘ஆஃப் பேர்ட்ஸ் அண்ட் பேர்ட் ஸாங்' என்ற தலைப்பில் அவர்களே தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு கிருஷ்ணன் எழுதிய கடிதங்கள் ‘புக் ஆஃப் பீஸ்ட்ஸ்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையின் முதல் வரி, அந்தப் புத்தகத்தில்தான் காணக் கிடைத்தது.

2 ஆயிரத்துக்கும் மேல்

மா.கிருஷ்ணன் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும், ஒளிப்படக் கலைஞராகவும் மட்டுமில்லாமல் கலை, கிரிக்கெட், கர்னாடக இசை போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியம் மீது அவருக்கிருந்த ஆர்வம், தமிழில் ‘கதிரேசன் செட்டியாரின் காதல்' என்ற துப்பறியும் நாவலாகவும், ஆங்கிலத்தில் ‘தி டேல்ஸ் ஆஃப் தாவூத் கான் அண்ட் அதர் ஸ்டோரீஸ்' எனவும் வெளிப்பட்டது.

‘தான் உயிரோடிருந்தவரை அவர் எழுதிய கட்டுரைகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்' என்று ராமச்சந்திர குஹா தான் தொகுத்த புத்தகத்தில் கூறியுள்ளார். அவற்றில் தற்சமயம் நமக்குக் கிடைத்திருப்பது கால்வாசிதான் என்று சொன்னால் மிகையில்லை. மீதமிருக்கும் அவரது எழுத்தும் பதிப்பிக்கப்பட்டால், அவரின் அறியப்படாத ஆளுமையும் தெரிய வரலாம்.

சின்ன விஷயங்களின் மனிதர்

இன்றைக்கு யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம் போன்ற 'பெரிய' விலங்குகள் குறித்து எழுதுவதும் பேசுவதும் மட்டும்தான் சுற்றுச்சூழல் என்று நம்ப வைக்கச் சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. காரணம், மேற்கண்டவை வசீகரமானவையாகக் கருதப்படுவதுதான். அதிலும் குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அமைப்புகள் அவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

ஆனால், யானை, சிங்கம் அளவுக்கு ‘வசீகரம்’ இல்லாத பாம்பு, பல்லி, பூனை, பூச்சி, மீன் போன்ற ‘லெஸ்ஸர் கரிஸ்மாடிக்' உயிரினங்களைப் பெரும்பாலோர் சீந்துவதில்லை. ஆனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாகாத 1950, 60-ம் ஆண்டுகளிலேயே பூனை, பல்லி, நாய் போன்றவை குறித்து மிகுந்த அவதானிப்புடன் அவர் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய பதினோறாம் வயதில் வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்திருக்கிறார் என்பதை அறியும்போது, மக்களின் ஆர்வம் திரும்பாத ‘சின்ன உயிரினங்கள்' மீது அவர் கொண்டிருந்த அக்கறை தெரிய வரும்.

பறவைகளின் தோழன்

பறவையியலாளர் சாலிம் அலியை 'பறவை மனிதர்' என்று சொன்னால், மா.கிருஷ்ணனை ‘பறவைகளின் தோழன்' என்று சொல்லலாம். பறவைகளைத் தேடி அவர் காடுகளுக்குச் செல்வதும், பறவைகள் அவரின் வீட்டுக்கு வருவதும் எனப் பறவைகளும் அவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்துவந்துள்ளனர். தன் கையெழுத்தைக்கூட ஒரு பறவை பறப்பதுபோலப் போடுவார் என்றொரு தகவல் உண்டு.

பறவைகள் மீது சிரத்தையுடன் செயல்பட்ட அவர், பறவை நோக்குதல் குறித்தும் ஒரு அருமையான விஷயத்தைச் சொல்கிறார். "நீங்கள் நாள் முழுக்க ரயிலில் பயணிக்க வேண்டியதிருக்கலாம். அப்போது புத்தகம் படிக்க முடியாதபடியோ அல்லது பேச்சுத் துணைக்கு ஆளற்றோ அல்லது தூங்கும் வழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவாறே செல்லுங்கள். உங்கள் இருக்கையிலிருந்து கொஞ்சம் கீழாக, சற்றுச் சாய்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். இப்போது ஜன்னல் வழியே மேலே பாருங்கள். மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருக்கும். அவற்றில் சில பறவைகள் அமர்ந்திருக்கும். நீங்கள் ஆனந்தமடைய அவையே போதும்" என்கிறார்.

அடுத்த முறை நீங்கள் ரயிலில் செல்லும்போது இவ்வாறு பாருங்கள். ஏதேனும் ஒரு பறவையின் வடிவத்தில் மா.கிருஷ்ணன் உங்களுக்குத் தென்படலாம்!

தனக்கு இருந்த இருமொழிப் புலமையின் காரணமாகத்தான் பல பறவைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை அவரால் இனம் காண முடிந்தது. ஆங்கிலத்தில் ‘நைட் ஹெரான்' எனும் பறவை ‘வக்கா' என்று முன்பு தமிழில் அழைக்கப்பட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.

‘தேசியப் பறவையாக எதைத் தேர்வு செய்வது' என்பது குறித்த விவாதத்தில் கானமயில்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைப் பற்றியும் எம்.கிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். ‘எதிர்காலத்தில் அவை அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலை வரலாம்' என்று அன்றே அவர் யூகித்திருக்கிறார். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1961! இன்று அது நிஜமாகி இருக்கிறது.

சேவல் சண்டையை ஒரு விளையாட்டாகப் போற்றும் அவர், ‘அப்படியான சேவல்கள் அழிவின் நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம், சண்டைக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றால் வேறு பயன்கள் எதுவுமில்லை' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

'இந்தியாவில் சில விஷயங்களைத் தனிமைப்படுத்திவிட்டு வாழ்க்கை நகராது. உதாரணத்துக்கு ஒருவர் உறக்கத்தை விட்டுக் காலையில் கண் விழிக்கும்போதும், மாலையில் ஒருவர் உறக்கத்தின் விளிம்பிலும் எங்கோ தூரத்தில் ஒரு காகம் கரைவதை உணரவே செய்வார்' என்று காகம் குறித்துத் தன் பார்வையைப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுவாக, ‘டிட்- யூ - டூ - இட்?' (நீ அதைச் செய்தாயா?) என்கிற தொனியில் கீச்சிடும் பறவை, வேடர்கள் வரும்போது தன் சகாக்களுக்கு ‘டோன்ட் யூ ஸீ ஹிம்?' (நீ அவனைப் பார்க்கவில்லையா?) என்று கேட்பதுபோல இருக்கும். அதனால்தான் அந்தப் பறவைக்குத் தமிழர்கள் ‘ஆள்காட்டிப் பறவை' என்று பெயரிட்டிருக்கலாம்" என்று ஆங்கிலத்தில் 'ரெட் வேட்டில்ட் லேப்விங்' என்று அழைக்கப்படும் பறவையின் தமிழ்ப் பெயருக்குச் சற்றே கிண்டலாக விளக்கம் தருகிறார் கிருஷ்ணன்.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x