

கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கடல் நீலமும் வனத்தின் பச்சையும். ஓங்கி உயர்ந்த மழைக்காட்டு மரங்கள், முட்டைகள் இட்டுத் திரும்பும் கடலாமைகள், நீரில் மிதக்கும் சொறி (ஜெல்லி) மீன்கள், பகலில் சுடும் வெம்மை, இரவில் நடுக்கும் குளிர் என அந்தமான் தீவு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும்.
அந்த அனுபவத்தைக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்தவர் பங்கஜ் சேக்ஷரியா. சூழலியலாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பல முகங்களைக் கொண்டவர். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான ‘கல்பவிருக்ஷ்' அமைப்பில் இணைந்து பணியாற்றும் இவர், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஜராவா பூர்வகுடி மக்களைப் பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். ‘தி லாஸ்ட் வேவ்' என்ற அவருடைய நாவல், அந்தமான் நிலப்பரப்பை முழுமையாக அறிமுகம் செய்யும் முதல் ஆங்கில நாவல்.
கடந்த இருபது ஆண்டுகளாகத் தன் கேமராவில் பதிவு செய்த அந்தமான் நிகோபார் தீவுகளின் நிலப்பரப்பு, வாழ்க்கை, இயற்கை வளங்களை ‘ஐலேண்ட் வேர்ல்ட்ஸ்' எனும் தலைப்பில் பிப்ரவரி மாதம் புனேயில் காட்சிக்கு வைத்திருந்தார். அந்த ஒளிப்படக் கண்காட்சி தற்போது சென்னைக்கு வந்திருக்கிறது.
அந்தமான் அனுபவத்தை நீங்களும் பெற:
தேதி: செப். 3 முதல் 6-ம் தேதிவரை
(காலை 11 மணி முதல் மாலை 7.30 மணிவரை)
இடம்: தி ஃபால்லி, 'அமேதிஸ்ட்', ராயப்பேட்டை, சென்னை