

அதிகாலையில் எழுந்து கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையோரம் நடக்க ஆரம்பித்தேன். கடலில் இருந்து ஒரு மீனவர், மீன் பிடித்துவிட்டுத் திரும்பி, அலை அடித்த பகுதியிலிருந்து கரைக்குப் படகைத் தன்னந்தனியாகத் தள்ளிக்கொண்டிருந்தார். அலைவாய் கரையிலிருந்து சுமார் 50 மீ. தூரத்தில் பல படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தூரம் சிறிதாகத் தெரிந்தாலும் சுமார் 5 மீ. நீளமுள்ள படகைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து கரை சேர்ப்பதென்பது சுலபமான காரியமல்ல. மணலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க நான்கு நீளமான மரக்கட்டைகளைப் படகின் அடியில் வைத்து, படகின் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டு வந்தார். சிறிது தூரம் நகர்த்திய பின், இரண்டிரண்டு உருளைகளைப் பின்னாலிருந்து படகின் முன்னே வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்.
அவரைத் தாண்டி பார்வையைச் செலுத்தினேன். ஆரவாரமில்லாமல் அலை அடித்துக் கொண்டிருந்தது. அதிக ஆள் நடமாட்டம் இல்லை. இன்னும் சில மணி நேரத்தில் மனிதக் கூட்டம் அங்கே மொய்க்க ஆரம்பித்துவிடும். ஆங்காங்கே சிலர் ஜாக்கிங், யோகா செய்து கொண்டும் சிலர் நடை பழகிக் கொண்டும் இருந்தனர். கடல் உள்வாங்கியிருந்தது. கடற்கரையில் அலையின் தடம் அழகாக இருந்தது.
நண்டுக் கோலம்
காற்றும், அலையும், கடல்நீரும், மணலும் சேர்ந்து அக்கடற்கரையில் அழகான, விதவிதமான கோலங்களை வரைந்திருந்தன. அவற்றில் ஓர் ஒழுங்கு இருந்தது. படிப்படியாக, வரிவரியாக, வளைந்து நெளிந்து, கிளை கிளையாக மணல் கோலங்கள். இவற்றைப் பார்த்துப் படம்பிடித்துக் கொண்டே வந்தபோது, கேமரா திரைக்குள் சட்டென எட்டிப் பார்த்தன நண்டுகள். என்னைக் கண்டவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் குடுகுடுவெனப் பக்கவாட்டில் ஓடி, தோண்டி வைத்திருந்த வளைக்குள் ஒளிந்தன. நண்டுகள் இட்ட கோலங்கள் மிக அழகாக இருந்தன. ஆம், நண்டுக் கோலங்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவற்றின் வளையைச் சுற்றிக் கிடந்த நண்டுக் குமிழ்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதைப் போலிருந்தாலும், கூர்ந்து கவனித்தபோது, அதிலும் ஓர் ஒழுங்கு காணப்பட்டது (pattern). எனினும் அவற்றிலும் பல வடிவங்கள் இருப்பது தெரிந்தது. நண்டு வளையைச் சுற்றிக் கிடந்த குமிழ்களின் உருவ அளவும், நண்டு இருந்த உருவத்துக்கு ஏற்பவே இருந்தன. சின்னஞ்சிறிய (குண்டுமணியின் அளவேயுள்ள) நண்டுக் குஞ்சுகளுடைய கூட்டுக்கு வெளியே கடுகின் அளவேயுள்ள மணிமணியான குமிழ்கள்.
சற்றுப் பெரிய (சுமார் 2 செ.மீ. நீளமுள்ள) நண்டுகளின் வளையைச் சுற்றிக் குண்டுமணியின் அளவுள்ள குமிழ்கள். சில குமிழ்கள் நீள்உருளை வடிவிலும் இருந்தன. வளையை மையமாக வைத்து, அதைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் சூரியக் கதிர்கள் போலக் குமிழ்கள் கிரணங்களாகப் பரவிக் கிடந்தன. அந்தக் குமிழ்கள் எப்படி உருவாகின்றன எனப் பார்க்கும் ஆர்வத்தில், அங்கேயே அசையாமல் நின்று கொண்டிருந்தேன். அசைந்தால் நண்டுகள் ஓடி ஒளிந்துவிடலாமே.
குமிழ் அடுக்கும் லாகவம்
அப்போது தரையில் இருந்த வளைக்குள் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தது ஒரு நண்டு. உருவில் அப்படியொன்றும் பெரியது இல்லை, அதிகபட்சம் 1 செ.மீ. நீளமே இருக்கும். மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து முழுவதுமாக வெளியே வந்தது. அதன் வளையைச் சுற்றிலும் சில குமிழ்கள் இருந்தன. கொத்தனார் நூல் பிடித்தது செங்கல்லை அடுக்கிக் கட்டியது போல், ஒரே நேர்க்கோட்டில் வரிசையாக இருந்த குமிழ்களின் பக்கமாக நின்ற அந்த நண்டு, சில நொடிகள் கழித்து மெல்லப் பக்கவாட்டில் நகர ஆரம்பித்தது. நகர்ந்து கொண்டிருந்தபோதே கிடுக்கி போன்ற தன் இரண்டு கைகளாலும் மணலை அள்ளி எடுத்து வாயில் திணித்துக்கொண்டே சென்றது. திணிக்கப்பட்ட வேகத்திலேயே மணல் அதன் வாயின் மேற்புறம் சேர ஆரம்பித்தது. ஒரு குமிழ் போன்ற தோற்றத்தை அடையும் தறுவாயில், வரிசையின் கடைசியில் இருந்த குமிழுக்கு அருகில் வந்துவிட்டது அந்த நண்டு.
இப்போது வாயிலிருந்த அந்த மணல் குமிழைத் தனது ஒரு காலால் வெட்டி எடுப்பது போல எடுத்து, நான்கு கால்களின் உதவியால் கடைசியாக இருந்த குமிழுக்கு அடுத்தாற்போல லாகவமாக வைத்தது. கண நேரம்கூடத் தாமதிக்காமல் உடனே பக்கவாட்டில் நகர்ந்து வளைக்கு அருகே சென்று, மறுபடியும் மணலை அள்ளித் திங்க ஆரம்பித்தது. இடமிருந்து வலமாக மெல்ல நகர்ந்து ஒரு குறிப்பிட்ட தூரம் செல்வதும், வலமிருந்து விருட்டென இடப்பக்கமுள்ள வளைக்கு வந்தடைவதுமாக இருந்த அந்தக் காட்சி, வழக்கொழிந்து வரும் டைப்ரைட்ரை எனக்கு நினைவுபடுத்தியது.
ராணுவ நண்டுகள்
தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது அதிலுள்ள உருளை (cylinder) இடமிருந்து வலமாகத் தானாக நகரும், பிறகு தாளின் ஓரத்துக்கு வந்தவுடன் அதிலுள்ள கைப்பிடியை வலமிருந்து இடமாக நாம் நகர்ந்த வேண்டும். இதைப் பார்த்திராதவர்கள் டாட் மேட்ரிக்ஸ் அச்சு இயந்திரம் இயங்குவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
அந்த நண்டு சுமார் 5-6 குமிழ்களை உருவாக்கி வைக்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் நண்டுகளில் சில வகைகள் இப்படி அழகான, மணிமணியான நண்டுக் கோலங்களைக் கடற்கரையில் வரைகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Sunburst அல்லது Sand beads என்கிறார்கள். நான் பார்த்துக் கொண்டிருந்தது ராணுவ வகை நண்டுகள் (Soldier Crab - Dotilla myctiroides). ஏன் இப்படிச் செய்கின்றன என்பதை ஆராய்ந்ததில், பல சுவையான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
குமிழ்கள் ஏன்?
இந்த நண்டுகள் மணலை வாயில் அள்ளித் திணித்துக்கொள்வது அதிலுள்ள கரிமப் பொருட்களை (organic matters) உட்கொள்வதற்கே. தமது கைகளால் மணலை அள்ளி, வாயுறுப்புகளால் அதற்குத் தேவையான உணவை உட்கொண்டு, வாயிலிருந்து சுரக்கும் எச்சில் போன்ற திரவத்தால் மணலை உருளையாக்கி, கூர் நகங்களைப் போன்ற முனைகள் கொண்ட கால்களால் எடுத்துக் கீழே வைக்கின்றன.
மேலும், நான் கண்ட நீள்உருளை வடிவ மணல் குமிழ்கள், அவை வளை தோண்டி வெளியே எடுத்துப் போட்டபோது உருவானவை. இவை ஏற்படுத்தும் அழகான நண்டுக் கோலங்கள் இவற்றின் வாழிட எல்லையைக் குறிப்பிடுவதாகவும்கூட இருக்கலாம். இது போன்ற சில நண்டு வகைகள் இடும் கோலம் அல்லது உருவாக்கும் வளைகள் அவற்றின் இணையைக் கவர்வதற்காகவும்தான்.
கடற்கரையில் மெல்ல வெயில் ஏற ஆரம்பித்தது. இன்னும் சற்று நேரத்தில் கடல் நீர் மேலேறி நண்டுகளின் கோலங்களையும், பல அழகான மணல் கோலங்களையும் நனைத்து, அழித்து விடும். நண்டுகளும் கரையிலிருந்து கடல் உள்வாங்கும்வரை மணலுக்குள் சென்று பதுங்கிவிடும். அப்படிப் பதுங்கும்போது தமது வளையில் காற்றுக் குமிழியை ஏற்படுத்தி அதனுள் வசிக்கும். அதன் பின் வெளியே வந்து மீண்டும் சளைக்காமல் கோலமிடும் பணியைத் தொடரும்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: jegan@ncf-india.org