

சில யோசனைகள் விநோதமானதாக இருக்கும். சில புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு சில இரண்டும் கலந்த கலவையாக இருக்கும். அந்த வகையில், ஆற்றல் உற்பத்தியில் புதிய யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு துருக்கியின் காஸியான்டெப் பகுதியில் ஒரு பசுமை நகரத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கே வசிக்கப்போகும் இரண்டு லட்சம் மக்களின் வீடுகளில் பிஸ்தாக்களால் சமைக்கப்போகிறார்கள்.
பிஸ்தாக்களால் மட்டும் எப்படி சமைக்க முடியும்? இந்தப் பகுதியில் இருந்து கடந்த ஆண்டு 4 கோடி கிலோ பிஸ்தா ஏற்றுமதி ஆகியிருக்கிறது. அப்படியென்றால் எத்தனை பிஸ்தா ஓடுகள் கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பயோகாஸ் உற்பத்திக்கு இந்த பிஸ்தா ஓடுகளை எரித்துப் பயன்படுத்தப் போகிறார்கள்.
இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், அந்த நகரத்தின் 60 சதவீத ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கிறது கிஸ்மோடோவின் அறிக்கை. ஈரான், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிஸ்தா உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் துருக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.