

இயற்கையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாலே நாம் பிரச்சினையின்றி இயல்பாக வாழ முடியும். நம் முன்னோர்கள், இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் வாழ்ந்தனர். நவீன காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் பல தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதற்கு வசதியாகச் சூரிய சக்தியால் இயங்கும் வீட்டைப் புதுச்சேரியில் வடிவமைத்துள்ளனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் இயங்கும் கெமின் நிறுவனம் அனல் மின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்குத் தேவையான சிறிய கருவிகளைத் தயாரித்து வருகிறது. தற்போது எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் முற்றிலும் சூரியசக்தியால் இயங்கும் வீடுகளை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
சோலார் வீடு தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் ரங்கராஜ் கூறியதாவது:
இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட நம்மால் வாழ முடியாது. சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள், விற்பனை கூடங்கள், சிறு உணவகங்கள், ஆய்வுக்கூடங்கள், ஆய்வகங்கள், பாதுகாப்பாளர் அறைகள், தகவல் மையங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இதை மக்கள் பார்வைக்கு வைத்தோம். இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். முழுக்கச் முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் வகையில் இதை வடிவ மைத்துள்ளோம். இதை ஸ்மார்ட் பில்டிங் என்பார்கள்.
அனைவரும் பயன்படுத்தும் வீடு போன்ற சோலார் வீடுகளை வடிவமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில், 400 சதுர அடியில் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையலறை என வழக்கமான வீட்டு மாடலில் சூரிய சக்தியால் இயங்கும் வீட்டை உருவாக்கி வருகிறோம். அத்துடன் சூரிய சக்தி மூலமே ஏ.சி., கணினி, தொலைக்காட்சி, வீட்டு உபயோகப் பொருள்களை இயங்க வைக்க முடியும். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 6 லட்சம். அத்துடன் சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களைப் பொருத்த ரூ. 2 லட்சம் ஆகும். சூரிய சக்திக்கான சாதனங்களுக்கு மட்டும் மத்திய அரசின் மானியம் 30 சதவீதம் கிடைக்கும். அதாவது ரூ. 50 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
புதிய வீட்டின் கட்டுமானப் பணி, சூரிய சக்தி கலங்களைப் பொருத்தும் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வீட்டை விரும்பிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம், எடுத்தும் செல்லலாம்.
மின் விநியோகம் இல்லாவிட்டாலும், பயன் தரும் சிறிய காற்றாலையையும் தயாரித்துத் தருகிறோம். அதையும் இந்த வீடுகளில் பயன்படுத்தலாம்.
ஏற்கெனவே, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளிலும் சூரியசக்திக் கலங்களைப் பொருத்தலாம். 200 சதுர அடி இருந்தால், 2,000 வாட் வரை சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். அடுத்தகட்டமாக நடுத்தர, ஏழை மக்களுக்கும் கட்டுப்படியாகும்
செலவில் சோலார் வீடுகளை உருவாக்க உள்ளோம்.