Published : 01 Apr 2017 10:25 am

Updated : 16 Jun 2017 14:11 pm

 

Published : 01 Apr 2017 10:25 AM
Last Updated : 16 Jun 2017 02:11 PM

எதை எடுத்தாலும் ரூ. 30 - மென்பொருள் துறையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு...

30

உயர் சம்பளப் பணிகளை உதறிவிட்டு, மனதுக்குப் பிடித்த வேளாண்மையில் கால் பதிக்கும் இளைஞர்கள் இன்றைக்கு அதிகரித்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர் பெரம்பலூரைச் சேர்ந்த விக்ரம். கை நிறைய வருமானம் தந்த மென்பொருள் பணியை உதறிவிட்டு, தந்தை உதவியுடன் இயற்கை வேளாண்மையில் இவர் சாதித்து வருகிறார்.

பணியை உதறிய மகன்


எம்.எஸ்சி., எம்.பி.ஏ படித்துவிட்டுச் சுமார் 13 வருடங்கள் பெங்களூருவில் மென்பொருள் துறையில் சொகுசாக வாழ்ந்தவர் விக்ரம். இவரது மனைவியும் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர். வீடு, வாகனம், குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி என அங்கே எந்தக் குறையுமில்லை. இருந்தபோதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று தனது வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்க்கச் சொந்த ஊருக்குத் திரும்பினார் விக்ரம். பையனுக்கு என்னாச்சு என்று உடன் பணியாற்றியவர்களும் உறவினர்களும் அங்கலாய்க்க, விக்ரமுக்கு அவரது தந்தை கண்ணன் துணை நின்றார்.

சூடுபட்ட தந்தை

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் பச்சைமலை அடிவாரத்தில் பசுமையாக வரவேற்கிறது இவர்களுடைய வாகைப் பண்ணை. காவல்துறை உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்ற தந்தை கண்ணனுடன் அங்கே உற்சாகமாகப் பண்ணைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் விக்ரம். கண்ணன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “எங்களது ஏழு ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு விட்டு, பெயரளவிலே விவசாயம் பார்த்துவந்தோம்.

நான் ஓய்வு பெற்ற சூட்டில் சில லட்சங்கள் செலவழித்துக் காட்டைத் திருத்தினேன். கால்நடைகள், கோழிகள் என ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த விவசாயத்தில் போதிய புரிதல் இல்லாததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. உடல்நலமும் குன்ற, விவசாயம் நமக்குச் சரிப்படாது என்று ஒதுங்கினேன். எனக்கு இரண்டு பசங்க. இருவரும் நன்றாகப் படித்துப் பெருநகரங்களில் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களிடம் போய் ஆறுதலுக்குத் தங்கியிருந்தேன். அப்போதுதான் என் மூத்த மகன் விக்ரமிடம் வேளாண் தொழில் ஆவல் இருப்பதைக் கண்டுகொண்டேன்” என்கிறார்.

மண்டிய எரிச்சல்

அடுத்துப் பேச ஆரம்பித்த விக்ரம், “பெங்களூருவில் பணியாற்றும்போது நண்பர்களிடம் அவ்வப்போது ‘எனக்கு இந்த வேலை இல்லாமல் போனாலும் பரவாயில்லை, கிராமத்தில் பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்துப் பிழைத்துக்கொள்வேன்’ என்று விளையாட்டுக்குச் சொல்லுவேன். ஒரு கட்டத்தில் நகரத்தின் சுற்றுச்சூழல் கேடும், மனதுக்குத் திருப்தியில்லாத எந்திரத்தனமான வேலையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

குழந்தைகளுக்கான பால், பச்சைக் கீரை ஆகியவற்றில்கூட எச்சமாக இருந்த பூச்சிக்கொல்லியின் வாடை வெறுப்பூட்டியது. ஓடியோடி லட்சமாய்ச் சம்பாதிப்பதெல்லாம் பின்னர் மருத்துவமனைக்கு அழுவதற்குத்தானா என்ற எரிச்சல் மண்டியது. எனது ஏக்கத்தை மனைவி புரிந்துகொள்ள, நான் மட்டும் வேலையை உதறிவிட்டு விவசாயக் கனவுகளுடன் பெரம்பலூர் திரும்பினேன்,” என்கிறார்.

இயற்கைக்குக் கீழ்படிதல்

விவசாயத்திலும் முழுதும் இயற்கை வழியே எனத் தீர்மானமாக இருந்தார் விக்ரம். இதற்காகப் பணியில் இருந்தபோதே, இணையம் உதவியுடன் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ மசானபு ஃபுகோகோவில் தொடங்கி நம்மாழ்வார்வரை வாசித்தார். ஊர் திரும்பிய பிறகு தந்தையுடன் சேர்ந்து, நம்மாழ்வாரின் சீடர்கள் பலரது பண்ணைகளுக்குச் சென்று செயல்முறைகளைக் கண்டு தெளிந்தார். பின்னர் தங்களது வயலில் பகுதி பகுதியாகப் பரிசோதனை முறையில் சாகுபடியை ஆரம்பித்தார்.

இன்று நஞ்சை, புஞ்சை பயிர் ரகங்கள், மரங்கள், கொடி செடிகளில் காய் ரகங்கள், நாட்டு ரக ஆடு மாடு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மரச்செக்கு எனப் படிப்படியாய் வளர்ந்திருக்கிறார். தந்தை பெற்ற கசப்பான படிப்பினைகள், துடிப்பாக விக்ரம் கற்றுக்கொண்டது எல்லாம் சேர்ந்த கலவையாக இவர்களுடைய இயற்கை வேளாண் முயற்சிகள் தனித்துவமாய் அமைந்திருக்கின்றன.

படிப்படியாக…

“வயலில் மூடாக்கு போடுவதால் களைகள் அதிகமில்லை. மீறி முளைக்கும் களைகள் பயிரின் உயரத்தைத் தாண்டினால் மட்டுமே அகற்றுவோம். நான்கு நாட்டு மாடுகள் உதவியுடன் பஞ்சகவ்யத்தை நாங்களே தயாரித்துக்கொள்கிறோம். அவ்வப்போது மீன்கழிவை வாங்கிவந்து மீன்பாகுக் கரைசலையும் தயாரிப்போம். நாங்கள் வளர்க்கும் நாட்டு ரக ஆடுகளும் கோழிகளும் எருவுக்கு உதவுகின்றன. இவை தவிர வயலிலேயே மண்புழு உரம், அசோலா தயாரிப்பு ஆகியவையும் உண்டு. 60 தென்னை மரங்கள், 20 மா - கொய்யா மரங்கள் உண்டு. மாந்தோட்டமே கோழி வளர்ப்பிடமாக உள்ளது.

ஆங்காங்கே தேக்கு, சந்தனம் மரங்களும் இருக்கின்றன. வயலைச் சுற்றி உயிர்வேலி போட்டிருக்கிறோம். சுழற்சி முறையில் பண்ணையில் பெருகும் கழிவு, அங்கேயே உரமாக மாறுகிறது. முதலீடாகப் பெரும் செலவானதைத் தவிர்த்து, தற்போது மேல் செலவாக ஆள் கூலியைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை” என்று விளக்கியபடி வயல்வெளியைச் சுற்றிக் காட்டுகிறார் விக்ரம்.

ஒரே விலை

வாகைப் பண்ணையில் உற்பத்தியாகும் விளைபொருட்களைப் பகுதி மக்கள் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள். அனைத்துக் காய்கறிகளுக்கும் இடுபொருள் செலவு ஒன்றே என்பதால், அவை அனைத்தையுமே தலா கிலோ ரூ. 30 என்ற விலையில் விற்கிறார்கள். வெளிச் சந்தையில் எத்தனை விலைக்கு விற்றாலும், இவர்கள் விலையை ஏற்றுவதில்லை. சாகுபடி அதிகரிக்கும்போது சென்னை போன்ற மாநகர இயற்கை விளைபொருட்களை விற்கும் சந்தைகளுக்கு, அதே விலைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இவை தவிர்த்துப் பக்கத்துக் கிராமங்களின் வாரச் சந்தைகளில் கண்ணன் நேரடியாகக் காய்கறிகளைக் கடை பரப்புவதுடன், அங்கேயே இயற்கை வழி வேளாண்மை பிரசாரத்தில் ஈடுபடவும் செய்கிறார். பண்ணையில் விளைந்த வேர்க்கடலை, எள், தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு என அண்மையில் மரச்செக்கு அமைத்ததில், அதற்கெனவும் தனி வாடிக்கையாளர்கள் தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீரிழிவிலிருந்து விடுதலை

“இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, இயற்கை உணவுப் பொருட்கள், சீரான உடலுழைப்பு ஆகியவற்றின் மூலமாக 15 ஆண்டுகளாக என்னை இம்சித்த நீரிழிவு நோயிலிருந்து இப்போது முழுவதுமாக விடுபட்டிருக்கிறேன். இதை நான் போகுமிடமெல்லாம் உற்சாகமாக மற்றவர்களிடமும் சொல்லிவருகிறேன். என் மகன் விக்ரமின் வயதையொத்த இளைஞர்கள் விசாரித்து வந்து, எங்கள் வயலைப் பார்த்துச் செல்கிறார்கள். அவர்களிடமும் நாங்கள் இதையே சொல்கிறோம், ‘இயற்கை வேளாண்மை என்பது வருமானத்துக்கான வேலை அல்ல; அது அனைத்தும் அடங்கிய முழுமையான வாழ்வியல் முறை!” தாங்கள் கடந்து வந்த அனுபவத்தைத் தந்தை கூற, அதை ஆமோதித்துத் தலையசைக்கிறார் விக்ரம்.

விவசாயி விக்ரம், தொடர்புக்கு: 98860 32482


மென்பொருள் வேலைஇயற்கை வேளாண்மைஇளைஞர்கள் விவசாயம்விவசாய இளைஞர்கள்அதிக சம்பளம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author