பாம்பு பறப்பதன் ரகசியம்

பாம்பு பறப்பதன் ரகசியம்
Updated on
2 min read

ஊர்வனவற்றில் மனிதன் அதிகம் அச்சப்படுவது பாம்புக்குத்தான். எனினும், இயற்கையின் படைப்பில் அந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வு முறையைத்தான் பின்பற்றுகின்றனவே தவிர மனிதனை இம்சிப்பதற்காக அவை படைக்கப்படவில்லை.

அவற்றில் தனித்துவம் வாய்ந்தவை பறக்கும் பாம்பு கள். பெயர்தான் இப்படியே தவிர, உண்மையில் இப்பாம்புகள் பறப்பதில்லை. பார்ப்பதற்கு பறப்பது போல இருந்தாலும், காற்றில் சறுக்கிச் செல்கின்றன. உயரமான மரக் கிளைகளி லிருந்து உயரம் குறை வான மரக் கிளை களுக்குத் தாவிச்செல்லும் தன்மை கொண்டவை இப்பாம்புகள். இரைகளைப் பிடிப்பதற்காகவும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், இப்படி சறுக்கிச் செல்கின்றன.

கிரைசோபெலியா (Chrysopelea) என்ற பேரி னத்தைச் சேர்ந்த இந்தப் பாம்புகளில் ஐந்து வகைகள் உள்ளன. தெற்காசிய வெப்பமண்டல மழைக் காடு களில் வசிக்கும் இப்பாம்புகள் 2 அடி முதல் 4 அடி நீளம் வளரக்கூடியவை. பல்லிகள், பறவைகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும்.

எப்படிப் பறக்கிறது?

இந்த அரிய உயிரினம் பற்றியும் அவை பறந்து செல்லும்விதம் பற்றியும் உயிரியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். காற்றில் சுமார் 100 அடி தூரம் வரை தனது உடலை நெளித்துப் பேலன்ஸ் செய்தபடி, பாம்பு பறந்து செல்வது எப்படி என்ற கேள்வி பல காலமாக இருந்துவருகிறது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வெர்ஜீனியா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் அண்டு ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேக் ஸோச்சா தன் குழுவினருடன் இணைந்து பாம்பு பறக்கும் ரகசியம் பற்றி ஆய்வுசெய்தார். 3டி பிரிண்டர் உதவியுடன் இந்தப் பாம்பின் உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றம் போன்ற ஒரு பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கப்பட்டது. நீரோட்டம் உள்ள ஒரு தொட்டியில் அதை வைத்தபோது நீரின் ஓட்டத்துக்கு ஏற்ப அப்பொருள் விரிந்தும் சுருங்கியும் மாற்றமடைந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அதன்படி, இவ்வகை பாம்புகள் தங்கள் விலா எலும்புகளைக் குறுக்கியும் விரித்தும் உடலைப் பறப்பதற்கு ஏற்ற வகையில் அதிவேகமாக மாற்றிக் கொள்கின்றன என்றும் இந்த விசேஷப் பண்பால் அவற்றால் காற்றில் சறுக்கிச் செல்ல முடிகிறது என்றும் ஜேக் ஸோச்சா கூறுகிறார்.

என்ன பயன்?

பறவைகள், விலங்குகளின் தனித்தன்மையை ஆய்வு செய்வதில் கிடைக்கும் இன்னொரு பலன் அதே போன்ற சிறப்புத் தன்மையை மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்ற இயந்திரங்கள், கருவிகளை உருவாக்க உதவியாக இருக்கும் என்பதுதான். விமானம் முதல் நீர்மூழ்கி கப்பல்வரை இதற்கு உதாரணம் சொல்ல முடியும். பாம்பு பறக்கும் ரகசியத்தைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் இயற்கையின் இந்த அற்புதத் தொழில்நுட்பத்தை, நவீனச் சாதனங்களில் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் சரி, இந்தப் பாம்பு நம்மைக் கடிக்க வேண்டாம். ஆனால், தலைக்கு மேலே பாம்பு பறந்து வருவதைப் பார்க்க நேர்ந்தால் நம் கதி என்னாவது? “இப்பாம்புகளின் விஷம் மனிதனைக் கொல்லும் அளவு ஆபத்தானது அல்ல. தவிர நீங்கள் அதன் அருகில் சென்றால், உங்களுக்குப் பயந்து அது சறுக்கிச் செல்லுமே தவிர, உங்களை நோக்கிச் சறுக்கி வராது” என்று புன்னகையுடன் கூறுகிறார் ஸோச்சா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in