

கேள்வி: ஆண்களைவிட பெண்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்தவர்களா? இது எப்படி சாத்தியமாகிறது?
பதில்: உலகின் பல பாகங்களில் பெண்கள்தான் தங்களுடைய குழந்தைகள், குடும்பத்தினருக்குத் தேவையான உணவு, தண்ணீர், வெப்பம் உள்ளிட்ட மற்றும் பல ஆதாரங்களை வழங்குகிறார்கள். எனவே, அவர்கள் இதை சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, இயற்கை குறித்த உள்ளார்ந்த புரிதலை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இயற்கை வளங்களை நிர்வகிப்பதிலும், பாதுகாப்பதிலும் அவர்களே முன்னணியில் இருக்கிறார்கள். (எ.கா. 1730இல் ராஜஸ்தானில் உள்ள கேஜர்லி கிராமத்தில் காடுகளை வெட்டுவதை எதிர்க்கும் வகையில் அம்ரிதா தேவி தலைமையில் 363 பிஷ்னோய் மக்கள் செய்த உயிர்த் தியாகம், உத்தராகண்ட் பகுதியில் 1970களில் நடந்த சிப்கோ இயக்கம், கர்நாடகத்தில் சமீப காலத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட திம்மக்கா.)
கே: பெண் எழுத்தாளர்கள் ரேச்சல் கார்சனும், பார்பரா வார்டும் 1960களில் நவீன சுற்றுச்சூழல் இயக்கம் தோன்றுவதற்கு முக்கிய உந்துதலாக இருந்தவர்கள். அவர்களது எழுத்து இப்போதும் பொருத்தமுடையதாக இருக்கிறதா?
ப: இந்த இரண்டு எழுத்தாளர்களுமே சூழலியல், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன் மீது தீவிரப் பற்று கொண்டவர்கள். இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்கிற வளங்குன்றும் வளர்ச்சி (Unsustainable) ஏற்படுத்தும் நெருக்கடிகளைப் பற்றி முதன்முதலில் எச்சரித்தவர்கள் இவர்களே. இவர்களது எழுத்துகள், முன் எப்போதை விடவும் இப்போது மிகுந்த பொருத்தமுடையதாக இருக்கிறது.
கே: குழாய் மூலம் வழங்கப்படும் தூய்மையான, பாதுகாப்பான குடிநீர் கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? சர்வதேச அளவில் தூய்மையான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
ப: நமது கிராமப்புறங்களில் மட்டுமில்லாமல், உலகெங்கிலும் பெண்களும் சிறுமிகளும்தான் நடையாய் நடந்து வீட்டுக்குத் தேவையான குடிநீரை கொண்டு வருகிறார்கள். அவர்களது வீட்டுக்கு அருகிலேயே குடிநீர் கிடைத்தால், அவர்களது வேலைப்பளு குறைந்து, இதன்மூலம் கிடைக்கும் நேரத்தால் அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியும். உலகெங்கும் தண்ணீரால் பரவும் தொற்றுநோய்களால் ஒரு நாளைக்கு சராசரியாக 4 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகின்றன. தூய்மையான குடிநீர் கிடைத்தால், இந்தக் குழந்தைகளையும் பிறந்த குழந்தைகளின் உயிரையும் காப்பாற்ற முடியும். பாதுகாப்பான, குறைந்த விலையில் குடிநீர் வழங்க அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். மேலும், இதனால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள், அதாவது பெண்கள் இது தொடர்பான முடிவு எடுக்கும் நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
கே: உலகின் பல பகுதிகளில் நிலம் பெண்களுக்குச் சொந்தமாக இல்லாத காரணத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா?
ப: ஒரு விஷயம் ஒருவருக்கு உடைமையாவதன் மூலம் சுற்றுச்சூழலை பயன்படுத்துவதற்கான உரிமைகளும் அது சார்ந்த கடமைகளும் உருவாகின்றன. அதுவே இயற்கை உலகுடன் நமக்கு வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது. நமது சமூகங்களில் பெண்களுக்கு நிலம் உடைமையாகவோ, வம்சாவழி சொத்தாகவோ கிடைப்பதில்லை. இதன் காரணமாக குறிப்பிட்ட இந்த இயற்கை வளங்கள் மீதான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. இதன் காரணமாக அவர்களது வாழ்க்கையிலும், மற்ற வழிகளிலும் சமஉரிமை தடுக்கப்படுகிறது. சொத்துடைமை பெண்களுக்கு அதிகாரம் தருகிறது. கடன் வாங்குவதற்கும், பூவுலகம் இயங்குவதற்குத் தேவையான மற்ற பொருளாதார வாய்ப்புகளையும் பெண்களுக்கு சொத்துடைமை வழங்குகிறது.
கே: பெண்களுக்கு வழங்கப்படும் சிறந்த கல்வி, சுற்றுச்சூழலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?
ப: சீரழியும் சுற்றுச்சூழல் ஏற்படுத்தப்போகும் ஆபத்துகள் பற்றி கல்வி பெற்ற சமூகங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும். சுற்றுச்சூழல் வளங்களை பயன்படுத்தும், நிர்வகிக்கும் திறன்களை பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி அதிகரிக்கிறது. இதன்மூலம் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முடிவுகளை தடுப்பதற்கான அதிகாரத்தை கல்வி அவர்களுக்கு வழங்குகிறது. மேலும் இது சிறிய குடும்பங்களை (குறைந்த வாரிசுகளை) வலியுறுத்தும் என்பதால், சுற்றுச்சூழல் மீதான நெருக்கடியை குறைக்கவும் செய்கிறது. ஆணோ அல்லது பெண்ணோ அவர்களிடம் ஏற்படும் நல்லதொரு புரிதல், நல்லதொரு முடிவை நோக்கிச் செலுத்துகிறது.
கே: குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதார சேவைகள் பெண்களுக்கு எளிதாகக் கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுமா?
ப: ஆரோக்கியமான குடும்பங்களில் ஆரோக்கியமான பெண்கள் வாழும்போது, நவீன மருத்துவ வசதிகளை பயன்படுத்திக்கொண்டு, இனப்பெருக்க சுகாதார சேவைகள் மூலம் அவர்கள் அதிகாரம் பெற முடியும். இதன்மூலம் எத்தனை குழந்தைகளை, எந்த இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்களால் முடிவெடுக்க முடிகிறது. இதன் வழியாக தனது குடும்பத்தின் நிதிநிலைமையை மேம்படுத்துவதிலும், ஆரோக்கியமான குடும்பத்தையும், ஆரோக்கியமான உள்ளூர் சுற்றுச்சூழலை பராமரிப்பதிலும் அவர்கள் பங்காற்ற முடியும். இருந்தபோதும், நாடுகள் வளர்ச்சி காணும்போது, மக்கள் ஏழ்மையிலிருந்து முன்னேறினாலும்கூட, வேறு பல அம்சங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கவே செய்கின்றன. நுகர்வுமயமாதல் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
கே: பாலின நேர்மை (gender equity), பாலின சமத்துவம் (Gender equality) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? பாலின நேர்மையை மேம்படுத்த இளைஞர்கள் என்ன செய்ய முடியும்?
ப: பாலின நேர்மை என்பது ஆண்கள், பெண்கள் என இரண்டு தரப்பினருக்கும் நியாயமாக இருப்பது. இப்படி இருந்தால்தான் சமத்துவம் உருவாகும். பாலின சமத்துவம் என்பது இயற்கை ஆதாரங்கள், வாய்ப்புகள், வெகுமதிகள் ஆகிய அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் இரண்டு தரப்பினருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன்மூலம் ஆண்களும் பெண்களும் நிஜமாகவே இணைந்து வேலை செய்வதற்கான சூழல் உருவாக வேண்டும். இந்த விஷயத்தில் இரு தரப்பினருக்கும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் ஒரே மாதிரியான வாய்ப்புகள், உரிமைகள், கடமைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது. கடந்த கால பாலின சமத்துவமின்மையால் இக்காலத் தலைமுறையோ, எதிர்காலத் தலைமுறையோ பாதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.
நன்றி: யு.என்.இ.பியின் “டுன்சா” இதழ்