காகித பென்சிலால் மரங்களைக் காக்கும் மாணவர்கள்

காகித பென்சிலால் மரங்களைக் காக்கும் மாணவர்கள்
Updated on
1 min read

விண்வெளிக்கு எடுத்துச் செல்லும்போது, அங்கே புவியீர்ப்பு விசை இல்லாததால் மை பேனாவைப் பயன்படுத்த முடியாததால், அமெரிக்கர்கள் பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தனர். ஆனால், ரஷ்யர்கள் அப்படி எதையும் கண்டுபிடிக்காமலேயே எழுதினார்கள். அவர்கள் பயன்படுத்தியது பென்சில்.

கையில் பிடித்துக்கொண்டு எழுதுவதற்கு வசதியாகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் எழுதுபொருள் பென்சில். இதற்காக உலகெங்கும் ஆண்டுதோறும் 60 ஆயிரம் மரங்கள் வெட்டப்படுகின்றன. இப்படி மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, பழைய காகிதத்தைக் கொண்டு பென்சில் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்திருக்கிறார்கள் மதுரை பள்ளி மாணவர்கள்.

காகிதப் பென்சில்

மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பி.நரசிம்ஹன், ஆர்.தீபு விஜய் காந்தி, ஏ.ஜவஹர்லால் நேரு ஆகியோர்தான் அந்த மூவரும்.

பென்சில் தயாரிப்புக்கு மரம் பயன்படுத்தப் படுகிறது. காடழிப்பைக் குறைக்க வேண்டும் என்றால், பென்சில் தயாரிப்புக்கும் மாற்று வழி கண்டறிந்தாக வேண்டும். பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள எழுதுபொருளான கிராபைட் குச்சியின் மீது பழைய காகிதத்தைக் கெட்டியாகச் சுருட்டி, நேர்த்தி யாக ஒட்டி இந்தப் பென்சிலை இவர்கள் தயாரித்திருக்கிறார்கள். இது மரத்தைப் போலவே கெட்டியாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது.

சூழல் நண்பன்

மரங்களை வெட்டுவதைக் குறைக்கக் காகிதங்களை மறுசுழற்சி செய்யச் சொல்கிறார்கள். மறுசுழற்சிக்கும் வேதிப்பொருட்கள், எரிசக்தி போன்ற தேவைகள் இருக்கலாம். அதனால், மறுசுழற்சியைவிட மறுபயன்பாடே சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். “அதனால், படித்துவிட்டுத் தூக்கி வீசுகிற பழைய பத்திரிகைகளை நாங்கள் பென்சில் தயாரிப்புக்குப் பயன்படுத்தி இருக்கிறோம். கொஞ்சம் கவனமாக உருட்டினால், இந்தப் பென்சிலையும், மர பென்சிலைப் போல ஷார்ப்னர் கொண்டு சீவ முடியும். பின்பக்கம் அழிக்கும் ரப்பரையும் பொருத்திக் கொள்ள முடியும்” என்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு இவர்களுடைய ஆசிரியை கௌரியும் உதவியிருக்கிறார். இப்போது சுற்றுச்சூழலுக்கு நட்பான (Eco friendly) பொருட்கள் பிரபலமாகி வருகின்றன. இந்த பென்சில்களை, இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் தயாரிக்கலாம். பென்சில் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எச்.பி. நிறுவனத்தை இதற்காக அணுக உள்ளோம் என்கின்றனர். காகிதத்தால் தயாரிக்கப்பட்ட ‘ரீபிள் பேனா’க்களை அறிமுகப்படுத்தும் திட்டமும் இவர்களிடம் உள்ளது.

மேலும் திட்டங்கள்

தாங்கள் தயாரித்த காகித பென்சில்களை மதுரை மாவட்ட வன அலுவலர் நிஹர் ரஞ்சனிடம் இந்த மாணவர்கள் காட்டி யுள்ளனர். வியந்து போய் மாணவர்களை அவர் பாராட்டி இருக்கிறார்.

நிலத்தைப் பாழ்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை எரித்துத் தூவுவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பது, நெய்வேலியில் காற்றில் மிதக்கும் கார்பன் துகள்களை எளிமையான முறையில் பிரித்தெடுத்து வருமானம் ஈட்டுவது போன்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களையும் இந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in