கறுப்பு வைரத்தின் உண்மை முகம்

கறுப்பு வைரத்தின் உண்மை முகம்
Updated on
2 min read

இந்தியாவின் மின் தயாரிப்பில் 66 சதவீதத்துக்குக் காரணமாக இருப்பது நிலக்கரி. ஆனால், மின்சாரத்தைச் சந்தோஷமாகப் பயன்படுத்தும் நாம், அதற்குப் பின்னால் இருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை, அதனால் நமக்கு ஏற்படும் உடல் கேடுகளைப் பற்றி உண்மையிலேயே அறிந்திருக்கிறோமா என்ற சிந்தனையைத் தூண்டியது சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கம்.

நிலக்கரி என்றாலே நம்மில் பல பேருக்குப் பாடப் புத்தகத்தில் படித்த கார்பன் உடனான ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜனின் கலவையே சட்டென்று ஞாபகம் வரும். நாம் பார்த்திராத இன்னுமொரு ஆபத்தான முகமும் நிலக்கரிக்கு உண்டென்பது, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கோடி ஆண்டுகளாகப் பூமியின் அடியில் சப்தமின்றி உறங்கிக் கிடந்த நிலக்கரியைச் சுரங்கங்கள் அமைத்துச் சுரண்டி எடுக்கும் கலாசாரம் கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. தொழில்புரட்சிக்குப் பின்னர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகம் முழுவதும் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி தீவிரமடைந்தது.

ஆசியாவிலேயே பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாரியா வில் உள்ளது. பசியும் பட்டினியும் வறுமையும் நிறைந்த இந்தப் பகுதி, நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கு முன்பு, பழங்குடியினர் வாழ்ந்த அழகிய அடர்ந்த காட்டுப் பகுதி யாக இருந்தது என்பது நம்ப முடியாத உண்மை! இன்று கரும் பாலைவனமாகக் காட்சியளிக்கும் ஜாரியா நிலக்கரி சுரங்கப் பகுதியில் இதுவரை எழுபத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துகள் நடந்திருக்கின்றன. இன்னும் நிலக்கரி கனல்களைக் கக்கியபடியே எரிந்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநாடு

சென்னையில் சமீபத்தில் நிலக்கரி அனல் மின்நிலையங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி நடைபெற்ற மாநாட்டில் பேசிய மின் துறை முன்னாள் செயலர் இ.ஏ.எஸ். சர்மாவின் பேச்சு, அனல் மின் நிலையங்கள் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் எச்சரிக்கையாக அமைந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிங்ரௌலி அனல் மின் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் மக்களின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். இந்தியாவில் அனல் மின்நிலையம் இருக்கும் ஆறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த கிராமப் பிரதிநிதிகள், அனல் மின் நிலையங்களால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பட்டியலிட்டனர். புகையில் இருந்து புற்றுநோய் வரையிலுமான அனைத்துப் பிரச்சினைகளும் இதில் அடங்கியிருந்தன.

அனல் மின்நிலையம் அமைப்பவர்கள், வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற வாக்குறுதி களுடன்தான் வருவார்கள். ஆனால், உங்கள் வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்படுவதுடன், வறுமையே பின்விளைவாகக் கிடைக்க வாய்ப்பு அதிகம். முதல்வரோ, அதிகாரி களோ, ஏன் நீதிமன்றங்கள்கூட உங்களைக் கைவிட்டுவிடும் என்று பேசிய பரத் பட்டேலின் பேச்சில், விரக்தி மட்டுமே மிஞ்சியிருந்தது.

நம் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் நிலக்கரிச் சுரங்கங்களும் அனல் மின் நிலையங்களும் எத்தனை ஆபத்தானவை என்பதை அறிந்திருந்தும், நாம் அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எட்டாத தூரத்தில் எவரோ பாதிக்கப்பட்டால் நமக்கென்ன என்ற மனப்பாங்கே நம் அலட்சியத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கக்கூடும்.

புதிய ஆபத்து

இதோ தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் வரவிருக்கின்றன. சென்னைக்கு அருகில் உள்ள கடலோரக் கிராமமான செய்யூரில் பிரம்மாண்ட அனல் மின்நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாளை சிங்ரௌலிக்கும் ஜாரியாவிற்கும் ஏற்பட்ட நிலைமைதான் நமக்கும் என்ற எச்சரிக்கை கருத்தரங்கில் விடுக்கப்பட்டது.

ஒரு பக்கம் கடலும் மறு பக்கம் பச்சை பசேலென்ற விவசாய நிலங்களும் நடுவில் நடைபெறும் விவசாயத்தை உப்புக் காற்று பாதிக்காமல் தடுத்து நிறுத்த இயற்கையால் உருவாக்கப்பட்ட மணல் மேடுகளும் பார்ப்பதற்கே அற்புதமான சூழல். ஆனால், இதெல்லாம் நிர்மூலமாகி, அந்த நிலப்பரப்பில்தான் 4,000 மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் அல்ட்ரா அனல் மின்நிலையம் வரவிருக்கிறது. இத்தனை செழுமையான இடத்தில் நிலக்கரியைக் கொட்டப்போவது அரசாங்கத்தின் தவறு மட்டுமா? இல்லை அந்த நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தி, பின்விளைவுகளை வரவேற்கும் நமது தவறா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in