Last Updated : 09 Jul, 2016 01:15 PM

 

Published : 09 Jul 2016 01:15 PM
Last Updated : 09 Jul 2016 01:15 PM

எங்கே செல்லும் இந்த ‘கிரிவலப் பாதை’?

கடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது மட்டுமில்லாமல், இயற்கைக்கு மிகப்பெரிய எதிரியாகவும் மாறிவருகின்றன.

தல விருட்சம், நந்தவனம், கோயில் காடு, குளங்களில் நீர் சேகரிப்பு எனப் பல வகைகளிலும் இயற்கை, அதன் வளங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகவே தமிழகக் கோயில்கள் இருந்து வந்தன. பல முக்கியக் கோயில்கள் குன்றுகள், மலைகள், காடுகளில் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களுக்குச் செல்லும்போது இயற்கையின் ரம்மியமான சூழல் மனதுக்கு ஒருவித அமைதியைக் கொடுக்கிறது, மனதை ஒருநிலைப்படுத்துகிறது. மலைகள், காடுகளின் வழி செல்லும்போது உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று, பலம் பொருந்தியதாக மாறுகின்றன. ஆனால் அதேநேரம் காடுகளிலும் மலைகளிலும் உள்ள வழிபாட்டு தலங்களுக்குச் சென்று திரும்பும்போது, அங்கே நாம் ஏற்படுத்தும் மோசமான தாக்கத்தை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

ஒரு மலையும் ஒரு நதியும்

அடர்ந்திருந்த காடுகள் வழியாக வழிபாட்டுத் தலங்களுக்காக மக்கள் செல்வது அதிகரித்தவுடன், காடுகளின் தரம் பெருமளவு சீரழிந்துவிட்டது. இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அடர்ந்த மரங்களுக்கிடையில் சிறுத்தைகளும் புள்ளிமான்களும் நடமாடிய திருப்பதி திருமலை, இன்று பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான வசதிகள் மட்டும் நிரம்பியதாக மாறியது எப்படி என்பதை விவரிக்கத் தேவையில்லை. காலம்காலமாக அங்கே சென்றுவருபவர்களுக்கு அந்த மாற்றங்கள் தெரியும்.

மேற்கு மலைத் தொடரின் ஒரு பகுதியான சபரிமலைக்கு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூன்று கோடி பக்தர்கள் வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புவிஅறிவியல் ஆய்வு மையம் நடத்திய ஓர் ஆய்வில், 270 மலை ஓடைகள் மூலம் உருவாகும் கேரளத்தின் மூன்றாவது பெரிய நதியான பம்பை, சபரிமலை பக்தர் நெருக்கடியால் மிக மோசமாகச் சீர்கெட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல, பம்பை ஆற்றின் ஒரு பகுதியான மாராமோனில் பிரபலக் கிறிஸ்தவ மாநாட்டை மார்தோமா தேவாலயம் ஒவ்வோர் ஆண்டும் நடத்திவருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் பம்பை ஆற்றின் மொத்த நீர்பிடிப்புப் பகுதியில் 4.569 சதுர கிலோமீட்டர் பகுதி மாசுபடுகிறது என்று கொச்சியை, சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் தாமஸ் தெரிவிக்கிறார்.

வீழும் மரங்கள்

திருப்பதி மலை, பம்பை நதியைப்போலவே இன்று ஆபத்துக்கு இலக்காகி இருக்கும் மற்றொரு ஊர் திருவண்ணாமலை. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் மக்கள் கூடுவதால் சுற்றுச்சூழல் எந்த அளவு நெருக்கடியைச் சந்திக்கும் என்பதற்குத் தனி ஆராய்ச்சி தேவையில்லை.

அருணாசல மலையைச் சுற்றி வளர்ச்சி என்ற பெயரில், கணக்கில்லாத காட்டுப் பகுதிகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏழு மீட்டர் முதல் 10 மீட்டர்வரை கிரிவலப் பாதையை அகலப்படுத்தப்படும் வேலை சமீபத்தில் தொடங்கியது. இதன் காரணமாக, பல ஆண்டு காலமாக வளர்ந்த அடர்ந்த-நெடிதுயர்ந்த மரங்கள், கோயில் காடுகள், இயற்கையான காட்டுப் பகுதி போன்றவை முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. சில பகுதிகளில் விவசாய நிலங்களும் தாரை வார்க்கப்பட உள்ளன. பணி தொடங்கிய சில நாட்களிலேயே 40-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.

மரங்கள், பறவைகள், உயிரினங்கள்

அருணாசல மலையில் உள்ள ஒரே கோயில்காடான சோணகிரி, நீண்ட காலத்துக்கு முன் இயற்கையாக உருவானதாகக் கருதப்படுகிறது. இந்தக் காட்டில் 100 வருடங்களுக்கு மேல் வளர்ந்த பல மரங்கள் உள்ளன. மஹாவில்வம், கற்பூரவில்வம், பெருநெல்லி, மருதம், சரக்கொன்றை, நுனா, கல்யாண முருங்கை, இலுப்பை, புரசு போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. ஓரிதழ் தாமரை, அம்மான் பச்சரிசி, விழுதிக் கீரை, சிறுகுறிஞ்சான், சீந்தில் கொடி, அவுரி, தொட்டாற்சிணுங்கி, நிழல்சிணுங்கி, கட்டுக்கொடி, சங்கிலை போன்ற பல மூலிகைச் செடிகொடிகளும் இங்கே உள்ளன. இக்காட்டுக்கு அருகிலேயே ஒரு நீர்நிலையும் உள்ளது. இந்தக் கோயில் காட்டுக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பும், நீர்நிலையையும் சேர்த்தே பாதிக்கும்.

திருவண்ணாமலை சுற்றுவட்டாரக் காட்டுப் பகுதி பல வகை பறவைகள், உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. டிக்கில்ஸ் நீல ஈப்பிடிப்பான், கறுப்பு வெள்ளைக் குருவி, பொரிப்புள்ளி ஆந்தை போன்ற பல அரிய பறவைகளும், உடும்பு, முள்ளம்பன்றி, புள்ளிமான், காட்டுப்பூனை, மரநாய், புனுகுப்பூனை போன்ற உயிரினங்களும், பல வகைப் பாம்புகளும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் உள்ளன. அழிந்துவரும் ஊர்வன இனமான இந்திய நட்சத்திர ஆமையும் இங்கே இருப்பது இந்தப் பகுதியின் பல்லுயிர் செழிப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

அழியும் பண்பாடு

கறுப்புவெள்ளைக் குருவி | டிக்கில்ஸ் நீல ஈப்பிடிப்பான்

கிரிவலப் பாதை விரிவாக்கத் திட்டத்தால் பல ஆண்டுகள் வளர்ந்த புளியமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கிளி, மைனா, மரங்கொத்தி, ஆந்தை போன்ற பல பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்த மரங்கள் இவை. செருப்பு இல்லாத பக்தர்கள் நடப்பதற்கும், மலையைச் சுற்றி வாழும் சாதுகள் இளைப்பாறுவதற்கும் நிழல் தந்தவையும் இந்த மரங்கள்தான். பெரிய மரங்களுக்குப் பதிலாகச் சிறு மரக்கன்றுகளை வளர்த்தாலும், அவை எந்த வகையிலும் பெருமரங்களுக்கு ஈடாகாது. வளர்ந்த மரங்களின் அளவை அவை எட்டுவதற்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலும் சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அவர்கள் சமாதி இருக்கும் இடத்தில் மரம் வளர்ப்பது அல்லது பாணலிங்கம் வைப்பது வழக்கம். இந்த விரிவாக்கத்தின்போது சமாதிகள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

“திருவண்ணாமலையில் மண் பாதையில் கிரிவலம் வர வேண்டும் என்பதே நியதி. ஆனால், இப்போது தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மண் பாதையில் நடப்பதைவிட தார்ச் சாலையில் நடப்பது கடினம். தற்போதைய கிரிவலப் பாதையின் வரலாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன் செல்கிறது. பாண்டியர்களின் காலத்தில் புதையுண்ட குறியீட்டுக் கற்கள் இன்றும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட கலாசார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் இந்த விரிவாக்கத்தால் முற்றிலும் அழியும்” என்று வருத்தப்படுகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் க. அன்பழகன்.

நிரந்தரத் தடை தேவை

மலைகளிலும் காடுகளிலும் அமைந்துள்ள கோயில்களுக்குப் பக்தர்கள் செல்லும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பும் அத்தியாவசிய வசதிகளும் தேவை என்பது உண்மைதான். ஆனால், எந்தக் கடவுளும் இயற்கையையோ அதன் படைப்புகளான மற்ற உயிரினங்களையோ துன்புறுத்தியோ, அழித்தோ தன்னைத் தரிசிக்குமாறு கூறவில்லை. மாதத்தில் அல்லது வாரத்தில் ஒரு நாள் திருத்தலங்களுக்குச் செல்லும்போது நமக்கு ஏற்படும் சிறுசிறு அசெளகரியங்களை, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பொறுத்துக்கொள்வதில் தவறில்லை.

இதுபோன்ற விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன் அரசு நிர்வாகமும் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கிறதா, அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்றும் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்றால், அதற்கு மாற்று திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.

தற்போதைய விரிவாக்க நடவடிக்கை அருணாசலேஸ்வரர் கோயிலின் சுற்றுவட்டாரத்தையும் கிரிவலப் பாதையையும் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை நகரையே மோசமாகச் சீரழிக்கக்கூடிய ஒன்று. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது இது நிரந்தரமாக நிறுத்தப்பட்டால்தான் திருவண்ணாமலை என்ற ஊர் எதிர்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும்.

சதுரகிரி சீரழிந்த கதை

சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில், வத்திராயிருப்பில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டு காலமாகவே இந்தக் கோயிலில் மக்கள் வழிபட்டுவந்தாலும், ஆடி அமாவாசையில் வழிபடுவது மட்டுமே முதன்மையானதாக இருந்துவந்தது.

கரடி, சிறுத்தை, யானை போன்ற காட்டுயிர்களின் வாழ்விடமான செங்குத்தான இந்த மலைகளில் ஏறுவது எளிதல்ல. ஆனால், ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பிரபலப்படுத்தியதால் இந்த மலையின் மீது எல்லா நாட்களும் மக்கள் ஏற ஆரம்பித்துவிட்டார்கள். தானிப்பாறை வழித்தடத்தில் மட்டுமே பக்தர்கள் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு ஆறு, காட்டு வழிகளும் பக்தர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அழிவு

இந்த மலையில் பக்தர்களுக்குக் கஞ்சி கொடுப்பதற்காகப் பாறை களையும் மற்றப் பொருட்களையும் பயன்படுத்திக் கஞ்சி மடங்கள் கட்டப் பட்டுள்ளன. இதற்காக மரங்கள் வெட்டப்பட்டதால் மண் அரிப்பு, சட்டவிரோதமாக மணல் எடுப்பது எனப் பல வகைகளில் சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக இயற்கை யாக ஓடிக்கொண்டிருந்த நீர்வழித் தடங்களும் தொடர்ச்சியான மனிதத் தொந்தரவுகளால் இடம் மாற்றப்பட்டு விட்டன. சமீபத்தில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளம், மனிதத் தொந்தரவுகளால் உருவானது என்பதில் சந்தேகமில்லை. மக்கள் வசதிக்காகச் சமீபகாலத்தில் கட்டப்பட்ட 120 கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவு, மலையில் ஓடும் ஓடையிலேயே கலக்கப்படுகிறது. இதே நீரைத்தான் பக்தர்கள் பருகவும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சதுரகிரி கோயில் இருக்கும் இடத்தைத் தவிர்த்து, மற்றப் பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக இந்த மலையில் கட்டிடம் கட்டக்கூடாது, மரம் வெட்டக்கூடாது, பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், யாரும் இவற்றைப் பின்பற்றுவதில்லை. மலையின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடப்பது, சதுரகிரி சித்தர்கள் வாழ்ந்த இடமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரிய அணிலுக்கு நெருக்கடி

சாம்பல் அணில்

இந்தப் பின்னணியில் சதுரகிரி மலையின் சீரழிவைத் தடுக்க, மதுரையைச் சேர்ந்த எம்.எஸ். முருகன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 63 ஏக்கர் 76 சென்ட் நிலம் மட்டுமே தேவதாயம் முறையில் கோயிலுக்கு முதலில் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்துக் கோயில் நிர்வாகத்துக்கு வனத்துறை கூடுதலாகக் கொடுத்த 10 ஏக்கர் நிலம், பிறகு திரும்பப் பெற்றுவிட்டதாக இந்த வழக்கில் அவர் கூறியிருக்கிறார்.

சதுரகிரி மலைப் பகுதி அரிய உயிரினமான சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் கீழ் வருகிறது. இந்த அணில்கள் இங்கு இருக்கும் பழ மரங்களைச் சார்ந்தே வாழ்கின்றன. வனத்துறையின் ஆய்வுத் தரவுகள் 107 வகையான பழ மர வகைகளும், எண்ணிலடங்காக் காட்டு மரங்கள் இங்கு இருந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இன்று 30 பழ மர வகைகளே உள்ளன. பெரும்பாலான காட்டு மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தில் கோயில் வளாகத்தைத் தாண்டி வெளிப்பகுதியில் கட்டிடங்களே நிரம்பிக் காணப்படுகின்றன.

1890-களில் திருவண்ணாமலை கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகள் பசுமையாகவும் கட்டிடங்கள் குறைந்தும் காணப்படுகின்றன.

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x