

இயற்கையான சாகுபடியில் விளைந்த பருத்தியால் ஆன ஆடைகளின் விற்பனை மற்றும் கண்காட்சியைச் சென்னையைச் சேர்ந்த துலா அமைப்பு ஒருங்கிணைத்து, கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்குச் சென்னை சவேரா ஹோட்டலில் நடத்தியது. திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் ரேவதி, ரோகிணி ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
“தற்போது நம்மிடையே இருக்கும் வாழ்க்கை முறை பற்றி பல கேள்விகள் இருக்கின்றன. உடல் பருமன் பிரச்சினை, இதய நோய்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு நம்முடைய உணவு முறையே பெரிதும் காரணம். நாம் நல்ல சாப்பாட்டை, நீரைக் காற்றைச் சுவாசித்து வளர்ந்தோம். இதை நம்முடைய அடுத்த சந்ததியினருக்குப் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு, கேள்விகளுக்குப் பதில் தேடிய என்னுடைய பயணத்தில்தான் இயற்கை வேளாண்மையை ஆதரிப்பது, பருத்தி ஆடைகளை ஆதரிப்பது போன்றவற்றை சந்தித்தேன்” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பாரம்பரியமான பருத்தி ரகங்களால் ஆடைகளை நெய்து தரும் நெசவாளர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் பிரபலமான கமீர், ஹைதராபாத்தின் மல்கா, பெங்களூரின் நேச்சர் ஆல்லி, சென்னையின் துலா போன்ற பாரம்பரியப் பருத்தி உற்பத்தி மையங்களில் நெய்யப்பட்ட சேலை, ஜிப்பா போன்ற ஆடைகளும், அலங்கார விரிப்புகளும், திரைச் சீலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கான வண்ணங்களைக்கூட இயற்கையான காய்கறி, கனி வகைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங் களைப் பயன்படுத்தியிருந்தது இந்த ஆடைகளின் சிறப்பு.