

ஊனாகி உயிராகி ஒவ்வொரு இயக்கத்திலும்
இருப்பது வெயிலாற்றலே
பண்ணை வடிவமைப்பில் வெயிலின் பங்கு மிகவும் இன்றியமையாதது. பண்ணைக்கு நீர் எவ்வளவு அடிப்படையானதோ, அந்த அளவுக்கு வெயிலும் அடிப்படையானது. காற்று வீசுவதற்கும் மழை பொழிவதற்கும் கதிரவனின் வெயிலாற்றலே அடிப்படையானது.
சுட்டெரிக்கும் வெயில்தான் நமக்கு உணவை வழங்கிக்கொண்டிருக்கும் பயிர்களுக்குத் தேவையான உணவை வழங்குகிறது. இந்த வெயிலாற்றலே கீரையாக, காயாக, பழமாக, இறைச்சியாகக் கிடைக்கிறது. கதிரவனின் மூலஆற்றல் எளிய சர்க்கரை வடிவமாகத் தொடங்கி, வெவ்வேறு வடிவங்களில் சேமிக்கப்பட்டு நமக்குக் கிடைக்கிறது.
இந்த வெயிலின் ஆற்றல், கதிரியக்கம் (radiation) என்ற முறையில் பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கதிரவனால் கொடுக்கப்படுகிறது. கடத்தும் ஊடகம் இல்லாமல் ஓரிடத்தில் இருந்து ஆற்றல் மற்றொரு இடத்துக்கு மாற்றப்படுவதற்குக் கதிரியக்கம் என்று பெயர். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லக் கம்பிகளைப் பயன்படுத்துகிறோம். அந்தக் கம்பி ஓர் ஊடகம். கம்பி போன்ற ஓர் ஊடகம் இல்லாமல், மின்சாரத்தைக் கடத்துவோமேயானால், அதற்குக் கதிரியக்கம் என்று பெயர். இப்படியாகக் கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல், நமக்குப் பல வடிவங்களில் கிடைக்கிறது.
வெயிலாற்றல் வகைகள்
நமது பண்ணைக்குக் கிடைக்கும் வெயிலாற்றலை இரண்டு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். நேரடியாகக் கதிரவனிடமிருந்து கிடைப்பது; மற்றது மேகங்கள், தூசுகள் போன்றவற்றால் எதிரொளிக்கப்பட்டுக் கிடைப்பது. அந்த முறையில் பார்த்தால் கதிரவனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலில் 30% திரும்ப வளிமண்டலத்துக்கே அனுப்பப்பட்டுவிடுகிறது. கிடைக்கும் ஆற்றலும் நமது பண்ணை அமைந்திருக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி மாறிக் கிடைக்கும். நம்மைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் வெயிலாற்றல் சற்று அதிகமாகவும், ஐரோப்பா போன்ற பகுதிகளில் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.
இந்த வெயிலை ஒளியாகவும், வெப்பமாகவும் பிரித்துப் பார்க்கலாம். இந்த ஒளி அளவும் வெப்பமும் அலைநீளங்களைக் கொண்டு அளக்கப்படுகின்றன. பண்ணையில் வீடுகளைக் கட்டுவதற்கும், மரங்களை வளர்ப்பதற்கும் இந்த வெயிலாற்றலின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது புறஊதா (ultra violet ray) என்று அழைக்கப்படும் கதிர். 0 முதல் 400 மில்லி மைக்ரான் என்ற அளவில் உள்ளது.
(ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு, மில்லி மைக்ரான் என்பது அதிலும் ஆயிரத்தின் ஒரு பங்கு). இதைக் கண்ணால் நேரடியாகக் காண முடியாது. இவை ஓசோன் என்ற வளிமண்டலக் காற்றடுக்கால் தடுக்கப்பட்டுவிடும், அதிக அளவாக 2% மட்டுமே பூமியை வந்தடையும். இந்தக் கதிர்கள் தோல் புற்றுநோய்களையும், தோல் புண்களையும் ஏற்படுத்தும் திறன் கொண்டவை.
மண் வெப்பம் உறிஞ்சுமா?
அடுத்ததாக 400 முதல் 626 மில்லிமைக்ரான் அளவுள்ள கதிர்கள், இவை நம் கண்ணால் காணக்கூடிய வானவில்லின் ஏழு நிறங்கள். இவற்றை 41% வரை நமது நிலத்துக்குள் பெறுகிறோம். இதை அடுத்து நீளமுள்ள கதிர்கள், அதாவது 627 முதல் 3000க்கு மேல் மில்லி மைக்ரான் உள்ள கதிர்கள் வெப்பத்தை உமிழும் தன்மை கொண்ட கதிர்களும், ரேடியோ அலைகளும் இதில் அடங்கும். இவை செந்நிறத்தில் காணப்படும், பிறகு அகச்சிவப்பு என்றும் விரிந்துகொண்டே போகும்.
வெயில் ஒரு பரப்பில் பட்டு எதிரொளிக்கும்போது வெப்பம் ஏற்படுகிறது. அதாவது வெயில் படும் பரப்பால் ஒளி உறிஞ்சப்பட்டால், அது வெப்பமாக மாறுகிறது. குறிப்பாகப் பளபளப்பற்ற கறுப்புப் பரப்பு அதிக வெப்பத்தைத் தருகிறது. பளபளப்பான ஆடி (கண்ணாடி) மிகக் குறைவான வெப்பத்தைத் தருகிறது. ஏனெனில் அது அதிக அளவு வெயிலை, எதிரொளித்து வெளியேற்றி விடுகிறது.
நமது நிலம் கறுப்பு மண்ணைக் கொண்டிருந்தால், அதாவது கரிசல் நிலமாக இருந்தால் அதிக அளவு வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
(அடுத்த வாரம்: வெயிலாற்றலை முழுமையாக அறுவடை செய்கிறோமா? )
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com