கடலம்மா பேசுறங் கண்ணு 04: பழங்குடியின் பெருங்குரல்

கடலம்மா பேசுறங் கண்ணு 04: பழங்குடியின் பெருங்குரல்
Updated on
2 min read

மடிவலைக் காலம், கரைமடிவலைக் காலம் ஒட்டுமொத்த மீனவக் கிராமத்துக்கும் கொண்டாட்டக் காலம். எல்லா வீடுகளிலும் தாராளமாய் மீன் சமையல் இருக்கும். அந்த வகையில், `வேளா ஏறப்பிடிப்பு’ கன்னியாகுமரிக் கடற்கரையில் பெரும் கொண்டாட்டம்தான். மடி தாங்காத வேளா மீன்பாடு!

மடி கிழிந்துவிடாமல் இருக்க `புறமடி’ என்று இன்னொரு மடிவலையைப் பின்னால் வளைத்து வருவார்கள். கடல், கணக்குப் பார்க்காத பெரும் வங்கி. நாளையைக் குறித்து அந்தக் கடல் மீது நம்பிக்கையைச் சேமித்து வைத்திருக்கிறவன்தான் கடலோடி.

கடலோடிச் சமூகத்தைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் அவர்களுடைய சொத்து. அதிகமான பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்குக் கடற்கரையில் என்றுமே தனி மரியாதைதான். அதேபோல தன் பெற்றோரை முதுமைக் காலத்தில் கவனித்துக்கொள்ளாத ஆண் மகனைச் சமூகம் மதிப்பதில்லை. தாய்மை அக்கறை கடல் பழங்குடிச் சமூகத்தின் தனிப்பெரும் மதிப்பீடு.

பழங்குடி ஞானம்

பன்னாட்டளவில் இன்று பெரிதாக விவாதிக்கப்படும் புலம் `மோதல் மேலாண்மை’. இனத்துக்குள், இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு என்பதாகப் பல மட்டங்களில் மோதல்களுக்குத் தீர்வு காணும் தூதாண்மை அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. வளப்பகிர்வு, எல்லைத் தாவா, அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டிகள் முதல் வாழ்வாதார உரிமையை நிலைநிறுத்துதல்வரை பல வகைகளில் இன்றைக்கு நெருக்கடிகள் உருவாகின்றன.


வேளாமீன்

கடல் பழங்குடிச் சமூகம் வன்முறை மலிந்த ஒன்று என்பது போன்ற அரைகுறையான ஒரு புரிதல் நிலவுகிறது. மானுடவியல் ரீதியாக இதை நாம் அணுக வேண்டும். மண் சார்ந்து வாழும் எல்லா இனக்குழுக்களும் மோதல்களை அருமையாக மேலாண்மை செய்துவந்துள்ளன. பழங்குடி ஞானம் அந்தச் சமூகத்தின் எல்லாச் சிக்கல்களுக்கும் அருமையான தீர்வுகளை வைத்திருந்தது.

ஆறா வடுக்கள்

இன்றைய சூழலில் அந்தச் சமூகங்களின் மீது வளநெருக்கடி திணிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வாதாரங்களும் வாழிடங்களும் சட்டங்களின் பெயரால், பெருந்திட்டங்களின் பெயரால் பறித்துக்கொள்ளப்படுகின்றன. முரண்பட்ட தேவைகளுக்கு இடையேயான இந்த மோதல், பழங்குடி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் நெருக்கடி மட்டுமல்ல, இயற்கைக்கு எதிரான நெருக்கடியும்கூட.

கடலும் மீனவர்களும் தாய் - பிள்ளை உறவு பேணி வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையில் சச்சரவுகள் நேர்ந்தாலும் காலப்போக்கில் சீராகிவிடும். ஆனால் வளர்ச்சியின் பெயரால் `உருவாக்கப்படும்’ நெருக்கடிகள்தான் இயற்கையின் மீதும் திணை மண்ணின் மீதும் ஆறாத வடுக்களை உருவாக்கிவிடுகின்றன.

ஏன் இந்தப் பெருங்குரல்?

பழங்குடி மக்களை அடையாளம் காணும் கூறுகளாக மைய அரசு பட்டியலிட்டிருக்கும் குணக்கூறுகளில் ஒன்று - பொது இடங்களில் அவர்கள் பெருங்குரலெடுத்துப் பேசுவார்கள் என்பது. காட்டிலும் கடலிலும் குரல்தான் மொழி. ஏ.சி. அறைகளில் நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பைப்போல, கடற் பரப்பிலிருக்கும் ஒரு கடலோடியால் தகவல் பரிமாறிக்கொள்ள முடியாது. அலையைக் கடக்கக் கட்டுமரத்தில் போராடும் கடலோடியை உற்சாகப்படுத்தும் பொருட்டு, கரையில் இருப்பவர்கள் கூக்குரலிடுவது வழக்கம். பகல் வெயிலில் கரைமடிவலை இழுப்பவர்கள் அலுப்புத் தட்டாமலிருக்க அம்பாப் பாடல்களை உரக்கப் பாடுவார்கள்.

உட்கடலில் காற்றின் திசைக்கு எதிராகக் கட்டுமரத்தில் இருந்தவாறு தொலைவிலிருக்கும் மற்றொரு கட்டுமரக்காரனுடன் தொடர்புகொள்வதற்கு உரத்த குரல் வேண்டும். `வா’, `போ’, `ஒரு புறமாக விலகிப் போ’ என்பது போன்ற குறிப்பிட்ட செய்தியைத் துணியையோ துடுப்பையோ அசைத்து அல்லது கையால் சைகை செய்து தெரிவிக்க முடியும். அதுவும்கூடப் பகல் பொழுதில் மட்டுமே சாத்தியம். கடைமரத்தில் இருந்தவாறு சக மீனவர்களுக்குக் குரலால்தான் உற்சாகமூட்ட முடியும். கடற்கரையில் சாதுவான ஆண்மகனை, கடல் புகுந்து மீன்பிடிக்கத் திராணியற்றவனை பொதுவாக ‘ஊமையன்' என்பார்கள். பெருங்குரலும் அவ்வப்போது வெளிப்படும் வசைமொழியும் மண் சார்ந்த எல்லா உடலுழைப்புச் சமூகங்களின் கூறுகள்.

அதெல்லாம் இருக்கட்டும், களத்தில் பெருங்குரலில் பேசும் இந்த அடித்தள மக்களுக்குப் பொதுவெளியில் குரல் இருக்கிறதா என்ன?

சொல் புதிது

வேளா ஏறப்பிடிப்பு - கரைமடிவலையில் பெருவாரியான வேளா மீன் அறுவடை.

பாடு - வலை/மடிவலை இயக்குதல்

நல்ல பாடு - நிரம்ப அறுவடை.

அம்பாப் பாடல் - கரைமடிவலை இயக்கும்போது கடலோடிகள் பாடும் பாடல்.

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in