

மந்திரிகளை மகிழ்விப்பதற்காக இன்றைக்கு `இந்திரரே… சந்திரரே’ என்று போலியாகப் புகழும் நிலை இருக்கிறது. ஆனால் அவ்வையார் வாழ்ந்த காலத்தில் மன்னரை வாழ்த்த பெரியதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.
‘உன் நாட்டில் நீர் சேமிப்பு முறைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில், விவசாயம் நன்றாக நடக்கும் நிலையில், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், நீ உயர்வான இடத்தில் வைத்து மதிக்கப்படுவாய். விவசாயம் நன்றாக நடக்கும் வரைதான் நீ அரசன்’ என்று ஒரு பேருண்மையை, மன்னரைப் பார்த்து ஒரு புலவரால் அன்றைக்கு சொல்ல முடிந்திருக்கிறது. அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அந்த நாள் மன்னனுக்கு இருந்திருக்கிறது. இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத இந்தக் காலத்தில் நமக்கு நாமே பயிர், காய்கறி விதைகளைப் பாதுகாத்து, பராமரித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு தேசிய விதைத் திருவிழாவை ஆஷா (ASHA - Alliance for Sustainable & Holistic Agriculture) நான்காவது ஆண்டாக நடத்தியது. இந்த முறை இந்தத் திருவிழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது தனிச்சிறப்பு. விழாவிலிருந்து முக்கியத் துளிகள்…
120-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைப் பாதுகாவலர்கள் சங்கமித்திருந்த இந்த விதைத் திருவிழாவில் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் பாரம்பரிய விதைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். ஏறக்குறைய 60 அரங்குகளில் பாரம்பரிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நுண் ஊட்டச் சத்து நிறைந்தவை, வறட்சியை தாங்கி வளர்பவை,வெள்ளத்திலும் வளர்பவை என பல்வேறுபட்ட பருவநிலைகளுக்கும், மாறிவரும் தேவைகளுக்கும் ஏற்ற விதை ரகங்கள், நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மாவீரன் அலெக்சாண்டர் சாப்பிட்டதாக நம்பப்படும் டேராடூன் பாஸ்மதி போன்ற பாரம்பரிய ரகங்களும் கர்ப்பிணிக்கும் கருவில் வளரும் குழந்தையின் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கும் பூங்கார் உள்ளிட்ட நெல் ரகங்களும் ஆச்சரியப்படுத்தின. “2009-ல் இந்த பூங்கார் ரகம் 3 பேரிடம் மட்டுமே இருந்தது. இன்றைக்கு 300 பேர்வரை இந்த ரகத்தை பயிரிட்டு வருவது மகிழ்ச்சி” என்றார் இயற்கை விவசாய ஆர்வலர் பார்த்தசாரதி.
மண் பானைகளின் மகத்துவம், மாடித் தோட்டத்தின் அவசியம், பயணணிக்கும்போது விதைப் பந்துகளை எறிவதன்மூலம் புதிய தாவரத்தை வளர்ப்பதற்கு உதவ விதைப்பந்து தயாரிப்பு, பல வண்ண-வகை சோள வகைகள், இயற்கை பருத்தியிலிருந்து பெறப்படும் பஞ்சு, திரி என பல வகை அரங்குகள் திருவிழாவை சிறப்பாக்கின.
விவசாயிகளின் வாழ்வாதாரம் - நுகர்வோரின் ஆரோக்கியம் - விவசாயப் பன்மயம் ஆகிய மூன்று புள்ளிகளையும் ஒன்றிணைப்பது விழாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே கருத்தாளர்கள் பலரும் பேசினர். வேறு துறைகளை தொழிலாகக் கொண்டாலும் இயற்கை வேளாண்மை சார்ந்து இயங்கும் சமூகப் பிரபலங்களும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.
ஆஷா (ASHA), இந்திய விதை விடுதலை இயக்கம் (Bharat Beej Swaraj Manch), சஹஜ சம்ருதா (Sahaja Samruddha) மற்றும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட இந்த விழாவில் எங்கெங்கு காணினும் படித்து முடித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் கூட்டம் மூன்று நாளும் உற்சாகமாக வந்திருந்து இளமைத் திருவிழாவாக மாற்றியிருந்தது.
3000 வகை விதைகள்
தேசிய விதைத் திருவிழாவில் தனிநபராக பல்வேறு பாரம்பரிய விதைகளைச் சேகரித்திருந்த பலரும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். பல வருட தீவிர உழைப்பின் பயனை அங்கு பார்க்க முடிந்தது.
சிலர் தங்களிடம் உள்ள விதைகளை வந்திருந்தவர்களுக்குக் கொடுத்து, பதிலுக்கு மற்றவர்களிடம் இருந்த விதைகளைப் பெற்றுச் சென்றனர். இப்படிப் பல அரிய விதைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்கள் கையில் விதைகளை மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட விதை சேகரிப்பாளர்கள் 3,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை ஒரே இடத்தில் காட்சிக்கு வைத்திருந்தனர். இத்தனை ரக விதைகள் நம் நாட்டின் உயிரினப் பன்மை வளத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.
- பாரதி. வி