

தேங்காயைச் சந்தைப்படுத்துதலில் முதல் நிலை, அவற்றைச் சரியாகக் காயவைத்து நார் மற்றும் ஓட்டை பிரித்தெடுப்பது. பொதுவாக எரியூட்ட மேடை (மச்சன் வகை), எரியூட்ட உலர்த்திகள் மற்றும் சூரியசக்தியில் இயங்கும் உலர்த்திகள் என மூன்று வகையில் தேங்காய் காயவைக்கப்படுகிறது.
எரியூட்டப்படும் முறை
இருந்தாலும் இத்தீவுகளில் பெரும்பாலும் எரிபொருளைக் கொண்டு உலர்த்தும் முறையே முதன்மையாகப் பின்பற்றப்படுகிறது. நிகோபார் மக்கள் ஒரு மீட்டர் உயரமான மூங்கில் மேடை அல்லது எஃகு கம்பிகளைக் கொண்டு மேடை அமைக்கின்றனர். இதன்மேல் இரண்டாக உடைக்கப்பட்ட முற்றிய தேங்காயை அடுக்குவார்கள். இதன் அடிப்புறத்தில் உலர்ந்த தேங்காய் ஓடுகளைக் கொண்டு எரியூட்டுகின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் கொப்பரைகள் தயாராகின்றன.
இதேமுறையில் கான்கிரீட்டால் கட்டப்பட்ட எரியூட்டும் அடுப்புகள் அந்தமானில் வர்த்தக முறையில் செயல்பட்டு வருகின்றன. உலர்ந்த கொப்பரையின் ஈரப்பதம் நான்கு முதல் ஆறு சதவீதம்வரை இருக்கவேண்டும். ஆனால் புகை, தூசுகள், எரிந்துபோன கொப்பரை மற்றும் பூஞ்சையின் தாக்கம் இருப்பதால் இம்முறையில் தயாராகும் கொப்பரையின் தரம் குறைவாகும்.
அந்தமானில் ஒரு கிலோ ஒன்பது முதல் 11 ரூபாய்வரை விலைபோகும் முற்றிய அந்தமான் தேங்காய், தமிழகச் சந்தையில் ரூபாய் 18 முதல் 20 வரை விலைபோகும். ஆனால் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவால் லாபம் குறைகிறது.
சூரியசக்தி உலர்த்திகள்
அந்தமானில் ஒரு சதுரமீட்டருக்கு 200 முதல் 1,200 வாட்ஸ் சூரியஒளி வீசுகிறது. இவற்றைப் பயன்படுத்தும் விதத்தில் தற்காலத்தில் சூரியசக்தியால் இயங்கும் உலர்த்திகள், தீவுகளுக்கென வடிவமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை 500 முதல் 1,000 தேங்காய்வரை உலர்த்தும் திறன் கொண்டவை. 30 முதல் 35 மணி நேரத்தில் கொப்பரையின் ஈரப்பதம் ஐந்து முதல் ஏழு சதவீதம்வரை குறைந்துவிடுகிறது.
மேகமூட்டம் இல்லாத நாட்களில் உலர்த்தியின் உள்வெப்பநிலை 65 முதல் 70 டிகிரி வரை எட்டக்கூடும். இவ்வகை சூரியசக்தியில் இயங்கும் உலர்த்திகளை மற்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அந்தமான் தேங்காய் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களில் லாரி அமிலம் (மிடில் செயின் பேட்டி ஆசிட்), எண்ணெய் (62 முதல் 70 வரை), தாதுஉப்புகள் அதிகமாகக் காணப்படுவது மற்றொரு சிறப்பம்சம். புதிய தொழில்நுட்பத்தில் நல்ல தரமான பொருட்களாக உற்பத்தி செய்யப்பட்டால் சர்வதேசச் சந்தையில் தேய்காய்ப் பொருட்கள் நல்ல லாபம் ஈட்டும்.
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com