Published : 03 Sep 2016 11:26 am

Updated : 14 Jun 2017 18:46 pm

 

Published : 03 Sep 2016 11:26 AM
Last Updated : 14 Jun 2017 06:46 PM

ஆரியங்காவில் சிக்கித் தவிக்கும் யானைகள்

நமது பண்பாட்டோடு பின்னிப் பிணைந்த யானைகள் ஒரு காலகட்டத்தில் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தற்போது 13 ஆசிய நாடுகளில் மட்டுமே எஞ்சியுள்ளன. தந்தங்களுக்காகக் கள்ளவேட்டை, வாழிடம் சுருங்குதல், வாழிடம் துண்டாடப்படுதல் மற்றும் தரம் குன்றுதல், மனித யானை எதிர்கொள்ளல் அதிகரிப்பு போன்ற பல்வேறு சிக்கல்களில் இருந்து ஆசிய யானைகளைக் காப்பாற்றுவது, முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் சவாலாக மாறியுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களில் வாழிடம் பிளவுபடுவது யானைகளின் எதிர்காலத்தை மிகப் பெரிய கேள்விக்குறி ஆக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்வரை காலநிலைத் தேவைக்கு ஏற்றதுபோல் யானைகள் தங்கு தடையின்றி எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது யானைகள் வாழும் பகுதிகளை மனிதர்களின் பயன்பாட்டு தேவைகள் சூழ்ந்துகொண்டுவிட்டதால், வேறெங்கும் வலசை செல்ல முடியாமல் யானைகள் ஓரிடத்திலே முடங்கிப்போயுள்ளன.


மேலும் யானைகள் வாழும் காடுகளை நெடுஞ்சாலைகளும், ரயில் பாதைகளும், பிரம்மாண்டமான அணைக்கட்டுகளும் பல துண்டுகளாகக் கூறுபோட்டுவருவதால், பல யானைக் குழுக்கள் எண்ணிக்கையில் சுருங்கி, ஒரு தீவு போன்ற பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன. இது அவற்றின் அழிவுக்குத் தொடக்கமாக அமையலாம் என்பதுதான் இந்தப் பிரச்சினையை முக்கியமாக்குகிறது.

இயற்கை இணைப்பு

இதுபோலத் தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாகத் தமிழக-கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அகஸ்திய மலை அருகே வாழும் யானைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது . மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அமைந்துள்ள அகஸ்திய மலை தொடர் மற்றும் பெரியாறு மலை தொடர் இரண்டுமே உயிரினப் பன்மை (Bio diversity) களஞ்சியமாக விளங்குகின்றன.

இந்தப் பகுதிகள் தென் தமிழ்நாட்டுக்கான இயற்கை நீர்த்தொட்டிகளைப் போலவும், வைகை மற்றும் தாமிரபரணியின் நீராதாரமாகவும் விளங்குகின்றன. இந்த இரண்டு மலைத்தொடர்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் செங்கோட்டை அருகே ஆரியங்காவு கணவாயில் இயற்கையாகப் பிளவுபட்டுள்ளன. தென் பகுதியில் உள்ள அகஸ்திய மலைத் தொடரிலிருந்து, வடக்கில் இருக்கும் பெரியாறு மலைத் தொடருக்குச் சென்றுவருவதற்கு இந்தக் கணவாயைத்தான் யானைகளும் மற்ற காட்டுயிர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்திவந்துள்ளன. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைப்பதால் ஆரியங்காவு கணவாயைக் காட்டுயிர்களின் காரிடராக, அதாவது வாழிட இணைப்புப் பகுதியாக மாற்ற வேண்டுமென காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மனிதத் தலையீடு

ஆரியங்காவு காட்டுயிர் இணைப்புப் பகுதியில் நூறாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் செங்கோட்டையையும் கேரளத்தின் புனலூரையும் இணைக்கும் மீட்டர்கேஜ் ரயில் பாதை ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டது. இப்படியாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவானவுடன் ஆரியங்காவு இணைப்புப் பகுதியில் மக்கள் குடியேறுவது அதிகரித்தது. காலப்போக்கில் இணைப்புப் பகுதியில் காடு வேகமாக அழிக்கப்பட்டு ரப்பர், தேயிலைத் தோட்டங்களாக உருமாறியது. 1970-களில் ரயில் போக்குவரத்தும் சாலைப் போக்குவரத்தும் அதிகரித்து, காடுகளுள் மனித ஆக்கிரமிப்பு விரிவடைந்ததால் ஆரியங்காவு இணைப்புப் பகுதியில் நெடுங்காலமாக இருந்துவந்த காட்டுயிர்களின் நடமாட்டம் முற்றிலும் தடைபட்டது.

தற்போது அகஸ்திய மலைப் பகுதியில் சுமார் 100 முதல் 150 யானைகள் வேறெங்கும் வலசை செல்ல வழியில்லாமல் முடங்கிப் போயுள்ளன. அகஸ்திய மலைப் பகுதியில் வெகு சில ஆண் யானைகளே இருப்பதாகத் தெரிகிறது. அவ்வப்போது தலைதூக்கும் கள்ளவேட்டையில் சிக்கி மீதமுள்ள ஆண் யானைகளும் இறக்க நேரிட்டால், அகஸ்திய மலையில் எஞ்சியிருக்கும் யானைக் கூட்டத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும். கேரளத்தின் மிகப் பெரிய யானை கள்ளவேட்டை சமீபத்தில் இப்பகுதியில் நடந்துள்ளது, இப்பகுதியில் யானைகளுக்கு உள்ள பெரும் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுகிறது.

அப்படியே கள்ளவேட்டையிலிருந்து யானைகள் தப்பித்தாலும், சிறிய குழுக்களாக வாழும்போது, நெருங்கிய சொந்தத்துக்குள் இனப்பெருக்கம் நடைபெறுவதால் ஏற்படும் மரபணு குறைபாடுகளால் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து கோமாரி, நிமோனியா போன்ற நோய்கள் யானைகளைத் தாக்கும் ஆபத்து உள்ளது.

வழி இருக்கிறது

மரபணு குறைபாடு, நோய்த் தொற்று, கள்ளவேட்டை, இயற்கைச் சீற்றங்களின் தாக்கம் போன்ற இடையூறுகளிலிருந்து அகஸ்திய மலை யானைகளைப் பாதுகாக்க வேண்டுமானால், ஆரியங்காவு இணைப்புப் பகுதியில் தடைபட்டுள்ள யானைகளின் இயல்பான நடமாட்டத்தையும் வலசையையும் மீட்டெடுக்க வேண்டும்.

ஆரியங்காவு இணைப்புப் பகுதியை மீட்டெடுப்பதற்கு அறிவியல்ரீதியாக உள்ள சாத்தியக்கூறுகளை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மேற்கொண்ட களஆய்வின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறோம். கேரள மாநிலத்தில் எம்.எஸ்.எல். என்ற பகுதிக்கு அருகேயுள்ள இணைப்புப் பகுதி யானைகள் மற்றும் இதர காட்டுயிர்கள் பயன்படுத்த வசதியாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எம்.எஸ்.எல். பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதி செங்குத்தாக இருப்பதால், தேசிய நெடுஞ்சாலையைக் காட்டுயிர்களால் கடக்க முடியவில்லை.

இணைப்புப் பகுதியின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு, தெற்குப் பகுதிகளில் சாலையின் வெகு அருகில் யானைகள் வந்து சென்றிருப்பது சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும்கூட, யானைகளால் சாலையைக் கடக்க முடியவில்லை. எனவே, ஆரியங்காவு இணைப்புப் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை இயல்பாக்க, சாலையை ஒட்டியுள்ள பகுதியைச் சமன்படுத்த வேண்டியுள்ளது. காடு வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கேம்பா நிதியை (CAMPA fund) இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தமிழக, கேரள அரசுகள் இணைந்து ஆரியங்காவு கணவாய் ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து காட்டுப் பகுதியைப் பாதுகாப்பதும் அவசியம்.

யானைகள் பிழைக்கும்

ஆரியங்காவு எம்.எஸ்.எல். இணைப்புப் பகுதியை மீட்பதன் மூலம் யானைகளும், புலிகளும் மற்ற விலங்குகளும் அகஸ்திய மலையிலிருந்து பெரியாற்றுக்கும், பெரியாற்றிலிருந்து அகஸ்திய மலைக்கும் எளிதாகச் சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் அகஸ்திய மலைப் பகுதியில் வாழும் யானைகளும் புலிகளும் அழிவின் பிடியிலிருந்து மீள வழி பிறக்கும்.

ஆரியங்காவு இணைப்புப் பகுதி புனரமைப்பு மற்றும் மீட்புத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 சதுர கி.மீ. பரப்பு கொண்ட மிகச் சிறந்த யானைகள் வாழிடத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் மீட்டெடுக்க முடியும். பொதுவாகவே யானைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக மற்றும் கேரள அரசுகள், ஆரியங்காவு யானைகள் இணைப்புப் பகுதியை விரைந்து மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.

கட்டுரையாளர், காட்டுயிர் உயிரியலாளர் - தொடர்புக்கு: srinivasv@feralindia.org

தமிழில்: என். லட்சுமிநாராயணன் - தொடர்புக்கு: westernghats.nln@gmail.com
யானைகள் அழிவுஅழிந்து வரும் இனம்சூழலியல்ஆசிய யானைகள்தந்தங்கள் வேட்டைகள்ளவேட்டைவாழிடம் சுருங்குதல்வாழிடம் துண்டாடப்படுதல்மனித யானை எதிர்கொள்ளல்யானைகள் பாதுகாப்புஆரியங்கா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x